×

விருச்சிகத்தில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ந்தார் ஆலங்குடி குரு கோயிலில் குருப்பெயர்ச்சி கோலாகலம்: கொட்டும் மழையில் திரளான பக்தர்கள் தரிசனம்

வலங்கைமான்: ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குரு கோயிலில் இன்று அதிகாலை குருபெயர்ச்சி விழா கோலாகலமாக நடந்தது. கொட்டும் மழையிலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகா ஆலங்குடியில் ஏலவார்குழலி சமேத ஆபத்சகாயேஸ்வரர் கோயில் உள்ளது. இது நவக்கிரகங்களில் குருபரிகாரஸ்தலமாக விளங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் குருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசிப்பதை குருப்பெயர்ச்சி என்கிறோம். இந்த ஆண்டு குருபகவான் இன்று (29ம் தேதி) அதிகாலை 3. 49 மணிக்கு விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு பிரவேசித்தார். அப்போது குரு பகவானுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. கலங்காமற் காத்தவிநாயகர், ஏழவார்குழலி, சுப்ரமணியர், ஆபத்சகாயேஸ்வரர் சுவாமிகள் சந்தனகாப்பு அலங்காரத்திலும், குருபகவான் தங்ககவசத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

இன்று அதிகாலை 2 மணி முதல் ஆலங்குடி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் தரிசனம் செய்தனர். திருவாரூர் எஸ்பி துரை தலைமையில் நன்னிலம் டி.எஸ்.பி சுகுமாறன் மேற்பார்வையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.குருபெயர்ச்சிக்கு முன் முதல் கட்ட லட்சார்ச்சனை கடந்த 24ம் தேதி துவங்கி 27ம் தேதி வரை நடைபெற்றது. இரண்டாவது கட்ட லட்சார்ச்சனை குருப்பெயர்ச்சிக்கு பின் வரும் 31ம் தேதி முதல் நவம்பர் மாதம் ஏழாம்தேதி வரை நடைபெறுகிறது. ரிஷபம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மகரம், மீனம் உள்ளிட்ட ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்ளலாம். விழா ஏற்பாடுகளை கோயில் தக்கார் தமிழ்செல்வி மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Tags : Sagittarius ,Sagittarius The Guru Temple At Alangudi Guru Temple Sagittarius , Sagittarius, translates, Sagittarius
× RELATED தனுசு