×

ஏழைகளுக்கு செய்வதே உண்மை இறை காணிக்கை: ஜெகத் கஸ்பர், கிறிஸ்துவ மத போதகர்

கல்கி சாமியார் போன்றவர்கள் எல்லா மதங்களிலும் இருக்கிறார்கள். இந்து மற்றும் கிறிஸ்துவ  மதங்களில் அதிகமாக இருக்கிறார்கள். இஸ்லாமிய மதத்தில் குறைவாக இருக்கிறார்கள். ஆங்கிலத்தில் இவர்களை “காட் மேன்” என்று அழைக்கிறார்கள். இதற்கு கடவுள் மனிதர்கள் என்று பொருள். சாமியார்கள் மற்றும் குருக்களை எவ்வாறு அனுக வேண்டும் என்று தமிழகத்தின் வைஷ்ணவ பக்தி மரபுகள் நமக்கு வழிகாட்டுகிறது. அந்த மரபு எந்த ஒரு மனித பிறவியாக இருந்தாலும் அவர்கள் நேரடியாக கடவுளுடன் உரையாடலாம். இறைவனிடம் நேரடியாக சரணாகதி அடைவது சிறப்பு என்று கூறுகிறது. இதற்கு இடைத் தரகு அவசியமில்லை என்பது பக்தி மரபின் மிக முக்கியமான அம்சம்.

என்னை பொறுத்த வரையில் இறை உணர்வுக்கும், உயர்ந்த பண்புக்கும் இறைவனை நோக்கி மனிதர்களை கரம் பற்றி இழுத்து செல்லும் இத்தகைய நபர்களின் பணியை நாம் ஏற்றுக் கொள்ளலாம், வரவேற்கலாம். ஆனால் பல நேரங்களில் தாங்களே கடவுளுக்கு மாற்றானவர்கள் என்று அவர்கள் நிறுத்திவிடுகிறார்கள். அது பல நேரங்களில் மனிதர்களின் இயல்பான உணர்வுகளை சுரண்டுவதாக அமைந்துவிடுகிறது. கடவுளையும் கடவுள் தன்மையையும் முழுமையாக அறிந்தவர்கள் இந்த உலகத்தில் யாரும் இல்லை. இருக்கவும் முடியாது. அப்படி யாராவது சொன்னால் அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்று அர்த்தம்.

கடவுளின் மனதை நம்முடைய சடங்குகளால் மாற்றிவிட முடியும் என்பது குறைபாடான பார்வை. நாம் செய்கிற சடங்கு, காணிக்கை, மந்திரங்களால் தனது மனத்தை மாற்றிக் கொள்பவர்கள் அரசியல்வாதியாக, அதிகாரியாக இருக்க முடியுமே தவிர கடவுளாக இருக்க முடியாது. எனவே  மனிதர்களால் கடவுள் மனத்தை மாற்ற முடியும் என்ற அணுகுமுறையை மக்கள் மாற்றிக் கொள்ள வேண்டும். எனவே கண் மூடித்தனமாக சடங்குளில் ஈடுபடுவது, கணக்கு பார்க்காமல் இப்படி பட்டவர்களிடம் பணத்தை கொண்டு போய் கொட்டுவதை இறை உணர்வாளர்கள் தடுக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு.

இது போன்ற சாமியார்களிடம் காட்டும் பற்றை சக மனிதர்கள் மீதும் இயற்கை மீதும், சமூகத்தின் மீதும் காட்டுவது பொருத்தமாக இருக்கும். அழகான உலகம் மற்றும் அற்புதமான வாழ்க்கையை இறைவன் தந்து இருக்கிறார். இந்த உலகம், வாழ்க்கை, அனைத்து உயிர்களையும் உயர்ந்த நிலையில்  பராமரிப்பதுதான் நமது கடமை. எனவே உயர்ந்த குருமார்கள் போதகர்கள் எல்லாம் ஏழைக்கு இறங்குகிறவன் இறைவனுக்கு கை கொடுக்கிறான் என்று நமக்கு சொல்லி கொடுத்து இருக்கிறார்கள்.
 
வானகம் திறக்க வேண்டும் என்றால் ஏழைகளுக்கு பகிர்ந்து கொடுங்கள் என்று அருணகிரி நாதர் பாடியுள்ளார். என் கடன் பணி செய்து கிடப்பதே என்று செல்வ பக்தி இலக்கியம் கூறுகிறது. பசித்தவனுக்கு உணவும், தாகமுற்றவனுக்கு நீரும், நோயுற்றவருக்கு ஆறுதலும் கொடுப்பது இறைவனுக்கு செய்வது என்று பைபிள் கூறுகிறது. எனவே வழிபாட்டு தலங்கள் கட்டவும், சடங்குகள் செய்யவும், சாமியார்களை திருப்தி படுத்த அள்ளிக் கொடுப்பது உள்ளிட்ட பணிகளை செய்யாமல் மனித நேய பணிகளுக்கும், அறச் செயல்களுக்கும், இயற்கை பாதுகாப்பு பணிகளுக்கும், மனித உரிமைகளை பாதுகாக்கும் முயற்சிகளுக்கும் உதவிகள் செய்வதே உண்மையான இறை காணிக்கையாக பார்க்க வேண்டும் என்பது வேண்டுகோள்.


Tags : Jegad Gaspar ,poor ,Christian ,Jagath Gaspar , truth, offering, Jagath Gaspar, Christian preacher
× RELATED கிறிஸ்தவ சபை ஊழியர்களை மிரட்டிய பாஜக...