×

மருத்துவர்கள் போராட்டத்தால் நாகர்கோவில் அருகே சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மூதாட்டி உயிரிழப்பு

கன்னியாகுமரி: மருத்துவர்கள் போராட்டத்தால் நாகர்கோவில் அருகே உரிய சிகிச்சை இன்றி பிரசன்னா என்ற மூதாட்டி உயிரிழந்தார். தமிழகம் முழுவதும், 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் கடந்த 4 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் 18 ஆயிரம் மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் பதவி உயர்வு, ஊதிய உயர்வு உள்பட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறித்தி ஜூலை 29, ஆகஸ்ட் 24ம் தேதிகளில் அரசு டாக்டர்கள் சங்கத்தினர் பல்வேறு வடிவங்களில் போராட்டம் நடத்தி வந்தனர். ஆனால் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான டாக்டர்கள் கடந்த 25ம் தேதி முதல் சென்னை ராஜிவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனை மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஒன்று கூடி, அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போரட்டம் நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையும் பலனளிக்கவில்லை. இந்த நிலையில், இன்று முதல் போராட்டத்தை தீவிரப்படுத்தவுள்ளதாக கூறியிருந்தனர். மேலும், அக்டோபர் 30, 31 ஆகிய தேதிகளில் முழு நேர போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் நேற்று அறிவித்திருந்தது. அரசு மருத்துவர்களின் இந்த போராட்டத்தால் மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் புறநோயாளிகள் சிகிச்சை பெற உரிய மருத்துவர்கள் இல்லாமல் பெரிதும் அவதிக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நாகர்கோயில் அருகே பிரசன்னா என்கிற 75 வயது மூதாட்டி கடந்த 17ம் தேதி நாகர்கோவில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குடல்புண் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவர்கள் போராட்டத்தால் சரிவர சிகிச்சை அளிக்கப்படவில்லை. இதையடுத்து, அவர் இன்று காலை உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் மருத்துவமனையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : death ,doctors ,Nagercoil ,struggle , Doctors struggle, elderly death, Nagercoil, government hospital
× RELATED வாக்கு எண்ணிக்கை மையத்தில் தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு