×

சுஜித் உயிரிழப்பு விவகாரம்: உயிர் பலி ஏற்பட்டால் தான் அரசு நடவடிக்கை எடுக்குமா? உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை: சுஜித் உயிரிழப்பு குறித்து அப்துல் கலாமின் உதவியாளராக இருந்த பொன்ராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். பொன்ராஜ் தாக்கல் செய்த மனுவில் சுஜித்தின் குடும்பத்திற்கு போதிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், மேலும் இது போல் சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க வழிமுறைகளை பின்பற்ற உத்தரவிட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கை நீதிபதி சத்யநாராயணா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. ஆழ்துளை கிணற்றில் சிக்கி குழந்தை சுஜித் உயிரிழந்தது தொடர்பான மனுவை விசாரித்த ஐகோர்ட் தமிழக அரசுக்கு கண்டனம் தெரவித்துள்ளது.

அப்போது உயிர் பலி ஏற்பட்டால் தான் தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா? என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. குழந்தை சுஜித் மரணத்தை அடுத்தே ஆழ்துளை கிணறுகளை மூடுவது குறித்து அரசு கவனம் செலுத்துவதாக நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. அரசு கொண்டு வந்த விதிகள் பின்பற்றப்படுகிறதா என அதிகாரிகள்  ஆய்வு செய்வதில்லை என்று அதிருப்தி தெரிவித்த ஐகோர்ட், ஆழ்குழாய் கிணறு அமைக்க வழங்கப்பட்ட அனுமதி குறித்த ஆவணங்கள் பராமரிக்கப்படுகின்றனவா? என்று கேள்வி எழுப்பியது.

இதுவரை எத்தனை ஆழ்குழாய் கிணறுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது? அதில் பயன்படுத்தப்படாமல் உள்ளவை எத்தனை? என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக நவம்பர் 21-ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் 5 நாட்களுக்கு பின் சடலமாக மீட்கப்பட்டது. ஆழ்துளை கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து மருத்துவர்கள் சோதனை செய்ததில் உடல் அதிக அளவில் சிதைந்து அழுகிய நிலையில் இருப்பதாக தெரிந்தது.

இதனை அடுத்து தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் ஆழ்துளை கிணற்றில் சிக்கியிருந்த சுஜித்தின் உடலை மீட்டு வெளியே எடுத்தனர். பிரேத பரிசோதனை முடிக்கப்பட்ட பின்னர் சுஜித்தின் உடலுக்கு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள். அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து, அவரது உறவினர்கள் மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தினர். பின்னர் குழந்தை சுஜித்தின் உடல் ஆவாரம்பட்டி அருகே பாத்திமாபுதூர் கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : government ,Sujith ,death ,event ,Abdulkalam ,High Court ,Deepwater Well ,Ponraj , Sujith, deepwater well, sujith death, Chennai High Court, Abdulkalam Assistant, Ponraj,
× RELATED விகேபுரம் அருகே ரேஷன் அரிசி கடத்தியவர் கைது