×

குழந்தை சுஜித் மீட்கப்பட்டுவிட்டானா?: தமிழகம் முழுவதும் இன்று இதேபேச்சு...

சென்னை: ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் மீட்கப்பட்டு விட்டானா என்பது தான் இன்று தமிழகம் முழுதும் பரவலான பேச்சாக எழுந்துள்ளது. திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டி கிராமத்தில் ஆழ்துளை கிணற்றில் 2 வயது குழந்தை சுஜித், கடந்த 25ம் தேதி மாலை தவறி விழுந்து விட்டான். முதலில் 20 அடி ஆழத்தில் சிறுவன் இருந்தபோது, கையசைவு இருந்தது. இதையே அனைத்து தொலைக்காட்சிகளும் நேரடியாக ஒளிபரப்பு செய்தது. அந்த காட்சியை பார்த்துவிட்டு, எப்படியும் சிறுவனை மீட்பு குழுவினர் பத்திரமாக உயிரோடு மீட்டு விடுவார்கள் என்றே பொதுமக்கள் அனைவரும் நம்பினர். ஆனால் எதிர்பாராதவிதமாக சிறுவன், மீட்பு முயற்சி பலன் அளிக்காமல் 20 அடியில் இருந்து 40 அடி, 60 அடி, 70 அடி, 80 அடி என கீழே சென்று விட்டதாக கூறப்படுகிறது.

தற்போது சிறுவன் ஆழ்குழாய் கிணற்றில் விழுந்து 4 நாட்கள் கடந்து விட்டபிறகும் இன்னும் மீட்கப்படவில்லை. இதனால் சிறுவன் உயிரோடு மீட்கப்பட்டுவிடுவானா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தீபாவளி பண்டிகையைகூட கொண்டாடாமல் 200க்கும் மேற்பட்ட மீட்பு குழு வீரர்கள் சிறுவனை குழியில் இருந்து வெளியே கொண்டு வரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த காட்சிகள் அனைத்தையும் தொலைக்காட்சிகள் முழு நேரமும் ஒளிபரப்பி வருகிறது.

தற்போது தமிழக மக்களின் அனைவரின் மனதிலும் சிறுவனின் நினைப்பாக உள்ளதாக தெரிகிறது. சாதாரண பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள், உறவினர்கள் சிலர் கூடும் இடங்கள், டீக்கடைகள், அலுவலகங்கள் என அனைத்து இடங்களிலும் சிறுவன் சுஜித் பேச்சாகவே உள்ளது. பலரும், சிறுவன் சுஜித் பத்திரமாக மீட்கப்பட்டுவிடுவானா என்ற கேள்வியையே கேட்டு வருகின்றனர். அந்த அளவுக்கு தமிழகம் முழுவதும் அனைவரின் மனதிலும் சுஜித் இடம் பெற்று விட்டான். அவன் குழியில் உயிரோடு கையை அசைத்து உதவி கேட்ட காட்சிகள்தான் கண்முன் வந்து செல்கிறது.

ஆனால் மீட்பு குழுவினர் தொடர்ச்சியாக எடுக்கும் முயற்சிகள் சில நேரங்களில் தோல்வியிலேயே முடிவது தமிழக மக்கள் மட்டுமின்றி, இணையதளம் மூலம் பார்த்துக் கொண்டிருக்கும் மக்களையும் கவலை அடையச் செய்துள்ளது. இதற்கு பதில் கூற முடியாமல் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் திணறி வருகிறார்கள். எதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் சிறுவனை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று தெளிவான ஒரு பதிலும் இல்லை. இப்போது, மீட்புகுழுவினருக்கு இது மிகப்பெரிய சவாலாக இருப்பது என்னவோ உண்மை. இந்த சவாலில் மீட்பு குழுவினர் வெற்றிபெற வேண்டும் என்பதே தமிழக மக்களின் அனைவரின் விருப்பமாக உள்ளது.

Tags : Sujith , The 55-foot, borewell machine, started to recover baby Sujith
× RELATED விகேபுரம் அருகே ரேஷன் அரிசி கடத்தியவர் கைது