குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணி குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டறிந்தார் பிரதமர் மோடி

டெல்லி: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜித்தை மீட்கும் பணியானது 70 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் நிலையில் ஆழ்துளை கிணற்றில் சிறுவன் சுஜித் நலமுடன் மீட்கப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி பிரார்த்தனை செய்வதாக தனது ட்விட்டர் பதிவில் பதிவிட்டுள்ளார். தொடர்ந்து, அங்கு நடைபெறும் மீட்பு பணிகள் குறித்தும், சுஜித்தை பாதுகாப்பாக மீட்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்தும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் தொலைபேசி வாயிலாக அவர் கேட்டறிந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் சிறுவன் சுஜித்தை பாதுகாப்பாக மீட்கப்படுவதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுவதாக அவர் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். இதையடுத்து மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். திருச்சி மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில் 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்துவிட்டான்.

அந்த குழந்தையை காப்பாற்றுவதற்காக அப்பகுதியில் 4ம் நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. அவனை காப்பாற்ற ராட்சத கருவிகள் மூலம் மண்ணை தோண்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், அந்த பகுதி மக்கள் என அனைவரும் அக்குழந்தையை வெளியே கொண்டுவருவதை மட்டுமே முக்கிய நோக்கமாக கருதி பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர். முதல் ரிக் இயந்திரம் பழுதானத்தை தொடர்ந்து மற்றோரு இயந்திரம் கொண்டுவரப்பட்டு மீண்டும் பணியை தொடங்க ஆரம்பித்தனர். பாறைகள் மிகவும் கடினமாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது இரண்டாவதாக கொண்டுவரப்பட்ட ரிக் இயந்திரமும் பழுதடைந்தது.

இதனை தொடர்ந்து போர்வெல் இயந்திரத்தை கொண்டு குழந்தையை மீட்டெடுக்கும் பணி நடைபெற்று வந்தது. போர்வெல் இயந்திரம் மூலம் தற்போது 65 அடி ஆழம் வரை 3 இடங்களில் துளையிட்டுள்ளது. போர்வெல் மூலம் 85 அடி ஆழம் வரை துளையிட அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். 98 அடி வரை 1 மீட்டர் விட்டக் குழி தோண்ட திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தம் 6 இடங்களில் துளையிட்ட பின்னர் ரிக் இயந்திரம் மூலம் மீண்டும் துளையிடும் பணி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டது. போர்வெல் மூலம் துளையிடும் பணி முடிந்ததையடுத்து ரிக் இயந்திரம் மூலம் அகழ்ந்தெடுக்கும் பணி தொடங்கியது. போர்வெல் மூலம் பாறையில் 6 துளைகள் போடப்பட்டன. இந்நிலையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் சிறுவன் சுஜித்தை மீட்கும் பணி குறித்து முதலமைச்சரிடம் கேட்டறிந்தார்.

Related Stories:

>