சிரியாவில் பதுங்கி இருந்த வீட்டை அமெரிக்க ராணுவம் சுற்றி வளைத்ததால் ஐஎஸ் தீவிரவாத தலைவன் அல் பாக்தாதி தற்கொலை

* உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தான் * பரபரப்பு தகவல்களை வெளியிட்டார் அதிபர் டிரம்ப்

வாஷிங்டன்: சிரியாவில் அமெரிக்க ராணுவம் நடத்திய ரகசிய தாக்குதலில், ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவன் அபு பக்கர் அல் பாக்தாதி இறந்து விட்டதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். உடலில் கட்டியிருந்த குண்டுகளை  வெடிக்கச் செய்து, தனது 3 மகன்களுடன் சேர்ந்து பாக்தாதி தற்கொலை செய்து கொண்டதாகவும் அவர் பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளார்.கடந்த 2014ல் சிரியா, ஈராக்கின் சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஐஎஸ் தீவிரவாத அமைப்பு உலகெங்கிலும் பல்வேறு நாச வேலைகளை செய்தது. இதன் தலைவனாக அபு பக்கர் அல் பாக்தாதி பொறுப்பேற்ற பிறகு, ஐஎஸ்  அமைப்பின் கொடூரமான செயல்கள் தீவிரமடைந்தன. பிணைக்கைதிகளை கழுத்தறுத்து கொல்லுதல், சிரியாவில் சட்டத்தை மீறுபவர்களுக்கு மன்னிப்பில்லாத மரண தண்டனை, பெண்களுக்கு பலாத்கார சித்ரவதை என ஐஎஸ் உலக நாடுகளை அச்சுறுத்தும் அமைப்பானது. இதனால், பாக்தாதியின்  தலைக்கு ரூ.70 கோடி பரிசுத் தொகையை அமெரிக்கா அறிவித்தது. பின்னர், 2016க்குப் பிறகு இந்த அமைப்பு பலவீனமடையத் தொடங்கியது. ஆனாலும், ஐஎஸ் அமைப்பின் நாச வேலைகள் நின்றபாடில்லை. இலங்கையில் ஈஸ்டர் வெடிகுண்டு தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றது. இது சிரியாவில் தங்களின் தோல்விக்கான பழிவாங்கல் என பாக்தாதி வீடியோவில் தோன்றி  எச்சரித்தார். கடந்த மார்ச் மாத இறுதியில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவே, பாக்தாதி கடைசியாக தோன்றிய வீடியோ பதிவாகும். ஏற்கனவே இவர் கொல்லப்பட்டதாக ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் கூறிய நிலையில் வீடியோ மூலம் தான் உயிரோடு  இருப்பை நிரூபித்து வந்தவன் பாக்தாதி.

இந்நிலையில், வடமேற்கு சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் பதுங்கியிருந்த பாக்தாதி, அமெரிக்க ராணுவ சிறப்பு படையினர் நடத்திய ரகசிய தாக்குதலில் இறந்து விட்டதாக அதிபர் டிரம்ப் அறிவித்திருப்பது உலகம் முழுவதும் பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே கடந்த 2011ல் அல்கொய்தா தீவிரவாத தலைவன் ஒசாமா பின்லேடனை பாகிஸ்தானின் அபோட்டாபாத்தில் அமெரிக்க ராணுவ படையினர் சுற்றிவளைத்து ரகசிய தாக்குதல் மூலம் சுட்டுக் கொன்றனர். அதே  பாணியில் பாக்தாதியையும் சுற்றிவளைத்துள்ளனர்.  உள்ளூர் நேரப்படி கடந்த சனிக்கிழமை மாலை 5 மணி அளவில் இட்லிப் மாகாணத்தின் புறநகர் பகுதிகளில் பாக்தாதி பதுங்கியிருப்பதாக அமெரிக்காவுக்கு உளவு தகவல்கள் கிடைத்துள்ளன.  அதன் அடிப்படையில், அமெரிக்காவின் 8 ராணுவ ஹெலிகாப்டர்கள் சீறிப் பாய்ந்தன. சிரிய அரசுக்கு ஆதரவாக ரஷ்யா, ஈரானும் அங்கு உள்நாட்டு போரில் சண்டையிட்டு வருகின்றனர். அவர்கள் வசம் உள்ள பகுதிகளை தாண்டிதான் அமெரிக்க  ஹெலிகாப்டர்கள் பறக்க வேண்டும்.
மிக மிக அபாயகரமான இப்பகுதிகளில் மிக தாழ்வான உயரத்தில் பறந்த ஹெலிகாப்டர்கள் சுமார் 1 மணி நேரம் 10 நிமிடங்கள் பயணம் செய்து, பாக்தாதி பதுங்கியிருந்த கட்டிடத்தை சுற்றிவளைத்தன. முன்புற வாசலில் வெடிகுண்டுகள்  புதைத்து வைக்கப்பட்டிருந்ததால், கட்டிடத்தின் பின்பக்க சுவரை குண்டுவீசி தகர்த்தனர்.

அதிரடியாக மோப்ப நாய்களுடன், உள்ளே நுழைந்த அமெரிக்க படையினருடன் தீவிரவாதிகள் துப்பாக்கி சண்டை நடத்தினர். இதில் சில நொடிகளில் தீவிரவாதிகளை சுட்டுத் தள்ளிவிட்டு முன்னேறிய வீரர்கள், அங்கிருந்த 11 குழந்தைகள் உட்பட  சிலரை பிடித்தனர். சிலர் சரணடைந்தனர். பாக்தாதியின் நெருங்கிய கூட்டாளிகள் உள்ளிட்ட பலர் சுட்டுக் கொல்லப்பட்டனர். தன்னை அமெரிக்க வீரர்கள் சுற்றிவளைத்த தகவல் அறிந்ததும், பாக்தாதி தனது 3 மகன்களுடன் ரகசிய  சுரங்கப்பாதைக்குள் ஒளிந்து கொள்ள தப்பி உள்ளான். அமெரிக்க ராணுவத்தின் மோப்ப நாய் கே9, பாக்தாதியை மோப்பம் பிடித்து விரட்டிக் கொண்டு சுரங்கப்பாதைக்குள் நுழைந்தது. ஒருகட்டத்தில் தன்னால் தப்பிக்க முடியாது என்பதை உறுதி செய்த பாக்தாதி, உடலில் கட்டியிருந்த சக்திவாய்ந்த  வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து மகன்களுடன் தற்கொலை செய்து கொண்டான். இதனால் அந்த கட்டிடமே நொறுங்கியது. அங்கு சிதறிக் கிடந்த உடல் பாகங்களை கைப்பற்றிய அமெரிக்க படையினர் அந்த இடத்திலேயே வைத்து டிஎன்ஏ  சோதனை நடத்தினர். அதில் பாக்தாதி பலியானது உறுதி செய்யப்பட்டதும் அவர்கள் மீண்டும் ஹெலிகாப்டரில் பத்திரமாக திரும்பி உள்ளனர்.இந்த அதிரடி ஆபரேஷனில் ஒரு அமெரிக்க வீரர் கூட பலியாகவில்லை. மோப்ப நாய் கே9 மட்டும் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதல் குறித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை அதிபர் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக  அறிவித்தார். அப்போது அவர், ‘‘உலகின் நம்பர் 1 தீவிரவாதி நீதியின் முன் நிறுத்தப்பட்டுள்ளான். மூர்க்கத்தனமான, கொடூரமான அந்த தீவிரவாதி, அதே பாணியில் இறந்துள்ளான். ஐஎஸ் அமைப்பின் எதிர்கால திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு  முக்கியமான ஆவணங்கள் கிடைத்துள்ளன. இத்தாக்குதலில் அமெரிக்காவுக்கு ஒத்துழைப்பு தந்த ரஷ்யா, ஈராக், துருக்கி மற்றும் சிரியாவின் குர்து படைகளுக்கும் பாராட்டுக்கள்’’ என்றார்.
தற்ேபாது பாக்தாதி கொல்லப்பட்டாலும் கூட, ஏராளமான தீவிரவாதிகளை கொண்டுள்ள ஐஎஸ் இன்னும் வளர்ந்து வருவதாகவும், அந்த அமைப்பு முற்றிலும் அழிந்து விடவில்லை என்றும்  சர்வதேச ஊடக வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

துப்பு கொடுத்தது பாக்தாதின் மனைவி
தீவிரவாதி பாக்தாதி பதுங்கியிருக்கும் இடத்தை கண்டுபிடிக்க அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ பல மாதங்களாக முயற்சித்து வருகிறது. அவர்கள் ஈராக், சிரியாவின் குர்து உளவு அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்தனர். ஏற்கனவே 2 முறை  பாக்தாதி பதுங்கியிருந்த இடத்தில் ரகசிய தாக்குதல் நடத்த அமெரிக்க திட்டமிட்டு, கடைசி நிமிடத்தில் அது கைவிடப்பட்டது. இம்முறை அவனை விட்டுவிட்டால், அடுத்து கண்டுபிடிப்பது சிரமமாகிவிடும் என்பதால் அதிரடியாக களத்தில்  இறங்கியது. இம்முறை பாக்தாதி குறித்து முக்கிய துப்பு கிடைத்தது அவனது மனைவியிடம் இருந்துதான். சமீபத்தில் பாக்தாதியின் மனைவி மற்றும் முக்கிய கூரியருடன் மற்றொரு நபரை ஈராக் அதிகாரிகள் கைது செய்தனர். அப்போது,  பாக்தாதியின் மனைவிதான் இட்லிப் மாகாணத்தில் உள்ள ரகசிய இடம் குறித்து தகவல் தந்துள்ளார். அதன் அடிப்படையிலேயே தாக்குதல் அரங்கேற்றப்பட்டது. இதற்கிடையே, துருக்கியும் தங்களின் உளவுத்தகவல்களை அமெரிக்காவுடன்  பகிர்ந்ததாக கூறி உள்ளது.

கண்காணிப்பு அறையிலிருந்து ரகசிய ஆபரேஷன் பார்த்த டிரம்ப்
பாக்தாதியை அமெரிக்க ராணுவம் சுற்றிவளைத்த பின் நடந்த நிகழ்வுகளை, வெள்ளை மாளிகையில் உள்ள கண்காணிப்பு (சிட்சுவேஷன்) அறையில் இருந்தபடி நேரில் பார்த்ததாக அதிபர் டிரம்ப் கூறி உள்ளார். அவர், ‘‘சிட்சுவேஷன் அறையில்  நானும், ராணுவ ஜெனரல் மில்லே, துணை அதிபர் பென்ஸ் மற்றும் சிலரும் ரகசிய ஆபேரஷன் காட்சிகளை பார்த்தோம்.  அந்த காட்சிகள் மிக தெளிவாக தெரிந்தன. இது எப்படி சாத்தியம் என்பதை கூற மாட்டேன். ஆனால், நிச்சயம் ஒரு  படத்தை பார்த்த மாதிரி, அங்கு நடப்பவற்றை பார்த்தோம். அது மிகச்சிறந்த தொழில்நுட்பம்’’ என்றார்.

‘கோழையை போல்...நாய் போல இறந்தான்’
அமெரிக்க படைகள் சுற்றி வளைத்ததும், பாக்தாதி உயிருக்கு பயந்து சுரங்கப்பாதைக்குள் கதறி அழுது கொண்டே ஓடியதாக அதிபர் டிரம்ப் கூறி உள்ளார். அவர் கூறுகையில், ‘‘மற்றவர்களை மிரட்டிய பாக்தாதி, தனது கடைசி நிமிடங்களை  உச்சகட்ட பயத்திலும், பீதியிலும் கழித்துள்ளான். வெளியேற வழியில்லாத சுரங்கப்பாதை முழுவதும் கதறி அழுதபடி, விம்மியபடி, வெலவெலத்துப் போய் ஓடினான். அவன் ஒரு ஹீரோவாக சாகவில்லை. கடைசியில் ஒரு கோழையைப் போல்,  ஒரு நாயைப் போல் செத்தான்’’ என்றார்.

2 மணி நேர ஆபரேஷன்
பாக்தாதி வீட்டின் பின்புற சுவரை தகர்த்து உள்ளே நுழைந்த அமெரிக்க சிறப்பு படையினர் 2 மணி நேரத்தில் ஆபரேஷனை முடித்துள்ளனர். இதில் பாக்தாதியின் டிஎன்ஏ மற்றும் உடல் பாக அடையாளங்களை வைத்து சில நிமிடங்களில் அவர்  இறந்ததை உறுதிபடுத்தியதாக அதிபர் டிரம்ப் கூறி உள்ளார். ஏற்கனவே 2000ம் ஆண்டில் பாக்தாதி ஈராக்கில் உள்ள அமெரிக்க முகாமில் கைதாகி விடுவிக்கப்பட்டுள்ளார். அப்போது அவரது டிஎன்ஏ எடுக்கப்பட்டுள்ளது. அதை வைத்து சில  நிமிடங்களில் உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், டிஎன்ஏ பரிசோதனை செய்யும் அதிநவீன கருவியில், ஒரு டிஎன்ஏவை சரியாக உறுதி செய்ய 90 நிமிடங்கள் ஆகும் என நிபுணர்கள் கூறி உள்ளனர். இந்த ஆபரேஷனில் நவீன  ஆயுதங்களுடன் ரோபோ ஒன்றும் அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் கடைசி நிமிடத்தில் ரோபோ பயன்படுத்தப்படவில்லை.

ரஷ்யா சந்தேகம்
இந்த தாக்குதலை சவுதி அரேபியா, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் பாராட்டி உள்ள போதிலும், ரஷ்யா சந்தேகத்தை கிளப்பி உள்ளது. ‘‘அமெரிக்க போர் ஹெலிகாப்டர்கள் சென்றது பற்றியோ, அவர்கள் செல்ல இருப்பது பற்றியோ  எங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை’’ என கூறி உள்ளது. அதே சமயம், அடுத்த ஆண்டு அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடக்க உள்ள நிலையில் இத்தாக்குதல் நடவடிக்கை டிரம்ப் அரசின் செல்வாக்கை பல மடங்கு உயர்த்தக் கூடும். எனவே  அரசியல் ஆதாயத்திற்கான யுக்தியா என்றும் சந்தேகம் கிளப்பப்படுகிறது.

Tags : al-Baghdadi ,ISIS ,suicide ,military raid house ,US ,military ,house ,Syria Syria ,Al Baghdadi , US military, Syria, IS militant ,leader , Baghdadi
× RELATED வெளிநாடுகளில் கொரோனா வைரஸ் வேகமாக...