×

சென்னையில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்திய துரித உணவகத்துக்கு சீல்: உணவு பாதுகாப்புத்துறை அதிரடி நடவடிக்கை

சென்னை: பிளாஸ்டிக்  பைகளை பயன்படுத்த கூடாது என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தும் ஒருசில கடைகளில் தடைகளை மீறி பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவ்வாறு தடையை மீறி பிளாஸ்டிக் பைகளை விநியோகம் செய்த உணவகத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். சென்னையில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்திய துரித உணவகத்துக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். எழும்பூர் புதுப்பேட்டையில் சாகிர் உசேன் என்பவருக்கு சொந்தமான துரித உணவகம் செயல்பட்டு வந்தது. இங்கு உணவு வாங்க வந்த ஆயுதப்படை காவலர் ஒருவர் கடையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுவதை கண்டு அது குறித்து கேட்டுள்ளார்.

இதற்கு அங்கிருந்த கடை உரிமையாளர் மற்றும் கட்சி பிரமுகர் ஆகியோர் அலட்சியமாக பதிலளித்ததோடு மட்டுமின்றி வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இந்த நிலையில் இன்று உணவகத்தில் உணவு பாதுகாப்புத்துறை மற்றும் மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் இணைந்து திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அரசு தடை செய்த பிளாஸ்டிக் பை உள்ளிட்ட பொருட்கள் பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டது. அதை தொடர்ந்து கடைக்கு சீல் வைத்து ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும் செயற்கை வண்ணம் கலக்கப்பட்டு விற்பனைக்கு வைத்திருந்த உணவு பொருட்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


Tags : Chennai ,Fast food restaurant , Chennai, Prohibition, Plastic Bag, Restaurant, Seal, Food Security Department
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...