×

பிரக்சிட் காலக்கெடு ஜனவரி வரை நீட்டிப்பு: ஐரோப்பிய யூனியன் ஒப்புதல்

லண்டன்:    ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான பிரக்சிட்  காலக்கெடுவை 3 மாதம், அதாவது அடுத்தாண்டு ஜனவரி 31ம் தேதி வரை நீட்டித்து  ஐரோப்பிய யூனியன் ஒப்புதல் அளித்துள்ளது.பிரக்சிட் ஒப்பந்தத்தை  நிறைவேற்றுவதில் ஏற்பட்ட தோல்வி காரணமாக, இந்நாட்டு பிரதமர் தெரசா மே பதவி  விலகினார். இதையடுத்து பிரதமரான போரிஸ் ஜான்சனும் இதனை நிறைவேற்ற முடியாமல்  சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளார்.  ஐரோப்பிய யூனியனுடன் செய்து கொண்ட  ஒப்பந்தப்படி, பிரக்சிட் ஒப்பந்தம் நிறைவேற நாளை மறுநாள் கடைசி தேதியாக  அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே, இங்கிலாந்து நாடாளுமன்றத்தில்  கடந்த 20ம் தேதி நடைபெற்ற பிரக்சிட் ஒப்பந்தம் காலக்கெடுவை நீட்டிப்பதற்கு எதிர்கட்சிகள் கொண்டுவந்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் ஆதரவாக  322 பேரும், எதிராக 306 பேரும்  வாக்களித்தனர். இதனால், பிரதமர் போரிஸ்  ஜான்சன் தாக்கல் செய்த புதிய ஒப்பந்தம் நிராகரிக்கப்பட்டது. மேலும்,  பிரக்சிட்டுக்கான காலக்கெடுவை அடுத்த ஆண்டு ஜனவரி வரை நீட்டிக்க கோரும்  சட்ட மசோதாவும் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து, ஐரோப்பிய  கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான  காலக்கெடுவை நீட்டிக்க  கோரி ஐரோப்பிய கூட்டமைப்புக்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் கடிதம்  எழுதியிருந்தார். ஆனால், அதில் அவர் கையெழுத்திடவில்லை.  இதன் மூலம்  காலக்கெடு நீட்டிப்பை நாடாளுமன்றமே கோரி இருப்பதாக போரிஸ் ஜான்சன்  மறைமுகமாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.  ஐரோப்பிய யூனியனில்  உள்ள 27 உறுப்பு நாடுகளும் பிரக்சிட் ஒப்பந்தம் அக்டோபருக்கு பின்னரும்  தாமதமாவதை ஏற்றுக் கொண்டுள்ளன. இதற்கான கால அவகாசம் குறித்து ஆலோசித்து  வந்தன. அதில் முடிவு எட்டப்படாமல் இருந்தது. இந்நிலையில், பெல்ஜியம் நாட்டின் பிரசல்ஸ் நகரில் நேற்று நடைபெற்ற ஐரோப்பிய யூனியன் மாநாட்டில் ஐரோப்பிய  யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான காலக்கெடுவை 2020, ஜனவரி  31ம் தேதி வரை நீட்டிக்க உறுப்பினர்  நாடுகளின் ஒப்புதல் பெறப்பட்டது. இது  குறித்து ஐரோப்பிய யூனியன் தலைவர் டொனால்டு டஸ்க் நேற்றைய தனது  டிவிட்டரில், ``27 உறுப்பினர் நாடுகளும், இங்கிலாந்தின் வேண்டுகோளினை ஏற்று  ஐரோப்பிய யூனியனில் இருந்து அது வெளியேறுவதற்கான காலக்கெடுவை  ஜனவரி 31,  2020 வரை நீட்டிக்க ஒப்புதல் அளித்துள்ளன என்று கூறியுள்ளார்.

Tags : Brexit ,European Union , Brexit ,extended until, European Union ,approval
× RELATED நோட்டோவிற்கு போதிய நிதி ஒத்துக்கீடு...