×

அரசு மருத்துவமனையில் 6 பேர் மட்டுமே அட்மிட் தீபாவளி வெடி விபத்து குறைந்தது: விழிப்புணர்வு நிகழ்ச்சியால் பலன் கிடைத்தது

மதுரை: தீபாவளி தினத்தன்று வெடி விபத்தும், இதனால் காயம் அடைவோரின் எண்ணிக்கையும் இந்தாண்டு குறைந்துள்ளது. தீபாவளி என்றவுடன் ஒரு பக்கம் மகிழ்ச்சி ஏற்படுவதைப்போல், வெடியால் ஏற்படும் விபத்துகளை நினைக்கும்போது பயமும் ஏற்படும். சாதாரணமாக கவனத்துடன் வெடிகள் வெடிக்கும் போது காயம் ஏற்படுவதில்லை. அணுகுண்டு மற்றும் ராக்கெட் வெடிகளை முறைதவறி வெடிக்கும் போதுதான் விபத்துகள் ஏற்படுகிறது. இருப்பினும் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள விழிப்புணர்வால், இந்தாண்டு தீபாவளி அன்று ஏற்பட்ட வெடி விபத்துகள் குறைந்துள்ளது. மதுரை நகர் மற்றும் மாவட்ட பகுதியில் கடந்தாண்டு தீபாவளி அன்று 15க்கும் மேற்பட்ட வெடி விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இந்தாண்டு மதுரை திடீர்நகர் மற்றும் தல்லாகுளம் பகுதிகளில் மட்டும் 6 வெடி விபத்துகள் ஏற்பட்டுள்ளன. மாவட்டத்தில் உசிலம்பட்டியில் மட்டும் ஒரு வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. மதுரை தீயணைப்புத்துறையினர் கூறும்போது, ``விபத்தில்லா தீபாவளி என்ற தலைப்பில், பள்ளி, கல்லூரி உள்ளிட்ட பல இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதன் விளைவாக, இந்தாண்டு வெடியால் ஏற்படும் தீ விபத்து குறைந்துள்ளது’’ என்றார்.

அரசு மருத்துவமனை டாக்டர் ஒருவர் கூறுகையில், ‘‘வெடி விபத்து ஏற்பட்டு காயமடைந்தவர்களின் எண்ணிக்கையும் இந்தாண்டு கணிசமாக குறைந்துள்ளது. கடந்தாண்டு, தீபாவளி அன்று வெடி வெடித்ததில் காயம்பட்டு, மதுரை அரசு மருத்துவமனையில் 5 சிறுவர்கள் உள்ளிட்ட 12 பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். 20 பேர் வரை வெடியால் ஏற்பட்ட தீக்காயத்திற்கு வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்றனர். ஆனால் இந்தாண்டு, தீபாவளி அன்று இரு சிறுவர்கள் மற்றும் 4 இளைஞர்கள் என 6 பேர் மட்டுமே சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். 10 பேர் வரை சிறுகாயம் பட்டு வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்று சென்றுள்ளனர். இதுதவிர தனியார் மருத்துவமனைகளிலும் குறைந்த அளவினரே வெடி காயத்திற்கு சிகிச்சை பெற்றுள்ளனர். இவர்களில் பலர் கைகளில் பிடித்து வெடி வெடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வெடிவிபத்துகள் தொடர்பாக ஓரளவு விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பதால், வெடி விபத்தும், காயமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்து வருகிறது’’ என்று தெரிவித்தார்.

Tags : explosion ,Diwali ,Government Hospital , Admit Diwali,death toll, rises ,6 in Government Hospital
× RELATED கலைஞர் 101வது பிறந்தநாளையொட்டி அரசு...