×

துப்பாக்கி சூட்டில் தப்பிய 2 மாவோயிஸ்ட்களை பிடிக்க நீலகிரி, கோவையில் தீவிர தேடுதல் வேட்டை: தமிழக அதிரடிப்படை, வனத்துறை தீவிரம்

பாலக்காடு: கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி வனத்தில் கடந்த சில ஆண்டுகளாக மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் உள்ளது. அந்த வனப்பகுதியில் தண்டர்போல்ட் என்ற சிறப்பு அதிரடிப்படை போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். இந்நிலையில் அட்டப்பாடியில் இருந்து ஊட்டி வழித்தடத்தில் இருந்து 6 கி.மீ., உள் வனப்பகுதியான மேலே மஞ்சகண்டியூர் வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் முகாமிட்டுள்ளதாக கடந்த 4 நாட்களுக்கு முன்பு பாலக்காடு மாவட்ட எஸ்.பி.சிவவிக்ரமிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து தண்டர்போல்ட் அதிரடிப்படையினர் அப்பகுதியில் உள்ள வனப்பகுதியில் கடந்த 4 நாட்களாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.இதில், நேற்று அதிகாலை மாவோயிஸ்ட்கள் தங்கியிருந்த பகுதியை அதிரடிப்படையினர் சுற்றி வளைத்தனர். அங்கிருந்த 5 மாவோயிஸ்ட்கள் அதிரடிப்படையினரிடமிருந்து தப்பிக்க அதிரடிப்படையினரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். சுதாரித்து கொண்ட அதிரடிப்படையினர் மாவோயிஸ்ட்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர்.

இதில் 3 மாவோயிஸ்ட்கள் இறந்தனர். 2 பேர் அடர்ந்த வனப்பகுதிக்குள் தப்பி ஓடிவிட்டனர். துப்பாக்கி சூடு நடந்த இடத்திற்கு பாலக்காடு எஸ்பி சிவா விக்ரம் மற்றும் அட்டப்பாடி ஏஎஸ்பி ஹேமலதா ஆகியோர் விசாரணை நடத்தினர். அங்கு சுட்டுக்கொல்லப்பட்ட மாவோயிஸ்ட்களை அடையாளம் காணும் பணி நடந்தது. சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீமதி என்கிற இளம்பெண் மற்றும் கார்த்தி, சுரேஷ் ஆகிய இளைஞர்கள் என்பதும், தப்பியோடிய 2 பேர் கர்நாடகாவை சேர்ந்த இளைஞர்கள் என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடந்து வருவதால் இறந்தவர்களின் சடலங்கள் வனப்பகுதியிலே உள்ளது. இன்று மாலைக்குள் சடலங்களை போலீசார் திருச்சூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று, பின்னர் பிரேத பரிசோதனை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கிடையில், தப்பியோடிய 2 பேரை பிடிக்க அதிரடிப்படையை சேர்ந்த ஒரு குழுவினர் தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

மாவோயிஸ்டுகளை பொறுத்தவரை கர்நாடகத்தில் கபினி தளம் என்றும் தமிழகம் மற்றும் கேரளாவில் பவானி மற்றும் சிறுவாணி என்று மூன்று தளங்கள் அமைத்து செயல்பட்டு வருகின்றனர். தற்போது மாவோயிஸ்ட்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய இடம் பவானி தளம் என்று கண்டறியப்பட்டுள்ளது. தப்பியோடியவர்கள் கர்நாடகாவை சேர்ந்தவர்களாக உள்ளதால், அவர்கள் நீலகிரி, கோவை வனப்பகுதியில் ஊடுருவியிருக்கலாம். அங்கிருந்து அவர்கள் கர்நாடகா வனப்பகுதிக்கு செல்ல திட்டமிட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இதனால் தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு கேரள மாநில போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தும்படி அறிவுறுத்தியுள்ளனர். இதனால் தமிழகத்தில் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் உள்ள செக்ேபாஸ்ட்களில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக அதிரடிப்படையினர் உஷார்படுத்தப்பட்டு, வனத்துறையினருடன் இணைந்து கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : Maoists ,search ,Tamil Nadu Action Force ,Nilgiris ,Coimbatore ,Forest Department , Intense search , Nilgiris, Coimbatore , escaped firing: Tamil Nadu Action Force, Forest Department intensity
× RELATED ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட டெல்லி பல்கலை. முன்னாள் பேராசிரியர் விடுதலை!!