×

வீட்டு வாசலில் குடும்பத்துடன் பட்டாசு வெடித்தவருக்கு அரிவாள் வெட்டு : 6 பேருக்கு வலை

சென்னை: சூளைமேடு கிழக்கு நமச்சிவாயபுரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராஜி, தீபாவளியை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு குடும்பத்துடன் வீட்டின் முன் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த 6 பேர், திடீரென  ராஜியை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினர். படுகாயமடைந்த ராஜியை குடும்பத்தினர் மீட்டு ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து சூளைமேடு  போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

*  பட்டாசு வெடிக்கும் தகராறில்  கொடுங்கையூர் திருவள்ளுவர் நகரை சேர்ந்த வினோத்குமார் (24) என்பவரை தாக்கிய  முத்தமிழ் நகரைச் சேர்ந்த ரமேஷ்குமார் (22), மணிகண்டன் (20), பழனி,  வினோத்குமார், மற்றொரு மணிகண்டன் ஆகிய  5 பேரை போலீசார் கைது செய்தனர்.
* புதுவண்ணாரப்பேட்டை காமராஜர் நகரை  சேர்ந்த விக்னேஸ்வரன் (24), தனது நண்பர் பரத் (23) என்பவருடன் நேற்று  முன்தினம் அதே பகுதியில் பைக்கில் சென்றபோது, அங்கு பட்டாசு வெடித்து  கொண்டிருந்த அஜித், வருண்  ஆகியோருடன் தகராறு ஏற்பட்டது. இதில்,  விக்னேஸ்வரன் மற்றும் அவரது நண்பரை தாக்கிய அஜித், வருண் ஆகிய இருவரை  பிடித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
*  பட்டாசு வெடிக்கும் தகராறில் புதுவண்ணாரப்பேட்டை வஉசி நகரை சேர்ந்த ஏழுமலை (63) என்பவரை தாக்கிவிட்டு பைக்கில் தப்பிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
* கொருக்குப்பேட்டை ஜெ.ஜெ.நகரை சேர்ந்த நாகராஜ் (25) என்பவரை தாக்கி ₹22 ஆயிரம், செல்போனை பறித்துச் சென்ற கொருக்குப்பேட்டை அம்பேத்கர் நகரை சேர்ந்த ஜெயக்குமார் (19), அஜித் (19) ஆகிய 2பேரை போலீசார் கைது செய்தனர்.
* மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டம் பகுதியை சேர்ந்த ரமேஷ் (35), நேற்று முன்தினம் இரவு ஆழ்வார்பேட்டை டி.டி.கே சாலை மேம்பாலத்தில் பைக்கில் சென்றபோது, பாலத்தின் தடுப்பில் மோதி, கீழே விழுந்ததில் படுகாயமடைந்து இறந்தார்.
* காசிமேடு எஸ்.எம். செட்டி தெருவை சேர்ந்த திருப்பதி (38), நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த 4 பேர், திருப்பதியை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியது. அவரை மீட்டு ஸ்டான்லி  அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து காசிமேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
* நுங்கம்பாக்கம் என்.ஹெச் சாலையை சேர்ந்த இந்துமதி (30) மற்றும் திருவனந்தபுரத்தை சேர்ந்த அனுஜா (34) ஆகியோர், நுங்கம்பாக்கம் ரோட்டில் ஆட்டோவில் சென்றபோது, பைக்கில் வந்த 2 பேர், இவர்களின் கைப்பையை பறித்துக் கொண்டு  தப்பினர்.
* புளியந்தோப்பு தட்டாங்குளம் பகுதியை சேர்ந்த உலகநாதன் (22) என்பவரை தாக்கி, ₹6 ஆயிரத்தை பறித்துச் சென்ற புளியந்தோப்பு திருவிக நகரை சேர்ந்த பரத் (19), கே.எம். கார்டனை சேர்ந்த விஜய் (21), தினேஷ் (19) ஆகிய மூவரை போலீசார்  கைது செய்தனர்.  
* புழல் பகுதியை சேர்ந்த சசிகலா (40), நேற்று முன்தினம் கோயம்பேடு பஸ் நிலையம் சென்றபோது, 13 சவரன் நகை மற்றும் ₹30 ஆயிரம் வைத்திருந்த பையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.


Tags : doorstep, cracker,web
× RELATED போதைப் பொருள் வைத்திருந்த வழக்கில்...