×

ஐஎஸ்எல் கால்பந்து தொடர்: முன்னாள் சாம்பியன்கள் சென்னை-கொல்கத்தா பலப்பரீட்சை

சென்னை: ஐஎஸ்எல் கால்பந்து தொடரில், சென்னையில் இன்று நடைபெறும் போட்டியில் முன்னாள் சாம்பியன்களான சென்னையின் எப்சி - அத்லெடிகோ டி கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. ஐஎஸ்எல் தொடரின் முதல் 5 சீசனில் சென்னை, கொல்கத்தா அணிகள் தலா 2 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளன. நடப்பு சீசனில் சென்னை அணி இதுவரை 2 போட்டிகளில் விளையாடி உள்ளது. முதல் லீக் ஆட்டத்தில் 0-3 என்ற கோல் கணக்கில் கோவாவிடம் தோற்ற நிலையில், உள்ளூரில் விளையாடிய 2வது போட்டியில் 0-0 என மும்பை அணியுடன் டிரா செய்தது. முதல் போட்டியை விட, 2வது போட்டியில் சென்னை வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். பந்து மும்பையிடம் அதிகம் இருந்தாலும் கோல் போடும் முயற்சியில் சென்னையே முதலிடத்தில் இருந்தது. டிரா செய்து புள்ளிக் கணக்கை தொடங்கியதால் உற்சாகம் அடைந்துள்ள சென்னை அணி, இன்று கொல்கத்தாவுடன் நடைபெறும் போட்டியில் வெற்றி பெற அதிக முனைப்புக் காட்டும்.  முதல் போட்டியில் சொதப்பினாலும் 2வது போட்டியில் கோல் கீப்பர் விஷால் கெய்த் கோல் விழாமல் பார்த்துக் கொண்டார்.

கேப்டன் லுசியன் கோயன், எலி சபா, அனிரூத் தபா, ரபேல் கிரிவெல்லரோ, ஸ்கெம்ப்ரி, நெரிஜிஸ் வால்ஸ்கிஸ்  மற்றும் உள்ளூர் வீரர்கள் தனபால் கணேஷ், எட்வின் வென்ஸ்பால் ஆகியோர் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளனர். இன்றும் அது தொடர்ந்தால் சென்னைக்கு முதல் வெற்றி கிடைக்க வாய்ப்பு உள்ளது. கொல்கத்தா அணி முதல் போட்டியில் கேரளா பிளேஸ்டர்ஸ் எப்சியிடம் 1-2 என்ற கோல் கணக்கில் போராடி தோற்றது. 2வது ஆட்டத்தில் சுதாரித்த கொல்கத்தா 5-0 என்ற கோல் கணக்கில் புதிய வரவான ஐதராபாத் எப்சி அணியை பந்தாடியது. அதே உத்வேகத்துடன்  இன்று சென்னையை எதிர்கொள்கிறது. பிரபிர் தாஸ், டேவிட் வில்லியம்ஸ், அகஸ்டின் இனிகுஷ்,  ஜாவிர் ஹெர்னன்டெஸ், ராய் கிருஷ்ணா, எடுரோடோ மார்டின், தமிழக வீரர் மைக்கேல் சூசைராஜ் ஆகியோர் களத்தில் கவனிக்கத்தக்க வீரர்களாக இருக்கின்றனர். எனவே முன்னாள் சாம்பியின்கள் களம் காணும் இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

எச்சரிக்கையுடன் எதிர்கொள்வோம்... கிரிகோரி உற்சாகம்

கொல்கத்தா அணியுடனான போட்டி குறித்து சென்னையின் எப்சி  தலைமை பயிற்சியாளர் ஜான் கிரிகோரி கூறியதாவது: மும்பையுடனான ஆட்டத்தில் நாங்கள் சிறப்பாக விளையாடியதால் மகிழ்ச்சி  அடைகிறேன். எங்கள் வீரர்கள் 18 முறை கோலை நோக்கி பந்தை அடித்தனர். ஆனால் மும்பைக்கு 2 வாய்ப்புகள்தான் அளித்தோம். அந்தளவுக்கு தற்காப்பு ஆட்டக்கார்கள் சிறப்பாக செயல்பட்டனர். கடந்த ஆண்டு வாய்ப்புகளை உருவாக்க முடியவில்லை. இந்த ஆண்டு வாய்ப்புகளை உருவாக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளோம். அதையே வரும் போட்டிகளில் தொடர நினைக்கிறோம். கொல்கத்தா அணி போட்டியை  நன்றாக  தொடங்குவதை கடந்த 2 ஆட்டங்களிலும் பார்த்தோம்.  அதிலும் ஐதராபாத்துக்கு எதிரான போட்டியில் கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் கோலாக்கினர்.   ஏ-லீக் வீரர்களான டேவிட் வில்லியம்ஸ், ஜாவிர் ஹெர்னன்டெஸ், ராய் கிருஷ்ணாவை சமாளிப்பதில் அதிக கவனம் செலுத்துவோம். எச்சரிக்கையுடன் எதிர்கொள்வதுடன், தாக்குதல் ஆட்டத்திலும் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை வசப்படுத்துவோம். இவ்வாறு கிரிகோரி கூறினார். பேட்டியின் போது அணியின் கோல்கீப்பர் விஷால் கெய்த் உடனிருந்தார்.

Tags : champions ,Kolkata ,ISL Football ,Chennai , ISL Football Series, Former Champion, Chennai, Kolkata
× RELATED சில்லி பாயின்ட்…