×

அரியானா மாநிலத்தின் முதல்வராக மீண்டும் பதவி ஏற்றார் மனோகர் லால் கத்தார்: துணை முதல்வராக துஷ்யந்த் சவுதாலா பதவியேற்பு

சண்டிகர்: அரியானா மாநிலத்தின் முதல்வராக மனோகர் லால் கத்தார் இன்று மீண்டும் பதவி ஏற்றார். முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலாவின் பேரன் துஷ்யந்த் சவுதாலா துணை முதல் மந்திரியானார். 90 இடங்களை கொண்ட அரியானா  சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 40 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது. காங்கிரஸ் 31 இடங்களை கைப்பற்றி உள்ளது. ஆட்சி அமைப்பதற்கு 46 இடங்கள் தேவை என்ற நிலையில் அந்த எண்ணிக்கையை பாஜகவால் எட்ட இயலவில்லை. தனிப்பெரும் கட்சியாக நீடித்த போதிலும் பாரதிய ஜனதாவால் போதிய இடங்களை பெற இயலாததால் ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலை உருவானது. மேலும், தேவிலாலின் பேரனான துஷ்யந்த் சவுதாலா தலைமையிலான ஜனநாயக ஜனதா கட்சி 10 இடங்களை கைப்பற்றிஉள்ளது. இதற்கிடையே, சுயேட்சைகள் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டது. 5 சுயேட்சைகள் பாஜகவுக்கு ஆதரவு அளிக்க முன்வந்தனர்.

திடீர் திருப்பமாக 10 தொகுதிகளில் வென்ற ஜனநாயக ஜனதா கட்சியின் துணையுடன் பாஜக அரியானாவில் மீண்டும் ஆட்சி அமைக்க முன்வந்தது. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை ஜனநாயக ஜனதா கட்சி தலைவர் துஷ்யந்த் சவுதாலா நேற்று சந்தித்துப் பேசினார். பேச்சுவார்த்தையில் துஷ்யந்த் சவுதாலாவுக்கு துணை முதல்வர் பதவி வழங்குவது எனவும், அவரது கட்சியை சேர்ந்த சிலருக்கு மந்திரிசபையில் இடம் தருவது, உள்ளூர் வேலைவாய்ப்பில் 75 சதவீதம் அளவிற்கு சவுதாலா கட்சி சொல்லும் பிரிவினருக்கு ஒதுக்கீடு அளிப்பது உள்ளிட்ட கோரிக்கைகள் ஏற்கப்பட்டது. இதுதொடர்பாக, பா.ஜ.க தலைவர் அமித்ஷா செய்தியாளர்களிடம் கூறுகையில், துஷ்யந்த் சவுதாலாவின் ஜனநாயக ஜனதா கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளோம். இதனை கவர்னரிடம் நாளை தெரிவிப்போம். மேலும் ஜே.ஜே.பி., கட்சிக்கு துணை முதல்வர் பொறுப்பை வழங்குவோம் என தெரிவித்தார்.

வெற்றி பெற்ற பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத், பாஜக பொதுச் செயலாளர் அருண் சிங் ஆகியோர் முன்னிலையில் சண்டிகரில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மனோகர் லால் கத்தார் சட்டமன்ற பாஜக தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக ரவிசங்கர் பிரசாத் அறிவித்தார்.  இதற்கான கடிதத்துடன் கவர்னர் சத்யடியோ நரைன் ஆர்யா-வை முதல் மந்திரி மனோகர் லால் கத்தார் நேற்று மாலை சந்தித்து ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோரினார். அதை ஏற்றுக்கொண்ட கவர்னர் இன்று பிற்பகல் சுமார் 2.30 மணியளவில் முதல் மந்திரி மனோகர் லால் கத்தார், துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா மற்றும் இதர மந்திரிகளுக்கு பதவி பிரமாணமும் காப்புறுதி பிரமாணமும் செய்து வைத்தார். ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த துஷ்யந்த் சவுதாலாவின் தந்தை அஜய் சவுதாலா நன்னடத்தை காரணமாக 14 நாள் பரோலில் இன்று விடுதலையானார்.

அரியானா தலைநகர் சண்டிகரில் உள்ள கவர்னர் மாளிகையில் நடந்த பதவி ஏற்பு விழாவில் அஜய் சவுதாலா கலந்து கொண்டார். அரியானாவின் ரோட்டக் மாவட்டத்தில் 5-5-1954 அன்று பிறந்த மனோகர் லால் கத்தார் 1977-ம் ஆண்டில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இணைந்தார். பின்னர், 3 ஆண்டுளுக்கு பின்னர் முழுநேர ஆர்.எஸ்.எஸ். பரப்புரையாளராக மாறினார். சுமார் 17 ஆண்டுகள் ஆர்.எஸ்.எஸ். பரப்புரையாளராக இருந்த இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. 1994-ம் ஆண்டு பாஜகவில் இணைந்த மனோகர் லால் கத்தார் 2000-ம் ஆண்டில் இருந்து 2014-ம் ஆண்டுவரை அரியானா மாநில பாஜக அமைப்பு செயலாளராக பணியாற்றினார். 2014-ம் ஆண்டு நடைபெற்ற அரியானா சட்டசபை தேர்தலில் முதல்முறையாக கர்னால் தொகுதியில் போட்டியிட்டு 63 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அம்மாநிலத்தில் அமைந்த முதல் பாஜக அரசின் முதல் மந்திரியாக 26-10-2014 அன்று பொறுப்பேற்ற மனோகர் லால் கத்தார் இரண்டாவது முறையாக மீண்டும் இன்று முதல்வராக பதவி ஏற்றுள்ளார்.

Tags : Manohar Lal Qatar ,Chief Minister ,Haryana , Haryana, Manohar Lal Qatar, Dushyant Chaudala, sworn in
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...