×

சுடுகாடுகளும் மின்மயமாகுமா?: எந்த அடிப்படை வசதியும் இல்லை...

* புதுவையில் பல நாள் கோரிக்கை நிறைவேறவில்லை
* ஆக்கிரமிக்கப்பட்டு வரும் அவலம்

கருவறையில் தொடங்கும் மனித வாழ்க்கை கல்லறையில் முடிவடைகிறது. ஆனால், புதுச்சேரியில் பல இடங்களில் இன்றளவும் இறந்தவர்களின் உடல்களை புதைக்கவோ, எரிக்கவோ மயானங்கள் கிடையாது. இந்நிலையில் புதுச்சேரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் திப்புராயப்பேட்டை, முதலியார்பேட்டை, தேங்காய்த்திட்டு, பாப்பம்மாள் கோயில் உள்ளிட்ட 19 இடங்களில் மயானங்கள் உள்ளன. இதில் 12 இந்து மயானங்களும், 6 கிறிஸ்தவ கல்லறைகளும், 2 முஸ்லிம் மயானங்களும் உள்ளன. உழவர்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கருவடிக்குப்பம், லாஸ்பேட்டை, காலாப்பட்டு, சண்முகாபுரம், ஐயங்குட்டிபாளையம் உள்ளிட்ட 21 இடங்களில் மயானங்கள் உள்ளன. இதில் 17 இந்து மயானங்களும், 4 கிறிஸ்தவ கல்லறைகளும் உள்ளன.  மத சடங்குகளில், மனிதனின் இறுதி யாத்திரை மற்றும் அதை சார்ந்த சடங்குகளுக்கு தனி மதிப்பு உண்டு. ஆனால் பல சுடுகாடுகளில் அடிப்படை வசதிகள் இல்லை. மாறாக, சமூக விரோதிகள் மது அருந்தும் இடமாக மாற்றியுள்ளனர். மேலும், பல சுடுகாடுகள் பராமரிப்பின்றி கழிப்பிடமாக மாறி துர்நாற்றம் வீசுகிறது. இதேபோல் வில்லியனூர் சுற்றுவட்டாரத்தில் மங்கலம், கணுவாப்பேட்டை, உறுவையாறு, அரியூர், சேந்தநத்தம், கூடப்பாக்கம், தொண்டமாநத்தம், பிள்ளையார்க்குப்பம், சேதராப்பட்டு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் யாராவது உயிரிழந்தால், அவர்களது உடலை அந்தந்த பகுதியில் உள்ள சுடுகாட்டில் புதைப்பதோ அல்லது எரிப்பதோ வழக்கம். ஒரே நாளில் இரண்டு அல்லது அதற்கு மேல் இறப்பு ஏற்பட்டால் எரிப்பதற்கு பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
  பாகூர் அடுத்துள்ள குருவிநத்தம் பகுதியில் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதி மக்களுக்கு ஒதுக்கப்பட்ட சுடுகாடு 40 ஆண்டுகளுக்கு முன்பு ஆக்கிரமிக்கப்பட்டு விட்டது. சுடுகாடு கோரி பல கட்ட போராட்டத்தை மக்கள் நடத்தி வருகின்றனர். இதுவரை பிரச்னை தீர்ந்தபாடில்லை. இதனால் பல கி.மீ. தூரத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றின் ஓரத்தில் இறந்தவர்களின் உடலை புதைத்து வருகின்றனர். இதனால் அடிக்கடி பிரச்னைகள் ஏற்பட்டு வருகிறது.

 கிருமாம்பாக்கம் அடுத்துள்ள கந்தன்பேட்டில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அங்கு அடிப்படை வசதியில்லாத நிலையில் மிகவும் சிறிய சுடுகாடு மட்டுமே உள்ளது. ஒரு நாளில் 2 பேர் இறந்துவிட்டால் உடலை அடக்கம் செய்வதில் பெரும் சிரமமும் ஏற்படுகிறது. மண்ணாடிப்பட்டு கொம்யூனுக்கு உட்பட்ட 40 கிராமங்களில் 30ல் மட்டுமே சுடுகாடு கொட்ட கைகள் உள்ளன. அங்கு குறிப்பிடும்படி வசதிகள் கிடையாது. மற்ற கிராமங்களில் சுடுகாடுகள் இல்லை. இதனால் அந்த கிராமங்களை சேர்ந்தவர்கள் ஊருக்கு ஒதுக்கு புறமாகவும், ஆற்றங்கரையோரமாகவும், ஏரிக்கரையோரமாகவும் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்கின்றனர்.  புதுவையில் நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. இதனால் சுடுகாட்டிற்கு அருகே கூட வீடுகள் கட்டி பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இதுபோன்ற சூழலில் சுடுகாடுகளில் வரட்டி, விறகு வைத்து இறந்தவர்களின் உடல்களை எரிப்பதால், அதன் மூலம் வெளியாகும் புகையால் சூற்றுச்சூழல் மாசுபடுகிறது.  சுடுகாட்டையொட்டி வசிப்பவர்கள், அவ்வழியாக செல்பவர்களும் சுவாச கோளாறு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர்.
 இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், ஒவ்வொரு பகுதியிலும் மின் தகன ேமடை அமைக்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

 இப்பிரச்னை சட்டசபையிலும் எதிரொலித்தது. இதற்கு அதிக நிதி தேவைப்படும் என்பதால் இக்கோரிக்கைக்கு அரசு இதுவரை செவி சாய்க்கவில்லை. இருப்பினும், புதுச்சேரி கருவடிக்குப்பத்தில் மட்டும் மின் தகன மேடை அமைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. அங்கு கூட மின்சாரத்தின் மூலம் உடல்கள் எரியூட்டப்படுவதில்லை. எரிவாயு மூலமாகத்தான் இறந்தவர்களின் உடல்கள் 2 மணி நேரத்தில் எரியூட்டப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுவதில்லை. எனவே, புதுவை அரசு நிதி நெருக்கடியை காரணம் காட்டாமல், மக்கள் தொகை பெருக்கம், இடப்பற்றாக்குறை, சுற்றுச்சூழல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு புதுவை முழுவதும் உள்ள சுடுகாடுகளை மின்மயமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

`மக்களிடையே ஆர்வமில்லை’

இதுகுறித்து உழவர்கரை நகராட்சி ஆணையர் கந்தசாமி கூறுகையில், கருவடிக்குப்பத்தில் உள்ள மின் தகன மேடையில் எரிவாயு மூலம் உடல்களை எரியூட்ட ரூ.2 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு உடலை 2 மணி நேரத்தில் எரியூட்டி விடலாம். இந்த முறையில் நாள் ஒன்றுக்கு 4 உடல்கள் வரையில் எரியூட்ட முடியும். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது. ஆனால், இறுதி சடங்குகளுடன் வரட்டி, விறகுகள் வைத்து எரியூட்ட அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. இருப்பினும், பொதுமக்கள் சடங்கு, சம்பிரதாயப்படியே இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய விரும்புகின்றனர். இதனால் மின் தகன மேடை மூலம் இறந்தவர்களின் உடலை எரியூட்ட பொதுமக்கள் ஆர்வம் காட்டுவதில்லை’ என்றார்.

`ஆக்கிரமிப்பின் பிடியில் சுடுகாடுகள்’

 கூடப்பாக்கத்தை சேர்ந்த ஜானகிராமன் கூறுகையில், கிராமங்களில் உள்ள சுடுகாடுகள் அனைத்தும் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளது. மேலும் சுடுகாட்டில் சுற்றுமதில், தண்ணீர், மின்விளக்கு வசதிகள் இல்லாததால் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் இரவு நேரங்களில் பிணங்களை கொண்டு செல்லும் போது மின்விளக்கையும், தண்ணீரையும் கையோடு கொண்டு செல்லும் அவலநிலை உள்ளது. எனவே சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பிணங்களை எரிப்பதற்கு மின்தகன மையம் அமைக்க வேண்டும். முதற்கட்டமாக ஒரு கொம்யூன் பஞ்சாயத்துக்கு இரண்டு மின்தகன மையம் அமைக்க வேண்டும். பிறகு அனைத்து கிராமங்களில் மின்தகன மையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : facilities , Are fireworks,also electrifying , no basic ...
× RELATED வாக்குச்சாவடிகள் அடிப்படை வசதிகள்...