×

குழந்தை சுஜித்தை மீட்க முயற்சி..: போர்வெல் மூலம் துளையிடும் பணி முடிந்ததையடுத்து ரிக் இயந்திரம் மூலம் அகழ்ந்தெடுக்கும் பணி துவக்கம்!

திருச்சி: குழந்தை சுஜித்தை மீட்க போர்வெல் மூலம் துளையிடும் பணி முடிந்ததையடுத்து ரிக் இயந்திரம் மூலம் அகழ்ந்தெடுக்கும் பணி தொடங்கியுள்ளது. 88 அடியில் சிக்கி உள்ள சுஜித் மீட்க 98 அடிக்கு பள்ளம் தோண்டும் பணி நேற்று காலை முதல் நடந்து வருகிறது. ஆனால் பாறைகள் கடினமாக இருந்ததால் இதுவரை 45 அடி மட்டுமே தோண்டப்பட்டுள்ளது. முதல் ரிக் இயந்திரம் மூலம் 35 அடியும், 2வது ரிக் இயந்திரம் மூலம் 10 அடியும் தோண்டப்பட்டுள்ளது. பாறை கடினமாக இருந்த போதிலும், 40 அடிக்கு மேல் கரிசல் மண் இருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டதால், தொடர்ந்து பள்ளம் தோண்டப்படுவதாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். ஆனால் 45 அடி பள்ளம் தோண்டப்பட்ட நிலையில் 2வது ரிக் இயந்திரத்தில் மீண்டும் பழுது ஏற்பட்டது. இதனால் பள்ளம் தோண்டும் பணி சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.

இதையடுத்து, தோண்டப்பட்டுள்ள 45 அடி பள்ளத்திற்குள் தீயணைப்பு வீரர் ஒருவர் அனுப்பப்பட்டு, ஆய்வு செய்ய வைக்கப்பட்டார். பாறையின் தன்மையை கண்டறிந்த அவர், குறியீடு செய்துவிட்டு வெளியே வந்தார். பின்னர், கடினமான பாறைகள் என்பதால் அவற்றை உடைக்க ரிக் இயந்திரத்திற்கு பதிலாக போர்வெல் இயந்திரத்தை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. 1750 குதிரை திறன் கொண்ட போர்வெல் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணி துவங்கியது. இந்நிலையில், சுமார் ஒரு மணி நேரம் கழித்து, போர்வெல் மூலம் துளையிடும் பணி முடிந்ததையடுத்து ரிக் இயந்திரம் மூலம் அகழ்ந்தெடுக்கும் பணி தொடங்கியுள்ளது. தோண்டப்பட்ட 45 அடி குழிக்குள் போர்வெல் மூலம் 5 துளைகள் போடப்பட்டுள்ளன. 5 துளைகளில் ஒன்று 40 அடியும், மற்ற 4 இல் தலா 15 அடியும் போடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குழந்தையின் மீது படிந்துள்ள மணலை உறிஞ்சி எடுக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படவுள்ளாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Sujith ,baby ,Borewell , Baby sujith, borewell, rig machine, Manapparai, nadukatupatti
× RELATED ஜெய், யோகி பாபு இணையும் பேபி அன்ட் பேபி