×

ஒப்பந்த காலம் முடிந்து ஓராண்டாகியும் 50 சதவீதம் கூட முடியாத அவலம் வேளச்சேரி, மேடவாக்கம் பகுதிகளில் ஆமை வேகத்தில் மேம்பால பணிகள்

* நெரிசலில் திணறும் வாகன ஓட்டிகள்

* நெடுஞ்சாலைத்துறை மீது குற்றச்சாட்டு


சென்னை: வேளச்சேரி, மேடவாக்கம் ஆகிய பகுதிகளில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட மேம்பால பணிகள் இதுவரை முடிக்கப்படாமல் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால், காலை முதல் இரவு வரை கடும்  போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கிழக்கு தாம்பரம் முதல் வேளச்சேரி விஜயநகர் வரை சுமார் 17 கி.மீ. சாலையை விரிவாக்கம் செய்யும் பணி கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த வழித்தட சாலையை விரிவாக்கம் செய்தால், சென்னை புறநகர் பகுதி மக்கள்  விரைவாக சென்னை நகருக்குள் வந்து செல்ல முடியும்.இந்த சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், கடந்த 2011ம்  ஆண்டுக்கு முன் இருவழி பாதையாக இருந்த சாலையை சென்டர் மீடியனுடன் ஆறு வழிச்சாலையாக  விரிவுபடுத்தவும், சாலையின் இருபுறமும்  மழைநீர் வடிகால் அமைக்கவும் அரசு உத்தரவிட்டது. தற்போது, சென்டர் மீடியன் அமைக்கும் பணி கிழக்கு தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி  விஜயநகர் வரை முடிக்கப்பட்டு விட்டது. ஆனால், சாலையின் இருபுறமும் நிலம் கையகப்படுத்தும் பணியில் இழுபறி காரணமாக சாலை விரிவாக்க  பணிகள் 60 சதவீதம் மட்டுமே முடிந்துள்ளது. பல இடங்களில் இச்சாலை மிகவும் குறுகிய நிலையில் உள்ளதால், நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு செல்லும் நிலை உள்ளது. இதனால் தினசரி கடுமையான போக்குவரத்து நெரிசல் மட்டுமின்றி அடிக்கடி விபத்துகளும்  ஏற்பட்டு பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவசர காலங்களில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் கூட விரைந்து செல்ல முடியாத நிலை உள்ளது.
சாலை விரிவாக்க பணிகள் நடந்து கொண்டு இருக்கும்போதே, மேடவாக்கம் கூட்டு ரோடு மற்றும்  மாம்பாக்கம் மெயின் ரோடு பெரும்பாக்கம் மெயின் ரோடு ஆகிய சாலைகளை இணைக்கும் வகையில் ரூ.129.29 கோடியில் மேம்பாலம் கட்டும்  பணி, கடந்த மூன்று ஆண்டுக்கு முன் தொடங்கப்பட்டது. 2018ம் ஆண்டு இறுதியில் பாலம் கட்டும் பணி முடிக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது பில்லர்கள் மட்டும் எழும்பிய நிலையில் உள்ளது. 50 சதவீதம் வேலைகள் கூட  இன்னும் முடியவில்லை. தீபாவளியையொட்டி வேலைகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், சென்னையின் நுழைவு வாயிலாக உள்ள வேளச்சேரி பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், வேளச்சேரி விஜயநகரில் வேளச்சேரி பைபாஸ் சாலை, தரமணி 100 அடி சாலை ஆகியவற்றை இணைக்கும்  வகையில் ரூ.108  கோடியில் நடை மேம்பாலத்துடன் கூடிய மேம்பாலம் கட்ட நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்தது. இந்த பணியும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் தொடங்கி நடந்து வருகிறது. இந்த மேம்பால பணிகளும் 50 சதவீதம் கூட இன்னும் முடியவில்லை. இங்கு மேம்பாலம் பணிகள் நடைபெறுவதால், புறநகர் பகுதியில் இருந்து சென்னைக்குள் செல்பவர்கள் மற்றும் சென்னை நகரில் இருந்து புறநகருக்கு செல்பவர்கள் கடந்த  இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அவதிக்குள்ளாகி வருகின்றனர்.குறிப்பாக கிழக்கு தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி செல்லும் சாலையை தினசரி பல லட்சம் பேர் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால், இங்கு நடைபெறும் சாலை விரிவாக்கம் மற்றும் மேம்பால பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால்  பொதுமக்கள் மிகவும் சிரமப்படும் நிலை உள்ளது. ஆனால், பணிகளை விரைந்து முடிக்காமல் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மெத்தப்போக்குடன் செயல்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, நாளுக்கு நாள் அதிகரித்து  வரும் நெரிசலை கருத்தில் கொண்டு, அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்தி, இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Velachery ,Medavakkam , year, Improvement , Turtle , Velachery , Medavakkam
× RELATED வேளச்சேரி – பரங்கிமலை இடையிலான...