×

நாடு முழுவதும் அனுமதித்ததன் எதிரொலி ஆன்லைன் வர்த்தகத்தால் தீபாவளி விற்பனை சரிவு: சில்லறை வியாபாரிகள் குற்றச்சாட்டு

சென்னை: மத்திய அரசு தொடர்ந்து ஆன்லைன் வர்த்தகத்தை ஊக்குவித்து வருவதால் நாடு முழுவதும் தீபாவளி விற்பனை கடும் சரிவை சந்தித்துள்ளதாக சில்லறை வியாபாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து சில்லறை விலையில் ஜவுளி கடை வைத்துள்ள வியாபாரிகள் கூறியதாவது: தீபாவளி பண்டிகைக்கு முன்பே ஒரு மாதமாக ஒவ்வொரு ஜவுளி கடையிலும் தினசரி பல லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடைபெறும். ஆனால் இந்த முறை விடுமுறை நாட்களில் கூட எதிர்பார்த்த கூட்டம் இல்லை. இதற்கு காரணம், மத்திய அரசு அனுமதித்துள்ள ஆன்லைன் வர்த்தகமே காரணம் ஆகும். இந்த ஆன்லைன் வர்த்தகத்தால் சில்லறை ஜவுளி வியாபாரிகள் பெரிய அளவில் பாதித்துள்ளனர்.

மத்திய அரசு இரண்டு வியாபாரிகளிடமும் வெவ்வெறு வரிவிகித்தை கடைபிடிக்கிறது. இதனால், ஆன்லைன் வர்த்தகர்கள் தள்ளுபடி விலையில் விற்பனை செய்கிறார்கள். இதனால் சில்லறை கடைகளில் வாங்கும் துணி வகைகளை விட ஆன்லைனில் குறைந்த விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. குறைந்த விலைக்கு கிடைப்பதால் மக்கள் ஆன்லைன் வர்த்தகத்தை விரும்புகிறார்கள். ஆனால், அந்த பொருட்கள் தரம் இல்லாத ஆடைகளாக இருக்கும். இது பலருக்கு தெரிவதில்லை. எங்களிடம் நேரடியாக வந்து வாங்கு பொருட்களை போட்டு பார்த்து வாங்க முடியும். ஆன்லைனில், அவர்கள் அனுப்பி வைக்கும் பொருட்களை தான் பெற்றுக்கொள்ள முடியும் என்றனர்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறியதாவது: தமிழகத்தில் கடந்த தீபாவளியைவிட இந்த தீபாவளிக்கு 30 முதல் 40 சதவீதம் ஜவுளி விற்பனை குறைந்துள்ளது. தி.நகரில் கடந்த தீபாவளியின்போது சனி, ஞாயிறு உள்ளே நுழைய முடியாத அளவுக்கு கூட்டம் காணப்பட்டது. இந்த தீபாவளிக்கு சனி, ஞாயிறு எளிதாக சென்றுவர முடிந்தது. ஆன்லைன் வர்த்தகம் மட்டும் 19 ஆயிரம் கோடிக்கு நடந்துள்ளது.
இதன்மூலம் ஒன்று அல்லது இரண்டு தொழிலதிபர்கள் மட்டுமே பயன்பெறுவார்கள். ஆனால், தமிழகத்தில் 1 கோடி வணிகர்கள் இருக்கிறார்கள். இன்று அவர்கள் அனைவரும் பாதிக்கப்பட்டு, கடையை நடத்த முடியாத நிலை உள்ளது.

இதனால் சுயவேலைவாய்ப்பு முற்றிலும் அழிந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் 40 சதவீதம் பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். தீபாவளியையொட்டி, கலால் வரி அதிகாரிகள், ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை என்ற பெயரில் பெரிய அளவில் நெருக்கடி கொடுத்து வந்தனர். இதனாலும் வியாபாரிகள் பாதித்துள்ளனர். மத்திய, மாநில அரசுகள் இணைந்து உள்நாட்டு சில்லறை வியாபாரிகளை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், சில்லறை வியாபாரிகளின் வாழ்க்கையே கேள்விக்குறியாகி விடும்.இவ்வாறு அவர் கூறினார்.

Tags : business ,country ,retailers , Across the country, permitting, echoing, retailers, indictment
× RELATED ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கொண்டு வரப்படும்: பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதி!