×

வேலூர் பெண்கள் சிறையில் நளினி 3வது நாள் உண்ணாவிரதம்

வேலூர்: வேலூர் மத்திய சிறையில் முருகனை கொடுமைப்படுத்துவதாக கூறி அவரது மனைவி நளினி இன்று 3வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் மத்திய சிறையிலும், அவரது மனைவி நளினி பெண்கள் தனிச்சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த 18ம்தேதி சிறையில் அதிகாரிகள் நடத்திய ஆய்வில் முருகன் அறையில் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதையடுத்து முருகனுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து சலுகைகளும் 3 மாதங்களுக்கு ரத்து செய்து, அவரை தனிச்சிறையில் அடைத்துள்ளனர். இதற்கிடையில், நளினி கடந்த 25ம் தேதி சிறை கண்காணிப்பாளருக்கு மனு கொடுத்து 26ம் தேதி முதல் உண்ணாவிரதத்தை தொடங்கி உள்ளார்.

இதற்கிடையில், அவர்களது வழக்கறிஞர் புகழேந்தி சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘முருகன் கடந்த 7 நாட்களாக சிறையில் கொடுக்கும் உணவை எடுத்து கொள்ளாமல், பழம், பால் மட்டும் சாப்பிட்டு வருகிறார். செல்போன் பறிமுதல் செய்யப்பட்ட பிறகு சிறை நிர்வாகம் முருகனை தனி சிறையில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியதாகவும், சிறை நிர்வாகம் நடத்தும் கொடுமை குறித்து முருகன், முதல்வருக்கு 4 பக்க மனு எழுதி உள்ளார். இதையடுத்து பெண்கள் சிறையில் உள்ள நளினி, முருகனின் உயிரை காப்பாற்றவே உண்ணாவிரதம் மேற்கொண்டு உள்ளார்’ என்றார். தொடர்ந்து 3வது நாளாக நளினி இன்றும் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். வேலூர் மத்திய சிறையில் உள்ள முருகனும் உண்ணாவிரதம் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் சிறைத்துறையிடம் முறைப்படி மனு அளித்தால், உண்ணாவிரதம் இருப்பதாக தெரிவிக்கப்படும், தற்போது முருகனின் உடல்நிலை குறித்தும் கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று சிறைத்துறையினர் தெரிவித்தனர்.


Tags : Nalini ,Vellore Girls Prison Vellore Girls Prison , Nalini,fasting, Vellore ,Girls ,Prison
× RELATED முருகன், நளினி உறவினர்களுடன் பேச...