×

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் தொடரும் குழப்பம் 50:50 பங்கீடு குறித்த உண்மையை பேசுங்கள்: பா.ஜ.வுக்கு சிவசேனா எம்பி சவால்

மும்பை: மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க பாஜ - சிவசேனா கட்சிகளிடையே மோதல்  ஏற்பட்டுள்ள நிலையில், `தேர்தலுக்கு முன் அமித் ஷா, உத்தவ் தாக்கரே பேசிய  50:50 பங்கீடு குறித்த உண்மையை பேசுங்கள்’ என்று சிவசேனா எம்பி  சஞ்சய்  ராவத் பாஜ.வுக்கு சவால் விடுத்துள்ளார்.மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் பாஜக - சிவசேனா கூட்டணி 158, காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி 106 தொகுதிகளிலும்  வெற்றி பெற்றுள்ளது. பாஜ தனித்து 105 இடங்களையும், சிவசேனா 56  தொகுதிகளையும்  கைப்பற்றியுள்ளன. இதையடுத்து, சிவசேனா, பாஜ இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதால், அங்கு ஆட்சி  அமைப்பதில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது.ஆட்சி அமைக்க 145  இடங்கள் தேவை என்ற நிலையில், சிவசேனா உதவியின்றி பாஜ ஆட்சியமைக்க முடியாது.  தேர்தலுக்கு முன் போடப்பட்ட ஒப்பந்தப்படி, 50:50  அடிப்படையில் அரசு அமைக்கப்படும் என்று சிவசேனா கூறி வந்தது.  அதேபோல,  சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரேவுக்கு துணை  முதலமைச்சர் பதவி கோரப்படும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.இதற்கிடையே,  சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான சமானாவில், `முதல்வர் தேவேந்திர பட்னவிஸ்  தலைமையிலான பாஜவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இது அதிகார அகந்தையில்  நடந்துகொண்டவர்களுக்கு கிடைத்த  பரிசு. யாரும் எதிர்பாராத வண்ணம், சரத்  பவாரின் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சி தேர்தலில் சிறப்பாக  பணியாற்றி, மீண்டு வந்துள்ளது’ என்று நேற்று கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.

மேலும்,  `இந்தியா, மகாராஷ்டிராவின் எதிர்காலம் குறித்து மயான அமைதி நிலவுகிறது.  நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் இந்த கேள்வி கேட்கப்படுகிறது.  பொருளாதார மந்த நிலையால், சந்தையில் விற்பனை 40 சதவீதம் வரை  வீழ்ச்சி  அடைந்துள்ளது. மறுபுறம், பல வங்கிகள் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி  தவிக்கின்றன. மக்கள் கைகளில் செலவு செய்யக் கூட பணமில்லை. ரிசர்வ்  வங்கியின் உபரி நிதியில் இருந்து மத்திய அரசு கடன் வாங்குகிறது. தீபாவளி  சந்தையிலும் அமைதியே நிலவியது’ என்று கூறப்பட்டுள்ளது.பாஜ.  தலைவர் அமித் ஷா நாளை மும்பை வர உள்ள நிலையில், சிவசேனாவின் இந்த தலையங்க  கட்டுரை இருகட்சிகளிடையே ஏற்பட்டுள்ள பிளவை மேலும் வலுப்படுத்தும் விதமாக  அமைந்துள்ளதாக பாஜ வட்டாரங்கள் அதிருப்தி  தெரிவித்துள்ளன.இந்நிலையில்,  சிவசேனாவின் மூத்த தலைவரும் எம்பி.யுமான சஞ்சய் ராவத் கூறுகையில்,  ‘‘மக்களவை தேர்தலுக்கு முன் அமித் ஷா, உத்தவ் தாக்கரே, தேவேந்திர பட்னவிஸ்  ஆகியோர் கூடி பேசியபடி ஆட்சி, பதவியில் சரிபாதி பங்கு தர  வேண்டும். பாஜ  ராமரின் பெயரை கூறி வருகிறது. ராமர் கோயிலும் கட்டப் போகிறது. ராமர்  உண்மையின் மறுவடிவமானவர். எனவே, 50:50 பங்கீடு குறித்த உண்மையை பாஜ. பேச  முன்வர வேண்டும்’’ என்று  தெரிவித்துள்ளார்.ஏற்கனவே, சிவசேனா - தேசியவாத காங்கிரஸ்  தலைவர்கள் பரஸ்பரம் ஒத்த கருத்துகளை தெரிவித்து வருவதால், பாஜ அல்லாத அரசு  அமைக்கும் முயற்சிகளும் நடைபெற்று வருவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுயேட்சைகளை இழுப்பதில் போட்டி
அதிகாரத்தில் சமபங்கு பெற சிவசேனா  பேரம் பேசி வரும் நிலையில், சுயேச்சை எம்எல்ஏக்கள் மற்றும் சிறிய  கட்சிகளின் ஆதரவை பெறும் முயற்சியில் பாஜ - சிவசேனா இறங்கி உள்ளன.இருகட்சிகளும் சேர்ந்து 5  எம்எல்ஏக்கள், அதாவது மூன்று சுயேச்சைகள் மற்றும் ஒரு சிறிய அணியைச் சேர்ந்த  இரண்டு எம்எல்ஏக்களின் ஆதரவை பெற்றுள்ளன. கீதா  ஜெயின், ராஜேந்திர ரவுத், ரவி ராணா ஆகிய 3 சுயேட்சை எம்எல்ஏக்கள்   பாஜ.வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதே போல, மாநில கட்சிகளில் அச்சல்பூரைச் சேர்ந்த பச்சு காடு, மெல்காட்டைச் சேர்ந்த சகா  ராஜ்குமார் படேல் ஆகியோர் சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவைச்  சந்தித்து, தங்களது  ஆதரவை தெரிவித்துள்ளனர்.

கவர்னருடன் தனித்தனியாக சந்திப்பு
ஆட்சி அமைப்பதில் குழப்பம் நீடித்து வரும் நிலையில், முதல்வர் பட்னவிஸ் மற்றும் சிவசேனா மூத்த தலைவரும், மாநில  போக்குவரத்து அமைச்சருமான திவாகர் ரவுடே ஆகியோர் நேற்று மாநில ஆளுநர்  பகத்சிங்  கோஷ்யாரியை  தனித்தனியாக சந்தித்தனர். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது  என ராஜ்பவன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இரு கட்சிகளும்  ஆளுநரிடம் ஆட்சி அமை க்க உரிமை கோருவது தொடர்பாக பேசி இருக்கலாம் என  தகவல்கள்  தெரிவிக்கின்றன.

Tags : BJP ,Maharashtra ,Shiv Sena ,Truth About Partnership , Continuing , Maharashtra,dividend, Shiv Sena MP's ,
× RELATED மகாராஷ்டிராவில் ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்து!!