×

யுபிஐ பண பரிவர்த்தனை 100 கோடியை தாண்டியது

புதுடெல்லி: மொபைல் போன்கள் மூலம் மேற்கொள்ளப்படும் யுபிஐ பரிவர்த்தனை எண்ணிக்கை 100 கோடியை தாண்டியுள்ளது. வெளிநாடுகளிலும் இந்திய யுபிஐ பரிவர்த்தனையை ஏற்க வகை செய்ய தேசிய பண பரிவர்த்தனை கழகம்  திட்டமிட்டு வருகிறது.கருப்பு பணத்தை ஒழிக்க பழைய 5,00, 1,000 நோட்டு செல்லாது என மத்திய அரசு 2016ம் ஆண்டு நவம்பரில் அறிவித்தது. இதன்பிறகு புதிதாக 500, 2,000 நோட்டு அச்சிட்டு வெளியிடப்பட்டன. ஆனால், பணப்புழக்கம் அடியோடு முடங்கியது.  பணமற்ற பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் யுபிஐ அடிப்படையிலான பீம் செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்தது.

 பணமதிப்பு நீக்கத்துக்கு பிறகு யுபிஐ பரிவர்த்தனை பிரபலம் அடைந்தது. கூகுள் பே, போன் பே, பே டிஎம் உட்பட பல்வேறு தனியார் நிறுவனங்கள், வங்கிகள் சார்பில் பிரத்யேக யுபிஐ செயலிகள் அறிமுகம் செய்யப்பட்டன. இதன்மூலம் வங்கிக்  கணக்கில் இருந்து மொபைல் போன் மூலம் பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டது. பணத்தட்டுப்பாடு நீங்கும் வரை யுபிஐ மற்றும் கார்டு பரிவர்த்தனைகள் அதிகரித்தன. பயன்படுத்த எளிது என்பதால், யுபிஐ பரிவர்த்தனையை மக்கள் அதிகமாக மேற்கொள்ள தொடங்கி விட்டனர். சமீபத்திய புள்ளி விவரப்படி, கடந்த செப்டம்பரில் யுபிஐ பரிவர்த்தனை எண்ணிக்கை 100 கோடியை தாண்டி விட்டது. இதில் பீம்,  கூகுள் பே, போன் பே, பே டிஎம் ஆகிய 4 யுபிஐ ஆப்ஸ்கள் பங்களிப்பு மட்டும் 90 சதவீதம் என கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, ஐக்கிய அரபு எமிரேட், சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் யுபிஐ பரிவர்த்தனையை ஏற்க வகை செய்ய தேசிய பண  பரிவர்த்தனை கழகம் திட்டமிட்டுள்ளது.

Tags : UBI , UBI Cash ,Transaction, 100 crore
× RELATED என் மகனை உங்களிடம் ஒப்படைக்கிறேன்.....