×

மேட்டூர் அணையில் நீர்திறப்பு 25,000 கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூர்: ஒகேனக்கல் காவிரியில் 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், மேட்டூர் அணையில் நீர்திறப்பு 25 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால், கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து, உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அவ்வப்போது அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது. நேற்று முன்தினம் விநாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை நிலவரப்படி 20 ஆயிரம் கனஅடியாக சற்று அதிகரித்தது. ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் அதிகளவில் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கும், பரிசல் இயக்குவதற்கும் தடை நீடிக்கிறது.

இதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 14 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை படிப்படியாக அதிகரித்தது. காலை 8 மணிக்கு விநாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, 9 மணியளவில் 25 ஆயிரம் கனஅடியானது. அணை முழுமையாக நிரம்பியுள்ளதால், அந்த தண்ணீர் அப்படியே காவிரி டெல்டா பாசனத்திற்கு வெளியேற்றப்பட்டு வருகிறது.

நீர்வரத்து சரிவால் கடந்த 26ம் தேதி உபரிநீர் போக்கியான 16 கண் மதகு வழியாக தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது வரத்து அதிகரிப்பால் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. 16 கண் மதகு வழியாக விநாடிக்கு 2,500 கனஅடி தண்ணீரும், நீர்மின் நிலையம் வழியாக 22,500 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு விநாடிக்கு 350 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், நேற்று காலை முதல் 600 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் உள்ளது.


Tags : Mettur Dam , Mettur Dam, Hydrology, 25,000 cubic feet, increase
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 68 கனஅடி