×

உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தஹில் ரமானி மீது சிபிஐ வழக்கு பதிவு?: சென்னையில் அடுக்குமாடி குடியிருப்புகள் வாங்கிய விவகாரம்

சென்னை: சொத்துக்கள் வாங்கிய விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தஹில் ரமானி மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக கடந்த 2018 ஆகஸ்ட் 12ல் வி.கே.தஹில் ரமானி பதவியேற்றார். சில வாரங்களுக்கு முன்னர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியை, மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்தும், மேகாலய மாநில உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான ஏ.கே.மிட்டலை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்தும், உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் அடங்கிய குழு (கொலீஜியம்) மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்தது.

முன்னதாக, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், மூத்த நீதிபதிகள் எஸ்.கே.பாப்டே, என்.வி.ரமணா, அருண் மிஸ்ரா, ஆர்.எஃப். நாரிமன் ஆகியோர் அடங்கிய குழு கடந்த ஆகஸ்ட 28ம் தேதி, உயர் நீதிமன்ற நீதிபதிகள் இடமாற்ற முடிவை எடுத்தது. ஆனால், இந்த இடமாற்ற முடிவை மறுபரிசீலனை செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி, உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் குழுவுக்கு கோரிக்கை மனுவை அனுப்பினார். ஆனால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

இதையடுத்து, தஹில் ரமானி, தனது பதவியை ராஜினாமா செய்தார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்துக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்தார். இதன் நகலை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கும் அனுப்பினார். கொலீஜியத்தின் பரிந்துரை மற்றும் தனது பதவி விலகல் கடிதத்தின் மீது குடியரசுத் தலைவர் முடிவெடுக்கும் வரை வழக்குகளை விசாரிப்பதில் இருந்தும், உயர் நீதிமன்ற நிர்வாக நடவடிக்கைகளில் இருந்தும் தலைமை நீதிபதி விலகியிருந்தார்.இந்நிலையில், செப்டம்பர் மாதம் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ராஜினாமா கடிதத்தைக் குடியரசு தலைவர் ஏற்றுக் கொண்டதாக, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. 2 பக்கம் உள்ள அந்த கடிதத்தில், ‘உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ராஜினாமா ஏற்கப்படுகிறது. 2வது மூத்த நீதிபதி வினீத் கோத்தாரி, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பொறுப்பு வகிப்பார்’ எனக் கூறப்பட்டுள்ளது. இதனை, மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்திருந்தது.

இதற்கிடையே, சென்னை புறநகரில் 3 கோடியே 18 லட்சம் ரூபாய்க்கு தஹில் ரமானி அடுக்குமாடி குடியிருப்புகளில் 2 வீடுகளை வாங்கியுள்ளார். அவர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியில் இருந்து விலகிய பின்னர் இது குறித்து மத்திய உளவுத்துறை 5 பக்க அறிக்கையை அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது. அதில் தஹில் ரமானி அடுக்குமாடி குடியிருப்புகள் வாங்கியது குறித்தும், சிலைக்கடத்தல் வழக்குகளுக்கான சிறப்பு அமர்வை அவர் தள்ளுபடி செய்தது குறித்தும் தெரிவிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின.இதையடுத்து, அடுக்குமாடி குடியிருப்புகள் வாங்கியது குறித்து சிபிஐ விசாரணை நடத்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் உத்தரவிட்டிருப்பதாக தகவல் வெளியாகின.

இந்நிலையில், தஹில் ரமானி மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக சிபிஐ விசாரணையை தொடங்கியுள்ளது தெரியவந்துள்ளது. சாட்சியங்களிடமும் சிபிஐ விசாரணையை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. பல சாட்சிகள் சிபிஐ அதிகாரிகளிடம் தங்கள் தரப்பு சாட்சியத்தை பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தஹில் ரமானி மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Tags : Tahil Ramani ,CBI ,Chief Justice of the Supreme Court , Former Chief Justice, Tahil Ramani, on CBI, Case Record?
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...