×

குழந்தையை மீட்பதற்கு நம்மிடம் உரிய கருவிகள் இல்லை என்பது மிகுந்த வருத்தமளிக்கிறது: மருத்துவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த பின் பாலகிருஷ்ணன் பேட்டி

சென்னை: ராஜீவ் காந்தி மருத்துவமனையில் போராடும் மருத்துவர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சந்தித்து இன்று ஆதரவு தெரிவித்தார். தமிழகம் முழுவதும், அனைத்து அரசு மருத்துவர்களும் காலமுறை ஊதிய உயர்வு, பதவி உயர்வு வேண்டும், அரசு பட்டமேற்படிப்பு மருத்துவ மாணவர்களுக்கு கலந்தாய்வு மூலம் பணியமர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதே போல், நாமக்கல் மாவட்ட அனைத்து அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில், நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் கடந்த, 25 முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை ராஜீவ் காந்தி மருத்துமனையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், மருத்துவர்களின் போராட்டத்திற்கு கட்சி சார்பில் ஆதரவு தெரிவித்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மருத்துவர்களின் கோரிக்கையை 6 வாரத்தில் நிறைவேற்றுவதாக கூறிய அரசு, 10 வாரம் ஆன நிலையிலும் அதனை நிறைவேற்றவில்லை. எனவே, வேறு வழியில்லாமலே மருத்துவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருவது அவர்களுடைய பிரச்சனை மட்டுமல்ல.

இது, தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் சாதாரண ஏழை எளிய, நடுத்தர மக்களுடைய வாழ்வு பிரச்சனை ஆகும். எனவே, அரசு உடனடியாக மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, சமூகமான தீர்வு காண வேண்டும் என்று கூறியுள்ளார். நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால், தமிழக அரசே பெறுப்பேற்க வேண்டுமே தவிர, மருத்துவர்களால் எந்த விதத்திலும் பொறுப்பேற்க முடியாது. மேலும் பேசிய அவர், சுர்ஜித் என்கிற குழந்தை ஆழ்துளை கிணற்றில் மாட்டிக்கொண்டு தவிப்பது தமிழகத்தையே துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள மக்கள் அனைவரும் கவலை தோய்ந்த முகத்தோடு துக்கத்தில் மூழ்கிக்கொண்டு இருக்கிறார்கள்.

பல கட்டமாக மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், குழந்தையை தற்போது வரை மீட்க முடியவில்லை. நவீன தொழில்நுட்பம் கொண்ட இந்த காலத்திலும், பூமிக்கடியில் சிக்கியுள்ள குழந்தையை மீட்பதற்கு நம்மிடம் உரிய கருவிகள் இல்லை என்பது மிகுந்த வருத்தமும் வேதனையையும் அளிக்கிறது. எனினும், மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களின் பணியை நான் பாராட்டுகிறேன். எப்படியாவது தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு, குழந்தையை உயிரோடு மீட்டெடுக்கும் நடவடிக்கையை அரசு துரிதமாக மேற்கொள்ள வேண்டும், என கேட்டுக்கொள்கிறேன், என்று கூறியுள்ளார்.


Tags : doctors ,interviews ,Balakrishnan , Doctors Struggle, Marxist Communist, Balakrishnan, Surjit
× RELATED நாட்டிலேயே தமிழகத்தில் தான் கொரோனாவுக்கு அதிக மருத்துவர்கள் பலி!!