×

காஞ்சி கூட்டுறவு வங்கியில் தீ: கம்ப்யூட்டர், ஆவணங்கள் எரிந்தது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில் இன்று காலை தீவிபத்து ஏற்பட்டது.காஞ்சிபுரம் காமராஜர் சாலையில் தாலுகா அலுவலகம் எதிரே காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி உள்ளது. இங்கு பணியாற்றும் ஊழியர்கள் வழக்கம் போல கடந்த வெள்ளிக்கிழமை மாலை, வங்கியை பூட்டிவிட்டு வீடுகளுக்கு சென்றனர். தீபாவளியை முன்னிட்டு சனி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை. இன்று அதிகாலை 5.30 மணிக்கு பணிக்கு வந்த காவலாளி, வங்கியில் இருந்து புகை வருவதை பார்த்து அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சித்தனர்.

இதற்கிடையில் தகவல் அறிந்து வங்கி மேலாளர் ரவீந்தரன் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். தீயணைப்பு படை வீரர்கள், தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில், கேஷியர் அறை, கம்ப்யூட்டர் மற்றும் ஆவணங்கள் எரிந்து சாம்பலாகின. இதுகுறித்து வங்கி மேலாளர் ரவீந்தரன் கொடுத்த புகாரின்பேரில், சிவகாஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து வங்கியில் மின்கசிவினால் தீவிபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று விசாரித்து வருகின்றனர்.

Tags : Kanchi Co-operative Bank , Fire,Kanchi,Co-operative Bank,Computer, documents , burnt
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...