×

மாட்டு தொழுவமாக மாறிய செங்குன்றம் பஸ் நிலையம்: பயணிகள் அவதி

புழல்: செங்குன்றம் பஸ் நிலையம் மாட்டு தொழுவமாக  மாறியுள்ளதால் பயணிகள், பஸ் டிரைவர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். செங்குன்றம் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து தாம்பரம், கிண்டி, வள்ளலார் நகர், பாரிமுனை, திருவொற்றியூர், திருவள்ளூர், பூந்தமல்லி, அம்பத்தூர், ஆவடி, ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், கும்மிடிப்பூண்டி மற்றும் பொன்னேரி  உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. செங்குன்றம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த பஸ் நிலையத்துக்கு வந்து செல்கின்றனர். ஆனால், இங்கு பயனிகளுக்கான எந்த அடிப்படை வசதியும் கிடையாது.இந்நிலையில், சமீப காலமாக பஸ் நிலைத்தில் மாடுகள் அதிகளவில் சுற்றித் திரிவதுடன், அங்கே படுத்து ஓய்வெடுக்கின்றன. இவற்றின் கழிவுகள் பஸ் நிலைய வளாகத்தில் தேங்குவதால் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர். மேலும், பஸ் டிரைவர்கள் சிரமத்துடன் பஸ்களை இயக்கும் நிலை உள்ளது. இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் பலமுறை பயணிகள் புகார் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை என்ற குற்றச்சாட்டு  எழுந்துள்ளது.

இதுகுறித்து பஸ் டிரைவர்கள் கூறுகையில், ‘‘இந்த பஸ் நிலையம் பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. இங்கு எந்த அடிப்படை வசதியும் கிடையாது. எனவே, இன்றைய மக்கள் தொகைக்கு ஏற்ப மாற்ற வேண்டும். பஸ் நிலையத்தில் எந்த நேரமும் மாடுகள் சுற்றித் திரிவதால் பஸ்களை ஓட்ட சிரமப்படுகிறோம். நடுபாதையில் மாடுகள் படுத்துக்கொள்வதால் வண்டியை எடுப்பதற்கு காலதாமதம் ஏற்படுகிறது. எனவே, மாடுகளை பிடித்து, அதன்  உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்,’’ என்றனர்.பயணிகள் கூறுகையில், ‘‘பஸ் நிலையத்தில் பைக், கார்களை ஆங்காங்கே நிறுத்துவதால் இடம் இல்லாமல் வாகனங்கள் வருவதற்கு சிரமப்படுகின்றன. இதுபற்றி கேட்பவர்களை அடிக்க வருகின்றனர். எனவே, இந்த விஷயத்தில் போக்குவரத்து  நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பஸ் நிலையத்தில் திரியும் மாடுகளை பிடித்து, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்’’ என்றனர்.செங்குன்றம் பேரூராட்சி  அதிகாரிகள் கூறுகையில், ‘‘பேருந்து நிலையத்தில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க போக்குவரத்துக்கழக  அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கும், எங்களுக்கும் தொடர்பு இல்லை’’ என்றனர்.

Tags : Thiruvananthapuram Bus Stand ,cow stall ,Travelers Avadi Become ,Travelers Avadi , cow stall, Thiruvananthapuram, Bus Stand, Avadi
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...