மூடாத ஆழ்துளை கிணறுகள் தொடர்பாக தகவல்கள் அளிப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும்: அமைச்சர் கமலக்கண்ணன்

புதுச்சேரி: புதுவையில் மூடாத ஆழ்துளை கிணறுகள் தொடர்பாக தகவல்கள் அளிப்பவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும் என விவசாயத்துறை அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் பயன்பாட்டில் இல்லாத ஆழ்த்துளை கிணறுகளை உடனடியாக மூட புதுச்சேரி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து 2 வயது சிறுவன் சுஜித் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து ஆழ்துளை கிணறுகள் தொடர்பாக தமிழக அரசு பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக புதுச்சேரி அரசும் உத்தரவு ஒன்றினை  பிறப்பித்துள்ளது. அதன்படி புதுச்சேரியில் பள்ளிகள், தொழிற்சாலைகள், விளைநிலங்களில் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை உடனடியாக மூட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை விவசாயத்துறை அமைச்சர் கமலக்கண்ணன் வெளியிட்டுள்ளார்.

மேலும் மூடப்படாத ஆழ்துளை கிணறுகள் தொடர்பாக தகவல்கள் அளிப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மூடப்படாத ஆழ்துளை கிணறுகள் தொடர்பாக பொதுமக்கள், தன்னார்வ அமைப்புகள், அரசுத்துறை அதிகாரிகளான வி.ஏ.ஓ, உள்ளாட்சித்துறை ஆணையர், காவல்துறை அதிகாரிகள், வேளாண் அதிகாரிகளுக்கு உடனடியாக தெரியப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அவ்வாறு தெரியப்படுத்தப்படும் பொதுமக்களுக்கு, அவர்கள் மக்களின் பாதுகாப்புக்கான தகவல்களை அளித்தனர் என்ற அடிப்படையில் புதுவை அரசின் மாவட்ட ஆட்சியாளர் மூலமாக அவர்களுக்கு சன்மானமும், அரசின் மூலமாக நல்ல தகவல்கள் அளித்தவர்களை கௌரவப்படுத்தும் நிகழ்ச்சியும் நடத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>