×

கார்ப்பரேட் சாமியார்களின் ஆன்மீக பிசினஸ் இது: மனுஷ்ய புத்திரன், எழுத்தாளர்

கார்ப்பரேட் சாமியார்களின் தகிடுதத்தங்கள் பற்றிய செய்திகள் பல ஆண்டுகளாக தொடர்ந்து வந்தவண்ணம் இருக்கின்றன. எந்த செய்தியிடமிருந்தும் இவர்களை நம்பும் மக்கள் எதையும் புரிந்துகொள்வதில்லை. அவர்கள் நம்பிக்கையும் தளர்வதில்லை. எந்த சாமியார்களின் பின்புலமும் சில ஆண்டுகளில் இவர்களின் வளர்ச்சியும் நம்பமுடியாத அளவுக்கு பிரமாண்டமானவை. குறுகிய காலத்தில் இவர்கள் மிகப்பெரிய சமூக சக்தியாக வளர்ந்துவிடுகிறார்கள். ஒரு அரசியல் கட்சியோ வர்த்தக நிறுவனமோகூட அவ்வளவு துரிதமாக வளர்வதில்லை. இவர்களது சட்டவிரோத செயல்கள் பற்றி அவ்வப்போது செய்திகள் வந்தால்கூட அது சட்டம் ஒழுங்கு அமைப்புகளால் கண்டு கொள்ளப்படுவதில்லை.

 மரபான நம்பிக்கைகளில் ஏற்படும் தளர்ச்சியும் பெரு நகர கலாச்சாரம் உருவாக்கும் வேர்களற்ற தன்மையும் இதுபோன்ற கார்ப்பரேட் தனிநபர் பக்திக் கலாச்சாரத்தை பெரிதும் ஊக்குவிக்கின்றன. இவர்களை பின்பற்றுகிறவர்கள் பெரும்பாலும் படித்தவர்கள். நல்ல வசதி படைத்தவர்கள். உயர் பொறுப்புகளில் இருப்பவர்கள். அரசியல்வாதிகள், அரசு உயரதிகாரிகள், ஐ.டி பணிகளில் இருப்பவர்கள், டாக்டர்கள், தொழில் அதிபர்கள், வெளிநாட்டவர் என எல்லாதரப்பினரையும் இந்த கூட்டத்தில் பார்க்கலாம். ஆன்மிக வெறுமையும் எதிர்காலம் குறித்த அச்சமும் பண்பாட்டு அடையாளச் சிக்கல்கள் காரணமாக புதிய குழுக்களில் அடையாளம் தேடும் முயற்சியும் இவர்களை ஆட்கொள்கின்றன.

இந்த கார்ப்பரேட் சாமியார்கள் எளிய உளவியல் அணுகுமுறைகளின் மூலம் மனித மனங்களை கையாள்கிறார்கள். அவர்களுக்கு கற்பனையான இதயத்தை தருகிறார்கள். இவர்கள் கற்று வைத்திருக்கும் சில எளிய மேஜிக் தந்திரங்களும் இவர்களை மகாசக்தி படைத்தவர்களாக காட்டுகின்றன. இவர்களை அவ்வப்போது சில ஊடகங்கள் வளர்த்து விடுகின்றன. இது ஒரு மிகப்பெரிய வணிகம். இந்த கார்ப்பரேட் வழிபாட்டு சூழலில் கிடைக்கும் புதிய நட்புகளும் ஆடல், பாடல், நடனம், தியானம் போன்ற வழிமுறைகளும் உற்சாகத்தையும் மனக்கிளர்ச்சியும் தருவதால் பலரும் இவர்கள்பால் எளிதில் ஈடுபாடுகொண்டுவிடுகின்றனர். இங்கே கிடைக்கும் தொடர்புகள் தொழில் மற்றும் அதிகாரம் சார்ந்த தொடர்புகளாகவும் விரிவடைகின்றன. பற்றிக்கொள்ள ஏதுமற்ற ஒரு நவீன வாழ்க்கைமுறையில் இப்படித்தான் கார்ப்பரேட் சாமியார்கள் உள்ளே நுழைகிறார்கள். போதை மருந்து பயன்பாடு, பாலியல் குற்றங்கள் குறித்த செய்திகளும் தொடர்ந்து வருகின்றன

இந்தச் சாமியார்களின் பணபலம் சமூக செல்வாக்கில் முக்கியப் பங்கு வகிக்கிறது. காணிக்கைகளால் மட்டும் இந்தச் செல்வம் சேர்வதில்லை. இவர்கள் கல்லூரிகளையும் வர்த்த நிறுவங்களையும் நடத்துகிறார்கள். பங்குச் சந்தைகளில் முதலீடு செய்கிறார்கள். உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சொத்துக்கள் வாங்கிக்குவிக்கிறார்கள். நில ஆக்கிரமிப்புகள் மூலம் பெரும் கட்டுமானங்களை உருவாக்குகிறார்கள். இது போன்ற கார்ப்பரேட் ஆன்மீக அமைப்புகள் வருமானவரி கணக்குகளுக்கு ஆட்படுத்தப்படுவதில்லை. செல்வாக்கு மிக்க மனிதர்களின் தொடர்பினால் இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் கண்டுகொள்ளப்படுவதுமில்லை. சில கார்ப்பரேட் சாமியார்களுக்கு லட்சகணக்கான ‘பின் தொடர்பவர்கள்’ இருப்பதால் வாக்கு வங்கி அரசியல் காரணமாக ஆளும் பொறுப்பில் இருப்பவர்கள் இவர்கள் சார்ந்த குற்றங்களில் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள்.

இவர்களிடம் புரளும் பணம் சமூகத்தில் பல்வேறு சக்திவாய்ந்த மனிதர்களின் கறுப்புப்பணமாக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது. இந்த சாமியார்கள் அவர்களது பினாமிகளாக செயல்படுகின்றனர். இந்தக்  கொடுக்கல்வாங்கல்களில் ஏற்படும் தகராறுகளே சில சமயம் இவர்கள் மீதான நடவடிக்கைக்கு காரணமாக அமைந்துவிடுகிறது.  ஒரு விழிப்புணர்ச்சியுள்ள சமூகம் இங்கே உருவாகாதவரை இந்த கார்ப்பரேட் போலிப் பக்திக் கலாச்சாரத்தை தடுக்க இயலாது.


Tags : Spiritual Business ,Author ,preachers ,Businessman , Corporate Businessman, Spiritual Business, This is the Son of Man
× RELATED தலைவர் கலைஞரின் வரலாற்றை கவிதையாக...