×

கன்னியாகுமரி அருகே நேர்ந்த சோகம்: மின்சாரம் தாக்கி மூன்று இளைஞர்கள் பரிதாப பலி

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் பேச்சுப்பாறை அருகே மின்சாரம் தாக்கி மூன்று இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கோதையாறு, குற்றியார், மாறமலை, தச்சமலை, முடவன் பொற்றை உள்ளிட்ட மலை கிராமங்கள் உள்ளன. இதில் குற்றியாற்றில் நேற்றிரவு மின்சாரம் தடைபட்டுள்ளது. இதனால் அந்த கிராமத்தை சேர்ந்த 22 வயதான சஜிம் சலோ, 20 வயதான சுபாஷ் மற்றும் 25 வயதான மன்மதன் ஆகிய மூவரும் குற்றியார் கிராமத்திற்கு மின்சாரம் வழங்கும் ஜீரோ பாய்ண்ட் பகுதிக்கு சென்று அங்குள்ள மின்மாற்றியில் தங்கள் கிராமத்திற்கு வரும் இணைப்பை சரி செய்ய முயன்றதாகவும் அப்போது மின்சாரம் தாக்கி மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

மூவரும் உயிரிழந்து கிடந்ததை கண்டு அவ்வழியே சென்றோர் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த பேச்சுப்பாறை போலீசார் மூவரின் உடல்களையும் உடல்கூறாய்விற்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சம்பவத்தின் மீது வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே கிராமத்தில் மூன்று இளைஞர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பழங்குடியின கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து அப்பகுதியினர் தெரிவித்ததாவது, மலைக் கிராமங்களில் மரக்கிளைகள் விழுவது உள்ளிட்ட காரணங்களால் அடிக்கடி மின்சாரம் தடைபடுவது வழக்கம்.

ஒருமுறை மின்சாரம் தடைபட்டால் மீண்டும் மின்சாரம் வருவதற்கு சில நாள்கள் ஆகிவிடும். மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக வந்து சரி செய்ய மாட்டார்கள். எனவே, சிறிய பழுதுகள் காரணமாக மின்சாரம் தடைபட்டால், கிராமத்து இளைஞர்களே அதனை சரி செய்வது வாடிக்கையாக இருந்து வருகிறது. அதுபோலவே நேற்று மின்சாரம் தடைப்பட்டதால் கிராம இளைஞர்கள் சரி செய்ய முயன்றனர். அந்த தருணத்தில் தான் உயர்மின்சாரம் பாய்ந்து இளைஞர்கள் இறந்துவிட்டதாக வேதனையுடன் தெரிவித்தனர். இதனை போலவே கன்னியாகுமரியில் மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.


Tags : Kanyakumari ,youths ,Tragedy , Kanyakumari, electricity, three youths, kills
× RELATED கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா ரோடு ஷோ..!!