மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இலவச லட்டு வழங்க அரசு அனுமதி கிடைத்தும் தாமதித்தது ஏன்?

*பக்தர்கள் கொந்தளிப்பு

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தீபாவளி முதல் பக்தர்களுக்கு லட்டு வழங்க அரசு அனுமதி வழங்கியும், அதனை நிர்வாகம் செயல்படுத்த தாமதிப்பது ஏன் என்று பக்தர்கள் கொந்தளிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அதிகாலை 4.30 மணிக்கு திறந்து, நண்பகல் 12.30 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. திரும்பவும் மாலை 4 மணிக்கு திறந்து இரவு 9 மணி வரை பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்கப்படுகின்றனர். தினமும் சராசரியாக 20 ஆயிரத்திற்கும் அதிக பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், தீபாவளி முதல் பக்தர்களுக்கு இலவச லட்டு விநியோகிக்கப்படும் என்று கோயில் நிர்வாகம் சார்பில் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. ஆனால் திட்டமிட்ட படி லட்டு விநியோகிக்க முடியாத நிலையில், திடீரென திட்டத்தை நிறுத்தி வைத்து, வேறொரு தேதியில் வழங்கப்படும் என்று தற்போது நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் பக்தர்கள் பெரும் கொந்தளிப்பில் உள்ளனர்.இதுகுறித்து மதுரை கீழ மாசி வீதியைச் சேர்ந்த கணேசன் கூறும்போது, ‘‘மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு தினமும் சென்று தரிசனம் செய்து வருகிறேன்.

கடந்த 2006ம் ஆண்டு முதல் பிரசாத ஸ்டாலில் லட்டு விற்பனை செய்ய அரசு அனுமதி கிடைத்துள்ளது. மேலும், தற்போது இலவசமாக 30 கிராம் லட்டு வழங்க, கடலை மாவு, சீனி, முந்திரிபருப்பு, நெய், ஏலக்காய், ஜாதிக்காய், கற்கண்டு, ரீபைண்டு ஆயில், எரிவாயு மற்றும் பணியாளர்கள் 6 பேர் என ஒதுக்கீடு செய்து, கடந்த மார்ச் மாதம் அரசின் அனுமதி உத்தரவு வந்திருக்கிறது. இந்த உத்தரவு அடிப்படையில் தான் கோயில் தக்கார் இலவசமாக லட்டு வழங்கப்படும் என அறிவித்தார்.

அவரே லட்டு தயாரிக்க இயந்திரமும் வாங்கி கொடுத்தார். இவ்வளவு இருந்தும் நிர்வாகம் லட்டு வழங்குவதற்கான முன்னேற்பாட்டு பணிகளை மந்தமாகவே நடத்தியது. தீயணைப்பு உள்ளிட்ட உரிய துறை அனுமதி பெறுவதிலும் கூடுதல் அக்கறை காட்டவில்லை. இதனால் தான் திட்டமிட்டப்படி தீபாவளிக்கு லட்டு வழங்க முடியவில்லை. இது பக்தர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது. நிர்வாக இயந்திரத்தில் உள்ள குறைபாடுகளை சீரமைத்து, பக்தர்களுக்கு லட்டு வழங்கும் திட்டத்தை விரைந்து நிறைவேற்றித்தர வேண்டும்’’ என்றார்.

Related Stories:

>