×

நாகூர் கடலில் மூழ்கி 4 பேர் பலி: கர்நாடகாவை சேர்ந்தவர்கள்

கீழ்வேளூர்: கர்நாடக மாநிலம் பெங்களூரு பொம்மனஹள்ளி மில்சந்திரா  நகரை சேர்ந்தவர் செய்யதுஇம்திரியாஸ்பாட்சா (50). இவர் தனது மனைவி ரியானா (40), மகன் செய்யதுஅப்பாஸ் (18), மகள் சானியா(16), உறவினர் நிஜாம் (20) ஆகியோருடன் சில தினங்களுக்கு முன் நாகை மாவட்டம் நாகூர் ஆண்டவர்  தர்காவிற்கு சுற்றுலா வந்திருந்தார்.நாகூரில் தனியார் விடுதியில் தங்கி  இருந்த இவர்கள், நேற்று மாலை நாகூர் தர்காவில் பிரார்த்தனை செய்துவிட்டு,  நாகூர் சில்லடி  கடலில் குளித்தனர். சிறிது நேரம் குளித்து விட்டு ரியானா மட்டும் கரை ஏறிவிட்டார். மீதமுள்ள 4 பேரும் கடலில் தொடர்ந்து  குளித்து கொண்டிருந்தனர். அப்போது கடல் அலையில் 4 பேரும் சிக்கினர்.  கரையில் நின்ற இளைஞர்கள், 4 பேரையும் காப்பாற்ற முயற்சித்தனர். இதில்  சானியா மற்றும் செய்யதுஅப்பாஸ் ஆகியோரை உயிருடன் மீட்டனர்.

மேலும்  கடல் அலையில் சிக்கிய செய்யதுஇம்திரியாஸ் பாட்ஷா, நிஜாம் ஆகிய இரண்டு பேரையும் சடலமாக மீட்டனர். இந்நிலையில் உயிருடன் கரைக்கு கொண்டு வரப்பட்ட சிறிது நேரத்தில் செய்யது செய்யது அப்பாஸ் இறந்தார். தகவல் அறிந்து சம்பவ  இடத்திற்கு வந்த கடலோர காவல் படையினர் 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி நாகூர்  போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து நாகூர் போலீசார் மூவரின்  உடல்களையும்  நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதேபோல  கர்நாடக மாநிலம் பெங்களூரு கோவிந்தபுரம் மெயின்ரோட்டை சேர்ந்தவர்  ரிவான்அகமத்(34). இவர் நேற்று குடும்பத்துடன் நாகூர் தர்காவிற்கு  வந்திருந்தார். இவர்கள் நேற்று காலை நாகூர் சில்லடி கடற்கரைக்கு குளிக்க  சென்றனர். அப்போது ரிவான்அகமத், அவரது மகன் ரியாஸ் (12) ஆகிய இருவரும்  கடலில் குளித்து கொண்டிருந்தபோது ரியாஸ் கடல் அலையில் சிக்கி மூழ்கினார்.  அப்போது கடற்கரையில் இருந்த சில இளைஞர்கள் ரியாசை இறந்த நிலையில் மீட்டனர்.  இரு சம்பவம் குறித்தும் நாகூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Nagore Sea ,Karnataka Four People Drowned ,Karnataka , Four people,drowned , Nagore Sea, Karnataka
× RELATED கர்நாடகா மாநில அதிமுக செயலாளர் எஸ்.டி.குமார் திடீர் ராஜினாமா..!!