×

முழுமையாக பள்ளம் தோண்ட குறைந்தது 12 மணி நேரமாகும், பாறை நிறைந்த பகுதி என்பதால் சவாலாக உள்ளது: வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன்

திருச்சி: துளையிடும் பணி திருப்தி தரும் வகையில் இல்லை, பாறை நிறைந்த பகுதி என்பதால் சவாலாக உள்ளது என வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக்குள் அக்.,25 அன்று மாலை 5.40 மணிக்கு சிறுவன் சுஜித் தவறி விழுந்தான். சிறுவனை மீட்பதற்கான பணி தொடர்ந்து 4வது நாளாக இன்றும் நடந்து வருகிறது. 88 அடியில் சிக்கிக் கொண்டிருக்கும் சுஜித்தை மீட்பதற்காக, அவன் சிக்கி இருக்கும் குழிக்கு 3 மீட்டர் தொலைவில் 110 அடிக்கு குழி தோண்டப்பட்டு வருகிறது. பாறைகள் கடினமாக இருந்ததால் தாமதமாகி வந்த துளையிடும் பணி, காலை 9 மணி முதல் வேகமெடுத்துள்ளது. கடினமாக இருந்த பாறைகளின் தன்மை தற்போது இலகுவாக இருப்பதாக கூறப்படுகிறது.

பாறையை உடைக்கும் போது தூசு வெளியேறாமல் இருக்க தண்ணீர் ஊற்றப்பட்டு வருகிறது. 25 மணி நேரமாக ரிக் இயந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டு வரும் நிலையில், தற்போது கடின பாறைகளை உடைக்க சென்னையிலிருந்து ஆகாஷ் என்ற புதிய டிரில் பிட் இயந்திரம் வரவழைக்கப்பட உள்ளது. இந்நிலையில் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அவர் பேசியதாவது; மீட்பு பணி தொடர்ந்து இரவு பகலாக நடைபெற்று வருகிறது. நடைபெற்று வரும் மீட்பு பணி திருப்தி அளிக்கும் வகையில் இல்லை.

பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். டங்க்ஸ்டன் கார்பைடு உள்ள எந்திரம் துளையிட பயன்படுத்தப்படுகிறது. பாறையை துளைத்து எடுத்தால் அருகில் உள்ள ஆழ்துளை கிணறு நொறுங்கிவிடும். எல் அண்ட் டி நிறுவனத்தின் ஜெர்மன் மிஷின் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் அனைத்தும் சுர்ஜித்தின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. உரிய முறையில் சரியான முறையில் மீட்பு பணி நடைபெற்று வருகிறது. ஆழ்துளை கிணற்றுக்குள் குழந்தை 88 அடியிலே உள்ளது. தொடர்ந்து கேமிரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. குழந்தை சுர்ஜித் கீழே சென்று விடாமல் இருக்க ஏர்லாக் முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆழ்துளை கிணற்றில் இருந்து குழந்தையை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெறும்.

மீட்புப் பணி பற்றி மனோதத்துவ நிபுணர்கள் உதவியுடன் சுஜித் நிலைபற்றி பெற்றோர்க்கு தகவல், ஆலோசனை வழங்கபடுகிறது. குழந்தையின் நிலை குறித்து வெளிப்படையாக பேசுவது பெற்றோர்க்கு தேவையற்ற கவலையை ஏற்படுத்தும். சுஜித் விழுந்துள்ள ஆழ்துளை கிணற்றில் பலூன் தொழில்நுட்பத்தை பயன்படுத்திட போதிய இடைவெளி இல்லை. குழந்தைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம். தற்போது துளையிடும் இடத்தில இருந்து சற்றுதூரத்திலும் பாறை இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஒரு மணி நேரத்தில் அரை மீட்டர் ஆழம் மட்டுமே தோண்ட முடிகிறது. முழுமையாக பள்ளம் தோண்ட குறைந்தது 12 மணி நேரம் ஆகும். தொழில்முறையில் என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ அதை தான் செய்து வருகிறோம்.

Tags : Revenue Administration ,Radhakrishnan ,area , Ground, Rock, Commissioner of Revenue Administration, Radhakrishnan
× RELATED தி.நகர் ரங்கநாதன் தெருவில்...