பாவூர்சத்திரம்: பாவூர்சத்திரம் அருகே தீபாவளியன்று கிணற்று திண்டில் பேசிக்கொண்டிருந்த பாட்டி தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார். நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டி தெற்கு தெருவைச்சேர்ந்தவர் நயினார். இவரது மனைவி ஆறுமுகவடிவு (85). இவர்களுக்கு சந்திரசேகர் என்ற மகன், ஜானகி, ராசாத்தி என்ற இரு மகள்கள். அனைவருக்கும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகிறார்கள். சந்திரசேகர் தூத்துக்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் லிப்ட் ஆபரேட்டராக உள்ளார். இந்நிலையில் ஆறுமுகவடிவு கணவர் நயினார் இறந்து விட்டதால் அவர் தனியாக வசித்து வந்தபோது சில ஆண்டுகளுக்கு முன் மகள் ஜானகியின் கணவரும் இறந்ததால் அவர் திப்பணம்பட்டி வந்து தாயுடன் தங்கி விட்டார். இதற்கிடையில் இவர்கள் வீடு அருகே ஆலடி புதியவன்கோயிலுக்கு சொந்தமான 60 ஆடி ஆழ கிணறு உள்ளது. இந்த கிணற்று திண்டில் அமர்ந்து ஆறுமுகவடிவு தண்ணீர் எடுக்க வருபவர்களிடம் பேசிக்கொண்டிருப்பது வழக்கமாம்.
இதுபோல் தீபாவளி பண்டிகையான நேற்றும் கிணற்று திண்டில் இருந்து பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென்று தவறி கிணற்றுக்குள் விழுந்து விட்டார். அதில் 20 அடி தண்ணீர் இருந்ததால் அவர் மூச்சு திணறி பரிதாபமாக இறந்தார்.
தகவலறிந்து தென்காசி தீயணைப்பு நிலைய அலுவலர் விஜயன் தலைமையில் ஏட்டு செல்வம், வீரர்கள் ஜெயபிரகாஷ்பாபு, ராஜ்குமார் மற்றும் பாவூர்சத்திரம் எஸ்ஐ சின்னத்துரை ஆகியோர் சம்பவ இடம் வந்து ஆறுமுகவடிவு உடலை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீபாவளியன்று இந்த சம்பவம் நடந்ததால் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.