×

தீபாவளியை ஒட்டி தமிழகத்தில் படுஜோராக நடைபெற்றுள்ள மது விற்பனை..: கடந்த ஆண்டை காட்டிலும் ரூ.130 கோடி அதிகம்!

சென்னை: தமிழகத்தில் இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு 3 நாட்களில் ரூ.455 கோடி ரூபாய்க்கு டாஸ்மாக் மது விற்பனையாகி உள்ளது. இது கடந்த ஆண்டு தீபாவளி விற்பனையைவிட அதிகமாகும். தமிழகத்தில் தீபாவளிப் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. தீபாவளிக்காக கடந்த சனிக்கிழமை முதல் 3 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி தமிழகம் முழுவதும் டாஸ்மாக்கில் மது விற்பனை அமோகமாக நடைபெற்றுள்ளது. இந்த நிலையில், இந்த ஆண்டின் தீபாவளி மது விற்பனை விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி கடந்த அக்டோபர் 25ம்(வெள்ளிக்கிழமை) தேதியன்று ரூ.100 கோடிக்கும், அக்டோபர் 26ம்(சனிக்கிழமை) தேதியன்று ரூ.183 கோடிக்கும், தீபாவளி நாளான அக்டோபர் 27ம்(ஞாயிறு) தேதியன்று ரூ.172 கோடிக்கும் மதுபானம் விற்பனையாகியுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவலின் அடிப்படையில், தீபாவளியை ஒட்டி தமிழகத்தில் மொத்தமாக ரூ.455 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் மது விற்பனை இந்த ஆண்டு ரூ130 கோடி அதிகரித்துள்ளது. கடந்தாண்டு தீபாவளியின்போது விற்பனையான ரூ.325 கோடியை விட தற்போது ரூ.130 கோடி அதிகமாக மது விற்பனை செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மதுப்பிரியர்கள் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளனர். மது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதை அறிந்தும் அதனை உட்கொண்டு வருகின்றனர். இந்த வருடம் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க 2 மணிநேரம் மட்டுமே ஒதுக்கப்படும் நிலையில், ஏன் உடலுக்கு கேடு விளைவிக்கும் மதுவுக்கு தடை விதிக்கவில்லை என நெட்டிசன்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர். ஆனால் இத்தகைய பண்டிகை நாட்களில் தான் மது விற்பனை ஜோராக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Tags : Tamil Nadu ,Diwali , Diwali, Tamil Nadu, Liquor Sales, Tasmac
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...