×

ஆழ்துளை கிணறு தொடர்பான சட்டம் என்ன சொல்கிறது?: * அமல்படுத்துவதில் அரசின் கவனக்குறைவு * கண்டிப்பாக செயல்படுத்த கோரிக்கை

சென்னை: ஆழ்துளை கிணறு சட்டத்தை ஒழுங்காக அமல்படுத்தினால் குழந்தைகள் குழியில் விழுந்து மரணிக்கும் சம்பவங்கள் ஏற்படாது என்றும் இந்த சட்டத்தை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 2013ம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்தது. அந்த குழந்தை பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு மீட்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தது. இந்த சம்பவத்தையடுத்து, சிவகாமி எனும் சட்டக் கல்லூரி மாணவி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கு விசாரித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு, ஆழ்துளை கிணறுக்கான சட்டத்தை ஒரு மாதத்திற்குள் நிறைவேற்றி, கண்டிப்புடன் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று, பாதிக்கப்பட்ட அந்த குழந்தையின் பெற்றோருக்கு ரூபாய் 1 லட்சத்தை உடனடியாக நிவாரணமாக வழங்க வேண்டும், அத்தொகையை ஆழ்துளை கிணற்றை சரியாக பராமரிக்காத நபரிடமிருந்து வசூலிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு அந்த பொதுநல வழக்கை முடித்து வைத்தது. அதன்பிறகு, தமிழ்நாடு பஞ்சாயத்துகள் விதிகள் சட்டம் 2015த்தை தமிழக அரசு  கொண்டுவந்தது. இந்த சட்டம் 2015 பிப்ரவரி 18 முதல் அமலுக்கு வந்தது.

இந்த சட்டத்தின்படி, பாதுகாப்பு நெறிமுறைகள் அமல்படுத்தப்பட்டன. அதாவது, ஆழ்துளை கிணறு வெட்டுவதற்கான உரிமம் வைத்திருக்கும் நபர், அல்லது கிணற்றின் உரிமையாளர், கிணறு புதிதாக தோண்டும் போதும், அல்லது ஆழப்படுத்தும் போதும், அல்லது சீரமைக்கும் போதும், கீழ்க்கண்ட பாதுகாப்பு நெறிமுறைகளை நிச்சயம் கடைபிடிக்க வேண்டும்.
*கிணறு தோண்டும் பணியாளர்கள் தகுந்த முன்னெச்சரிக்கையுடன், பாதுகாப்பு உபகரணங்களுடன் வேலை செய்கிறார் என்பதை உறுதி செய்ய வேண்டும்.
*வேலை செய்யும் பணியாளர்கள் உரிய உரிமத்துடன் பணியாற்றுகிறார்கள் என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
*கிணறு தோண்டும் பணியை சற்று நிறுத்தினாலோ அல்லது ஓய்வு பெறும் நிலையிலோ அந்தக் கிணறு மூடி இருக்கிறதா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
*கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறுகளை களிமண், மணல், கற்கள் கொண்டு தரை வரை சமதளமாக கண்டிப்பாக மூடிவிடவேண்டும்.
*ஆழ்துளை கிணறு வெட்டும் போதும் ஆழப்படுத்தும் போதும் சீரமைக்கும் போதும்,  மேற்படி  நடைமுறைகள் கடைபிடிக்கப்பட வேண்டும்.
*கிணற்றின் உரிமையாளர் கிணறு வெட்டுவதற்கு முன்பு படிவம்-பி  வைத்துள்ளார் என்பதை உறுதி செய்ய வேண்டும்.
*கிணறு வெட்டும்போது, வெட்டப்படவிருக்கும் ஆழ்துளை கிணற்றின் நீளம், அகலம் நிலத்தின் உரிமையாளர் அவரது முகவரி ஆகியவற்றை அனைவரும் தெரிந்து கொள்ளும் விதமாக தகுந்த முன்னெச்சரிக்கை பதாகைகள், தட்டிகள் வைக்க வேண்டும்.
*நிலத்திற்கு ஏற்றார்போல் மேற்படி கிணற்றைச் சுற்றி பாதுகாப்பான வேலி அமைத்தல் வேண்டும் கிணறு உள்ள பகுதியில் 0.5 x 0.5 x 0.6 மீட்டர் அளவிலான சிமென்ட் மேடை கிணற்றைச் சுற்றி அமைத்திட வேண்டும், 0.3 மீட்டர் நிலப்பரப்பிற்கு கீழும், 0.3 மீட்டர் நிலப்பரப்பிற்கு மேலும் மேடை அமைத்திட வேண்டும்.
*எக்காரணம் கொண்டும் இடைவேளை நேரத்தில், திறந்த கிணற்றை விட்டு பணியாளர்கள் விலகிச் செல்லக் கூடாது.
*கிணறு தோண்டிய பிறகு, சேறு உள்ள பகுதி அனைத்தையும், கால்வாய்களை பாதுகாப்பாக மூடி விட வேண்டும்.
*ஏற்கனவே நிலம் எப்படி இருந்ததோ அதே மாதிரி மீண்டும் செய்திடல் வேண்டும். இரும்பு மூடி மூலம், வெல்டிங் செய்து உறுதியான மூடியை போல்ட் மற்றும் நட் (Bolt and Nut) மூலமாக ஆழ்துளை கிணற்றின் வாயை மூடி பாதுகாப்பாக உள்ளது என்பதை உறுதி செய்ய வேண்டும்.
*உள்ளூர் பஞ்சாயத்துத் தலைவர் ஆழ்துளை கிணற்றின் பணி சரியாக செய்யப்பட்டுள்ளது என்பதனை உறுதிசெய்து கொள்ள வேண்டும். பணியில் திருப்தி இல்லையெனில் சம்பந்தப்பட்ட நிலத்தின் உரிமையாளருக்கு நோட்டீஸ் அளித்து, மீண்டும் கிணற்றில் பாதுகாப்பை உறுதி செய்ய உத்தரவிட வேண்டும். பாதுகாப்பு விஷயத்தில் நிலத்தின் உரிமையாளர் நிபந்தனைகளை முறையாக கடை பிடிக்க வில்லை எனில்,
உரிமத்தை ரத்து செய்யலாம்.

இதனையும் தாண்டி ஒரு நிலத்தின் உரிமையாளர் கைவிடப்பட்ட கிணற்றை மூடாமல் அப்படியே விட்டுவிட்டால், சம்பந்தப்பட்ட காவல்துறை ஆய்வாளர் இந்திய தண்டனைச் சட்ட பிரிவு 304-II படி  நிலத்தின் அல்லது கிணற்றின் உரிமையாளர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து அவரை கைது செய்யலாம். இந்த சட்டம் இப்போது நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஒவ்வொரு முறை குழந்தைகள் ஆழ்துளை கிணற்றில் விழுந்து பிரச்னை ஏற்படும்போதுதான் இந்த சட்டத்தை அமல்படுத்துகிறார்களா என்ற கேள்வி எழுகிறது. இந்த சட்டத்தை முறையாக அதிகாரிகள் அமல்படுத்தினால் சிறுவன் சுஜித் போன்ற குழந்தைகளுக்கு ஏற்பட்ட சம்பவம் தவிர்க்கப்பட்டிருக்கும். எனவே, இந்த சட்டத்தை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Tags : Deep well, related legislation, enforcement, demand
× RELATED வேளாண் சட்டத்தை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்