19 ஆண்டுகளாக ஈடேறாத தூத்துக்குடி - அருப்புக்கோட்டை புதிய ரயில் பாதை திட்டம்: ஆய்வுப் பணியுடன் நிற்கிறது

தூத்துக்குடி: தூத்துக்குடியில்  இருந்து விளாத்திக்குளம், அருப்புக்கோட்டை  வழியாக மதுரைக்கு ரயில்பாதை  அமைக்கும் திட்டம் பல ஆண்டுகளாக கிடப்பில்  போடப்பட்டுள்ளது. துறைமுக நகரான தூத்துக்குடியை இணைக்கும் இந்த திட்டம்  எப்போது நிறைவேறும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்தியாவில்  ரயில்  போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டு 166 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது.   ரயில் சேவைகளை பொறுத்தவரை தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மூலம் தெற்கு ரயில்வேக்கு அதிக வருமானம் கிடைக்கிறது. ஆனாலும், தமிழகம்   மட்டும் ரயில் போக்குவரத்து சேவையில் இன்னும் வளர்ச்சி காணாமல் ஆண்டுக்கு   ஆண்டு தேய்பிறையாகவே மாறி வருவது வேதனைக்குரியதாகும்.

தமிழகத்தின்  தென்பகுதிகளான கன்னியாகுமரி, நாகர்கோவில், நெல்லை,  தூத்துக்குடி,  தென்காசி, விருதுநகர், சிவகாசி, மதுரை உள்ளிட்ட பகுதி களில்  இருந்து  சென்னை, கோவை, பெங்களூரு, மைசூர், கொல்கத்தா, குஜராத், மும்பை,  புதுடெல்லி  உள்ளிட்ட நீண்டதூர நகரங்களுக்கு இயக்கப்படும் அனைத்து  ரயில்களும்  நிரம்பி வழிந்தபடி தான் செல்கின்றன.பயணக்கட்டணம் குறைவு,   பாதுகாப்பானது, பயணமும் சவுகரியமானது, குடும்பத்தாருடன் செல்வதற்கு   வசதியானது, வயதானவர்கள், நோயாளிகளை சிரமம் இன்றி அழைத்துச் செல்லலாம்  என்பது  போன்ற பல்வேறு காரணங்களால் ரயிலில் பயணிக்கும் பயணிகளின் கூட்டம்   நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது.

ரயில் போக்குவரத்து   சேவையை பொறுத்தவரை பல்வேறு முக்கிய நகரங்களுக்கு இடையே இயக்கப்படும்   ரயில்கள் சிக்னலுக்காக தேவையின்றி ஆங்காங்கே தேவையில்லாமல் பல மணி நேரம்   காத்திருப்பதை தவிர்க்கவும், கூடுதல் ரயில்களை தடையின்றி தொடர்ந்து   இயக்கவும் இரட்டை ரயில் பாதை திட்டம் மற்றும் புதிய வழித்தட திட்டங்கள்   ரயில்வே நிர்வாகத்தால் கொண்டு வரப்பட்டது. இதில், பெரும்பாலான  திட்டங்கள்  ஆய்வுப்பணிகள் முடிக்கப்பட்டும், திட்டமதிப்பீடுகள்  தயாரிக்கப்பட்டும்  கிடப்பிலேயே போடப்பட்டுள்ளது. இந்த வகையில்  தூத்துக்குடியில் இருந்து  விளாத்திக்குளம், அருப்புக்கோட்டை வழியாக  மதுரைக்கு புதிய ரயில் பாதை  அமைக்கும் திட்டம் பல ஆண்டுகளாக கிடப்பில்  போடப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தை  பொறுத்தவரை மாவட்டத்தின்  வடபகுதி களான வாலசமுத்திரம், மேலமருதூர், புதூர்,  நாகலாபுரம், குளத்தூர்,  விளாத்திகுளம் சுற்றுவட்டாரப் பகுதிகளும்,  விருதுநகர் மாவட்டத்தில்  கல்குறிச்சி, அருப்புக்கோட்டை, பந்தல்குடி  சுற்றுவட்டாரப் பகுதிகளும்  போக்குவரத்து வசதியில் மிகவும் பின்தங்கியே  இருந்து வருகிறது. இப்பகுதிகளை  சேர்ந்த நூற்றுக்கணக்கான கிராம மக்கள்,  மானாவாரி பயிர் சாகுபடி  விவசாயிகள். தங்கள் ஊர்களுக்கு பஸ் போக்குவரத்து  வசதி கேட்டு போராடி  வருவது காலம் காலமாக முடிவில்லாமல் தொடர்கிறது.

இதனால்  இங்குள்ள  கிராமமக்கள் சாலைப் போக்குவரத்தில் எப்போதாவது வருகிற ஒரு சில அரசு  பஸ்களை  நம்பியே இன்றும் வாழ்ந்து வருகின்றனர். நாட்டில் போதுமான வளர்ச்சி  இல்லாத பகுதிகள் கூட புதிய  ரயில் வழித்தடத்தால் வளர்ச்சி கண்டுவரும்  நேரத்தில் இந்தப்பகுதி  மக்களுக்கு மட்டும் ரயில் சேவை இதுவரை இல்லை.

இதனை  நிவர்த்தி  செய்திடும் வகையில் புதிய ரயில்பாதை திட்டத்தை  உருவாக்க வேண்டும் என்று  இப்பகுதி மக்கள் கடந்த 65 ஆண்டுகளுக்கும் மேலாக  மத்திய, மாநில அரசுகளை  தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். தொடர்  வலியுறுத்தலால் கடந்த  1999-2000ம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில்  மதுரை- தூத்துக்குடி இடையே  அருப்புக்கோட்டை, விளாத்திகுளம், புதூர் வழியாக  புதிய ரயில் பாதை  அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.இந்த புதிய  திட்டத்தின்படி  மதுரை சந்திப்பில் இருந்து திருப்பரங்குன்றம்,  பாரப்பட்டி,  ஆவியூர், காரியாப்பட்டி, கல்குறிச்சி, அருப்புக்கோட்டை,  பந்தல்குடி,  புதூர், நாகலாபுரம், விளாத்திகுளம், குளத்தூர், மேலமருதூர்,   வாலசமுத்திரம், சில்லாநத்தம், சாமிநத்தம், தட்டப்பாறை, மீளவிட்டான் வழியாக   தூத்துக்குடி ரயில் நிலையம் வரை 143.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிய   அகல ரயில்பாதை அமைப்பதற்கான ஆய்வுகள் முடிக்கப்பட்டு சுமார் ரூ.800 கோடி   மதிப்பில் திட்டம் தயாரிக்கப்பட்டது. தற்போது பல  ஆண்டுகளை கடந்து விட்டதால் திட்ட மதிப்பீடு  அதிகரிக்கும் என்று  கூறப்படுகிறது. இருந்தாலும், ஆய்வுப்பணிகள்  முடிவடைந்து 18 ஆண்டுகளுக்கு  மேலாகியும் இத்திட்டம் ஏனோ கிடப்பில்தான் இருக்கிறது. கிராமப்  போக்குவரத்திற்கு மிகப்பெரும் வரப்பிரசாதமான இந்த  ரயில் பாதை திட்டம் இனியாவது உயிர் பெற்று  பயன்பாட்டுக்கு வருமா? என்ற  எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில்  ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து  தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச்சங்க  செயலாளர் பிரமநாயகம் கூறுகையில்,  ‘‘தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்கள் போக்குவரத்து  உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிகளில்  பின்தங்கியே காணப்படுகிறது.

குறிப்பாக  காரியாப்பட்டி, அருப்புக்கோட்டை,  பந்தல்குடி, புதூர், நாகலாபுரம்,  விளாத்திகுளம் பகுதி மக்கள் ரயில் வசதி  இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். புயல்,  வெள்ளக் காலங்களில் சாலை போக்குவரத்து  பாதிக்கப்படும் போது இந்த பகுதி  மக்களால் வெளியே செல்ல முடியவில்லை. புதிய  ரயில் பாதை அமைத்தால் இந்த  பகுதியை சேர்ந்த மக்கள் சென்னை, மதுரை,  தூத்துக்குடி உள்ளிட்ட நாட்டின் பிற  பகுதிகளுக்கு ரயிலில் எளிதாக பயணிக்க  முடியும். இந்த பகுதியில்  அதிகம் விளையும் மக்காச்சோளம், மிளகாய்  வத்தல், மல்லி போன்ற விவசாய விளை  பொருட்களை வெளியிடங்களுக்கு கொண்டு  சென்று விற்பனை செய்ய வசதியாக  இருக்கும். மதுரையிலிருந்து  அருப்புக்கோட்டை, விளாத்திகுளம் வழியாக  தூத்துக்குடிக்கு புதிய ரயில் பாதை  அமைக்கும்போது தென்மாவட்டத்திற்கு  கூடுதல் ரயில் சேவையும் கிடைக்கும்’’ என்றார்.விளா த்திக்குளத்தைச் சேர்ந்த வேலுச்சாமி  கூறுகையில், ‘‘தூத்துக்குடியில்  இருந்து கோவில்பட்டி வழியாக மதுரைக்கு செல்லும்  ரயில் பாதையைவிட விளாத்திகுளம் வழியாக மதுரைக்கு  செல்லும் தூரம் குறைவு. குளத்தூர், விளாத்திக்குளம்  வழியாக புதிய ரயில் பாதை  அமைந்தால் நூற்றுக்கணக்கான கிராம  மக்கள் மும்பை,  பெங்களூரு, சென்னை, கோவை, மதுரை, நெல்லை,  கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு  பகுதிகளுக்கும் ரயிலில் பயணிக்க  முடியும். புதிய ரயில்பாதை  அமைப்பதற்கான ஆய்வுப்பணிகள்,  முடிக்கப்பட்டு திட்ட மதிப்பீடு தயாரான போதும் திட்டம் மத்திய அரசால்  கிடப்பில் போடப்பட்டுள்ளது வருத்தம் அளிக்கிறது. இப்பகுதி  கிராம மக்களின்  கனவை நனவாக்க உடனே ரயில் பாதை அமைக்க வேண்டும்’’ என்றார்.

18 கிமீ தூரத்தை தாண்டுமா?

தனியார்  மின் நிறுவனத்தின் ரூ.100 கோடி  பங்களிப்பு மற்றும் மத்திய அரசின்  ரூ.20  கோடி என ரூ.120 கோடி திட்ட  மதிப்பீட்டில் மீளவிட்டானில் இருந்து   மேலமருதூர் வரையிலும் புதிய ரயில்  பாதை அமைக்கப்பட்டு வருகிறது. மேலமருதூரில்  செயல்பட்டு வரும் தனியார் அனல்மின் நிலையத்திற்கு நிலக்கரி  கொண்டு  செல்வதற்காக இந்த புதிய ரயில் பாதை  அமைக்கும் பணிகள் நடந்து  வருகிறது.  இதைத் தொடர்ந்து  மேலமருதூரில்  இருந்து  குளத்தூர், விளாத்திகுளம்,  புதூர், நாகலாபுரம்,  பந்தல்குடி,  அருப்புக்கோட்டை, காரியாப்பட்டி,  திருப்பரங்குன்றம் வழியாக  மதுரைக்கு  புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும்.  இந்த திட்டம் தூத்துக்குடியில்  இருந்து  விளாத்திக்குளம், அருப்புக்கோட்டை  வழியான ரயில் பாதைக்கு  முன்னோட்டம் என்று  கூறினாலும் 18 கிமீ   தூரத்திற்கு புதிய அகல  ரயில்பாதை அமைக்க ஆர்வம் காட்டும்  தெற்கு ரயில்வே இந்த திட்டத்தை மதுரை வரையிலும் நீட்டிக்க  முன்வராதது ஏன்?  என்று  கிராம மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

வெற்று அறிவிப்பு

தூத்துக்குடி-    அருப்புக்கோட்டை - மதுரை புதிய ரயில் வழித்தடத்தில் எந்தெந்த இடங்களில்   ரயில் நிலையம் அமையும் என்று தென்னக ரயில்வே கடந்த 2 ஆண்டுகளுக்கு   முன்பு அறிவித்தது. இதன்படி விளாத்திகுளம், குளத்தூர், நாகலாபுரம்,  புதூர் ஆகிய இடங்களில் புதிய ரயில் நிலையங்கள் அமைக்கப்படும் என்று  அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெற்று அறிவிப்பாகவே இருந்து   வருகிறது.

Related Stories:

>