×

திருட்டு மது விற்பனை, கஞ்சா புழக்கம் அதிகரிப்பால் சீரழியும் குமரி மாணவர்கள்: வேடிக்கை பார்க்கும் போலீஸ் துறை

நாகர்கோவில்:  குமரி மாவட்டத்தில் திருட்டு மது விற்பனை மற்றும் கஞ்சா பழக்கத்தால் மாணவர்கள் மற்றும்  இளைஞர்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். குமரி மாவட்டத்தில் 100க்கு மேற்பட்ட அரசு டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகள் காலை 12 மணிக்கு திறப்பதற்கு முன்பே திருட்டுத்தனமாக சரக்கு விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. தேவைக்கு ஏற்ப உடனடியாக மது பாட்டில்கள் கிடைப்பதால் அவர்கள் கூறும் விலையை கொடுத்து ‘குடி’மகன்கள் வாங்கி செல்கின்றனர். இதே போல் டாஸ்மாக் கடையை பூட்டிய பின் இரவு 10 மணிக்கு மேலும் பல இடங்களில் திருட்டுத்தனமாக  மது விற்பனை கொடி கட்டி பறக்கிறது.போலீசார் அவ்வப்போது ரெய்டு நடத்தி சிலரை கைது செய்தாலும், கொடிகட்டிப்பறக்கும் திருட்டு மது விற்பனையை தடுக்க முடியவில்லை. அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி, திருவள்ளுவர் தினம், மகாவீர் ஜெயந்தி, வள்ளலார் தினம் உட்பட சில நாட்களில் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படுவது வழக்கம். அந்த நாட்களில் அதிகாலை முதலே திருட்டுத்தனமாக மதுபான விற்பனை களை கட்டி விடுகிறது.

விலை இரு மடங்கு அதிகரித்து விற்கப்பட்டால் கூட ‘குடி’மகன்கள் ஆவலுடன் மது வகைகளை வாங்கி செல்கிறார்கள். நாகர்கோவில், குழித்துறை, குலசேகரம், கருங்கல், குளச்சல் போன்ற பகுதிகளில் எலைட் பார்கள் செயல்பட்டு வருகின்றன. இவை காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை செயல்பட அனுமதி உள்ளது. ஆனால் சில எலைட் பார்கள் 24 மணிநேர சர்வீஸ் நடத்தி வருகின்றன. உயர் அதிகாரிகளுக்கு மாதா மாதம் உரிய கப்பம் செலுத்தி, அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கும் மேலாக பார் சர்வீசை தங்கு தடையின்றி இவ்கள் செயல்படுத்தி வருகின்றனர். எலைட் பார்களில் விலை அதிகமாக இருந்தாலும் குடிமகன்கள் கவலை கொள்வதில்லை. சில பார்களில் அதிக போதைக்காக ஸ்பிரிட் கலப்பதாகவும், இதற்காக தனியாக ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் வேதனை தெரிவிக்கும் குடிமகன்களும் உண்டு.இது போன்ற பல குற்றச்சாட்டுகள் எழுந்தபோதும், சம்பந்தப்பட்டவர்கள் மீது போலீசாரால் உரிய நடவடிக்கை மேற்கொள்ள முடிவதில்லை. இது குறித்து நேர்மையான  போலீசார் சிலர் கூறுகையில், லஞ்சம் வாங்கும் உயர் அதிகாரிகள் தங்களை சுதந்திரமாக செயல்பட விடுவதில்லை என்கின்றனர். பெயரளவில் மட்டுமே அவ்வப்போது சிறுசிறு வழக்குகள் சில பதிவு செய்யப்படுகின்றன எனவும் தெரிவிக்கின்றனர்.

எனவே, குமரி மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்படும் டாஸ்மாக் மது விற்பனையை தடை செய்ய காவல்துறை உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கையூட்டு வாங்கிக்கொண்டு போலீசாரை செயல்பட விடாத அதிகாரிகள் இனம் காணப்பட வேண்டும். நேர்மையான அதிகாரிகள் தலைமையில் மது விலக்கு போலீசாரை செயல்பட வைக்க வேண்டும். இதன் மூலம் சட்டத்துக்கு புறம்பாக பணம் பார்ப்பவர்களை தடுத்து நிறுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  திருட்டு மது விற்பனை செய்பவர்களை பிடிக்கும் வகையில் அவ்வப்போது சோதனை நடத்தும் போலீசார், நாள் ஒன்றுக்கு 20 பேர் வரை கைது செய்கிறார்கள். ஏற்கனவே கைதானவர்கள் தான் மீண்டும், மீண்டும் கைது செய்யப்படுகிறார்கள். திருட்டு மது விற்பனைக்கு பெரும்பாலும், அபராதம் மட்டுமே விதிக்கப்படுவதால் எளிதில் தப்பி விடுகிறார்கள்.  திருட்டு மதுவுக்கு அடுத்தபடியாக மாவட்டத்தை ஆட்டி படைப்பது கஞ்சா ஆகும். பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்களிடம் சகஜமாக கிடைக்கும் போதை பொருளாக கஞ்சா மாறி இருக்கிறது.

இது எங்கிருந்து வருகிறது? யார் சப்ளை செய்கிறார்கள் என்பதெல்லாம் மர்மமாகவே இருக்கிறது. அவ்வப்போது கஞ்சா வியாபாரிகள் கைது என்று போலீசார் நடவடிக்கை எடுத்தாலும் கூட, கைதாகிறவர்கள் துருப்பு சீட்டுகளாகவே உள்ளனர். இவர்களை கைது செய்வதன் மூலம் கஞ்சா வியாபாரத்தை கட்டுப்படுத்த முடிய வில்லை. இரவு நேரங்களில் வரக்கூடிய பஸ்கள் மற்றும் ரயில்களில் அதிகளவில் கஞ்சா சப்ளையர்கள் வருகிறார்கள். சிறு, சிறு பொட்டலங்களாக பங்கீட்டு சர்வ சாதாரணமாக விற்பனை செய்கிறார்கள். 6ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கூட கஞ்சா பழக்கத்துக்கு அடிமையாகிறார்கள். இவ்வாறு அடிமையாகிறவர்கள் பின்னர் கஞ்சா விற்பனையாளர்களாக மாறுகிறர்கள். குமரி மாவட்டத்தில் சமீபத்தில் திருட்டு வழக்குகளில் பள்ளி மாணவர்கள் கைதானார்கள். இவர்களிடம் விசாரணை நடத்திய போது, இவர்கள் அனைவரும்  கஞ்சா பழக்கத்துக்கு அடிமையாகி இருந்தது தெரிய வந்தது. கஞ்சா போதையில் திருட்டு மட்டுமின்றி கொலை, பாலியல் தொல்லை போன்ற சம்பவங்களிலும் மாணவர்கள், இளைஞர்கள் ஈடுபடுகிறார்கள். பெற்றோர், கை செலவுக்காக கொடுக்கும் பணத்தில் கஞ்சா எளிதில் கிடைக்கிறது என்பது தான் மாணவர்களின் பாதிப்புக்கு முக்கிய காரணமாக உள்ளது. கஞ்சா வியாபாரிகளை வேரோடு பிடுங்கி எறியா விட்டால், விளைவுகள் இன்னும் மோசமாகும் என்பது சமூக ஆர்வலர்களின் வேண்டுகோள் ஆகும்.

வட மாநிலத்தவர்கள் வருகையால் அதிகரிப்பு

குமரி மாவட்டத்தில் உள்ள எஸ்டேட்டுகளில் தொடங்கி ஓட்டல்கள், ஜவுளிக்கடைகள் முதல் எல்லா இடங்களிலும் வட மாநில வாலிபர்களின் வருகை அதிகமாக உள்ளது. செங்கல் சூளைகளிலும் அதிகம் வெளி மாநில இளைஞர்கள் பணியாற்றுகிறார்கள். இவ்வாறு வருபவர்களில் கஞ்சா வியாபாரிகளும் புகுந்து விடுகிறார்கள். கஞ்சா சிகரெட், கஞ்சா பீடி போன்றவை விற்பனை செய்யப்படுகிறது. சாதாரணமாக சிகரெட் பிடிப்பது போல் நின்று ெகாண்டு கஞ்சா புகைக்கிறார்கள். இந்த பழக்கம் மெல்ல, மெல்ல இப்போது மாவட்டம் முழுவதும் பரவி கிடக்கிறது. இதை கட்டுப்படுத்தும் வகையில் வட மாநிலத்தவர்களின் வருகையையும் கண்காணிக்க வேண்டும்.

காவல்துறை தீவிர நடவடிக்கை

மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  நாத் கூறுகையில், திருட்டு மது  விற்பனை தொடர்பாக தினந்தோறும் போலீசார் வழக்கு பதிவு செய்கிறார்கள். கஞ்சா வியாபாரிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. பள்ளி, கல்லூரிகள் அருகே போலீசார் கண்காணிக்கிறார்கள். போதை பொருள் மற்றும் திருட்டு மது விற்பனை  தொடர்பாக பொதுமக்களும் புகார் அளிக்கலாம் என்றார்.

பள்ளியில் போதை மாணவர்கள்

வடசேரியில் உள்ள பள்ளி ஒன்றில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர் கூறியதாவது :மாணவர்களை ஆசிரியர்கள் கண்டிக்க முடியாத நிலை உள்ளது. அவ்வாறு கண்டித்தால் உடனடியாக பெற்றோரை அழைக்கிறார்கள். பெற்றோர்களும் ஆசிரியர் ஏன் கண்டித்தார் என்பதை விசாரிப்பது இல்லை. என் பிள்ளையை எப்படி அடிக்கலாம் என கூறி விட்டு உடனடியாக பத்திரிகைக்கும், போலீசுக்கும் தகவல் கொடுக்கிறார்கள். இதன் விளைவாக சம்பந்தப்பட்ட ஆசிரியர் கல்வித்துறை நடவடிக்கைக்கு உள்ளாக  வேண்டிய நிலை உள்ளது. இதனால் மாணவர்கள் மீதான கண்டிப்பு இப்போது இல்லை. பல மாணவர்கள் பள்ளிக்குள்யே கஞ்சா போதையில், மது போதையில் இருக்கிறார்கள். சட்டை, பேண்ட் பாக்கெட்டில் கஞ்சா பொட்டலம் அல்லது புகையிலை பாக்கெட்டுகள் உள்ளன. இன்னும் சில மாணவர்கள் மது போதையில் வருகிறார்கள். இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பது என்பது இப்போது சிரமமான காரியமாகி இருக்கிறது என்றார்.

Tags : Kumari ,Cannabis Rise: A Fun Police Department ,Kumari Students , Smuggling Kumari,Students, Dealing, Steal Liquor Sales,Cannabis Rise
× RELATED குமரி மாவட்டத்தில் பெய்து வரும்...