×

கேரள வனப்பகுதியில் பயங்கர துப்பாக்கி சண்டை தமிழகத்தை சேர்ந்த 3 மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை

பாலக்காடு: கோவை அருகே கேரள வனப்பகுதியில் சிறப்பு அதிரடிப்படை போலீசாருக்கும், மாவோயிஸ்ட்களுக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் தமிழகத்தை சேர்ந்த மாவோயிஸ்ட்கள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி வனத்தில் கடந்த சில ஆண்டுகளாக மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் அதிகளவில் உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல்கள் வந்தன. இதையடுத்து அந்த வனப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாவோயிஸ்ட்கள் தேடுதல் வேட்டைக்காக ‘தண்டர் போல்ட்’ என்ற சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்பட்டு தேடுதல் பணி நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் அட்டப்பாடியில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டி செல்கிற வழித்தடத்தில் 6 கி.மீ. உள் வனப்பகுதியான மேலே மஞ்சகண்டியூர் வனப்பகுதியில் மாவோயிஸ்ட்கள் முகாமிட்டுள்ளதாக பாலக்காடு மாவட்ட எஸ்.பி. சிவ விக்ரமிற்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அதிரடிப்படை போலீசார் வனப்பகுதியில் கடந்த 4 நாட்களாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். நேற்று அதிகாலை மாவோயிஸ்ட்டுகள் தங்கியிருந்த பகுதியை போலீசார் சுற்றி வளைத்தனர். இதனை அறிந்த மாவோயிஸ்ட்கள் போலீசாரிடம் இருந்து தப்பிக்க போலீசாரை ேநாக்கி துப்பாக்கியால் சுட்டனர். சுதாரித்துக்கொண்ட போலீசார் மாவோயிஸ்ட்களை நோக்கி துப்பாக்கிசூடு நடத்தி தக்க பதிலடி கொடுத்தனர். இதில் தமிழகத்தை சேர்ந்த 3 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

3 பேர் அடர்ந்த வனப்பகுதிக்குள் தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து சுட்டுக்கொல்லப்பட்ட மாவோயிஸ்ட்களின் உடல்கள் மீட்கப்பட்டு அடையாளம் காணும் பணி நடந்தது. அவர்கள் தமிழகத்தை சேர்ந்த ரமா என்கிற இளம்பெண் மற்றும் கார்த்தி, சுரேஷ் ஆகியோர்  ஆவர். தகவல் கிடைத்ததும் பாலக்காடு எஸ்.பி. சிவாவிக்ரம் மற்றும் அட்டப்பாடி ஏஎஸ்பி ஹேமலதா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். 3 பேர் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை பிடிக்க நீலகிரி மாவட்ட எல்லையோர பகுதிகளில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். தப்பிச்சென்ற மாவோயிஸ்டுகள் தமிழகம்,கர்நாடகம் அல்லது கேரள வனப்பகுதிகளில் இருந்து வெளியேறி வனப்பகுதிகளை ஒட்டிய கிராமங்களில் தஞ்சம் அடையக்கூடும் என்ற சந்தேகத்தின்பேரிலும், ஆதிவாசி மற்றும் மலைவாழ் மக்கள் வசிக்கின்ற கிராமங்களில் பதுங்கியிருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரிலும் தீவிர் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

Tags : Maoists ,Tamil Nadu ,Kerala Forest , Terrorist gunfire, 3 Maoists, shot dead , Kerala forest
× RELATED வனவிலங்குகளின் உயிர்களைப் பாதுகாக்க...