×

ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த குழந்தை சுர்ஜித் கல்லறையில் திமுக தலைவர் ஸ்டாலின் அஞ்சலி

திருச்சி: ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த குழந்தை சுர்ஜித் கல்லறையில் திமுக தலைவர் ஸ்டாலின் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். குழந்தை சுர்ஜித்தின் உடல் திருச்சி மாவட்டம் பாத்திமாபுதூர் பகுதியில் உள்ள கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. குழந்தையின் மரணத்திற்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்திருந்தார். தொடர்ந்து சுர்ஜித்தின் மரணம் மிகவும் மனவேதனை அளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சிறுவன் சுர்ஜித் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டதை அடுத்து குழந்தையின் உடல் உடற்கூறாய்வு செய்யப்பட்டு, பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பிறகு பொதுமக்களின் அஞ்சலிக்காக திருச்சி பாத்திமாபுதூர் பகுதியில் உள்ள கல்லறையில் வைக்கப்பட்டு குழந்தையின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் குழந்தையின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வந்த வண்ணம் இருக்கிறார்கள். பல்வேறு தரப்பில் இருந்து பொதுமக்களும், அரசியல் கட்சி தலைவர்களும், தங்களுடைய இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள்.

நேரில் சென்றும் சமூக வலைத்தளங்கள் மூலமும் பொதுமக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். திமுக தலைவர் முக.ஸ்டாலின் முன்னதாக இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். தற்போது அவர் குழந்தையின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அவருடன் காங்கிரஸ் கட்சியிலிருந்து முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசரும், கரூர் தொகுதி எம்.பி ஜோதிமணி, திமுக பிரமுகர்கள் கே.என் நேரு, திருச்சி சிவா மற்றும் செந்தில்பாலாஜி போன்றவர்களும் சிறுவனின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து நடுகாட்டுப்பட்டியில் உள்ள சிறுவன் சுஜித்தின் பெற்றோர்களை சந்தித்து திமுக தலைவர் ஆறுதல் கூறி வருகிறார். சுஜித் வில்சனின் பெற்றோர் பிரிட்டோ, கலாமேரியை நேரில் சந்தித்து திமுக தலைவர் ஸ்டாலின் ஆறுதல் கூறினார். திருநாவுக்கரசர், கே.என் நேரு, திருச்சி சிவா, செந்தில்பாலாஜி, ஜோதிமணி உள்ளிட்டோரும் சுஜித் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தனர். திருச்சி நடுகாட்டுப்பட்டியில் சுஜித்தின் பெற்றோருக்கு நேரில் ஆறுதல் கூறிய பின் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

மீட்பு பணியை நேரில் பார்வையிட்டால் அரசியல் சாயம் பூசப்படும் என்பதால் தான் வந்து பார்க்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.  சுஜித்தை மீட்க தமிழக அரசு மெத்தனப்போக்குடன் செயல்பட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் அமைச்சர்கள், அதிகாரிகள் பேட்டி தருவதில் காட்டிய ஆர்வத்தை மீட்பு பணியில் காட்டவில்லையே என்ற ஆதங்கம் உள்ளது என அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து தமிழக அரசு இனி இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். குழந்தை சுர்ஜித்தை மீட்க ஏன் முன்பே தேசிய பேரிடர் மீட்புப்படை மற்றும் ராணுவத்தை அழைக்கவில்லை? என கேள்வி எழுப்பிய அவர், ஆழ்துளை குழியில் 36 அடியில் இருந்தபோதே குழந்தை சுர்ஜித்தை மீட்டிருக்கலாம் என கருத்து தெரிவித்துள்ளார்.  தொடர்ந்து சுர்ஜித்தை இழந்து வாடும் அவரது பெற்றோருக்கு மு.க ஸ்டாலின் 10 லட்சம் நிதியுதவி வழங்கினார். சுர்ஜித் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறிய பின் ரூபாய் 10 லட்சத்திற்கான காசோலையை ஸ்டாலின் வழங்கினார்.


Tags : Stalin ,DMK ,Surjit , Deep well, baby surjith, grave, DMK leader Stalin, Anjali
× RELATED ஸ்டாலினின் குரலில் துவங்கி எல்லோரும்...