×

திருவொற்றியூர் பகுதியில் டெங்கு காய்ச்சலுக்கு மாணவி பலி: பொதுமக்கள் பீதி

திருவொற்றியூர்: திருவொற்றியூர் சிவசக்தி நகர் 4வது தெருவை சேர்ந்தவர் முத்துகுமார். ஆட்டோ டிரைவர். இவரது மனைவி ராசாத்தி. இவர்களது மகள் மகேஸ்வரி (9). திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து  வந்தாள்.கடந்த வாரம் மகேஸ்வரிக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டது. இதனால், அங்குள்ள கிளினிக்கில் சிகிச்சை பெற்றார். ஆனால், குணமாகவில்லை. இதையடுத்து அவருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது, டெங்கு இருப்பதற்கான  அறிகுறி தெரிந்தது. இதையடுத்து ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக மகேஸ்வரியை அனுமதித்தனர்.ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று காலை மகேஸ்வரி பரிதாபமாக உயிரிழந்தாள்.  பள்ளி மாணவி டெங்குவால் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘திருவொற்றியூர் மேற்கு பகுதியில் பல இடங்களில் திறந்தவெளி கால்வாய்களில் சேறும், சகதியாக அடைத்துக் கொண்டு இருப்பதால் மழைநீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. இதனால்  கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்கள் டெங்கு, வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர்.

திருவொற்றியூர் மண்டலத்தில் பலர் டெங்கு பாதிப்புகள் இருந்தும் சுகாதார அதிகாரிகள் இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. தெருவில் தேங்கி இருக்கும் மழைநீரை அப்புறப்படுத்துவது, கொசு மருந்து அடிப்பது, பிளீச்சிங் பவுடர் போடுவது  போன்ற எந்த பணியையும் சரியாக செய்வதில்லை.இதனாலேயே இது போன்ற தொற்று நோய்கள் ஏற்படுகிறது. மேலும் திருவொற்றியூர் மண்டலத்தில் உள்ள பொறியியல் மற்றும் சுகாதார பிரிவு அதிகாரிகள் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்வதற்கு பதிலாக புதிதாக வீடு  கட்டுபவர்களை விதிமுறைகளை காரணம் காட்டி இடைத்தரகர் மூலம் பணம் வசூல் செய்வது, ஒப்பந்த துப்புரவு பணியாளர்களின் தினக்கூலி, கால்வாய்களை சுத்தம் செய்யாமலேயே சுத்தம் செய்வதாக கணக்கு எழுதி  முறைகேடு செய்வது  போன்றவைகளில்  கவனமாக உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அதிக வருவாய் இருப்பதால் பல ஆண்டுகளாக இந்த மண்டலத்தை விட்டு இடம் மாறாமல் இங்கேயே பணியில் இருப்பதில் அதிகாரிகள் ஆர்வம் காட்டுகின்றனர். எனவே மாநகராட்சி ஆணையர் திருவொற்றியூர் மண்டலத்தில் நேரடியாக ஆய்வு  செய்து  செய்து  சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும், முறைகேட்டில் ஈடுபடும் அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.


Tags : student ,area ,region ,Thiruvottiyur ,panic ,Thiruvottiyur Student , region,Thiruvottiyur, dengue fever, panic
× RELATED கோவை கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய...