×

தீபாவளி பட்டாசு வெடித்து தீக்காயமடைந்த 85 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை: வேடிக்கை பார்த்த சிறுவனின் கண்பார்வை பறிபோனது

சென்னை: தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடி விபத்து காரணமாக தீக்காயம் அடைந்த 85 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில், நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. அப்போது, பொதுமக்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர். பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் கட்டுப்பாடுகள் விதித்த நிலையில் அதையும் மீறி ஒரு சில இடங்களில் குறிப்பிட்ட  நேரத்தை விட அதிக நேரங்களில் பட்டாசு வெடித்தனர். நேற்று முன்தினம் காலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு 67 அழைப்புகள் வந்தன. இதில் 26 அழைப்புகள் சிறிய அளவிலான பட்டாசு விபத்துக்கள். மீதம் 41 அழைப்புகள் எளிதில் கட்டுப்படுத்தக் கூடிய பட்டாசு தீ விபத்துக்கள். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நேற்று 31 பேர் பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட தீக்காயத்துக்காக சிகிச்சை பெற்றுள்ளனர். இதில் 7 பேர் மட்டும் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையில் தீக்காயங்களால் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை டீன் வசந்தாமணி ஆய்வு செய்து அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.

இதேபோன்று சென்னை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பட்டாசு வெடித்ததில் ஒருவர் மட்டும் தீக்காயத்துக்கு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட தீக்காயத்திற்கு எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் 53 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த 12 வயது சிறுவனுக்கு பட்டாசு வெடித்ததை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போது வலது கண்ணில் பட்டாசு சிதறல் பட்டுள்ளது. வலியால் துடித்த சிறுவனை அவரது பெற்றோர் மீட்டு எழும்பூர் அரசு கண் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருந்த போதிலும் சிறுவனின் வலது கண் பார்வை பறிபோனது.

சென்னையில் இதுவரை 85 பேர் தீக்காயத்துக்கான சிகிச்சை பெற வந்துள்ளனர். இதுதவிர சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனை, கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனைகளில் நேற்று தீக்காய சிகிச்சைக்காக யாரும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : children ,hospitals , Diwali, crackers, burns, 85 people, hospitals, treatment
× RELATED ஹரியாணாவில் தனியார் பள்ளிப் பேருந்து...