×

தீபாவளி பண்டிகைக்கு தங்கம் வாங்க தயாரா?

மும்பை: தீபாவளி உட்பட பண்டிகை காலங்களில் நகை கடைகளுக்குச் சென்று நகைகள் வாங்குவதில்தான் பெரும்பாலானவர்கள் கவனமாக இருக்கின்றார்கள். ஆனால், தங்கத்தில் முதலீடு செய்யும் நமக்கு  நகைகளை வாங்கும்போதும் அதை விற்கும்போதும் எந்த அளவுக்கு வரி விதிக்கப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். நகை வாங்கும்போது வரி: தங்க நகைகள் வாங்கும்போது நாம், ரொக்கமாகவோ அல்லது டெபிட் கார்டு, கிரடிட் கார்டு மற்றும் இன்டர்நெட் பாங்க் வசதி மூலம் பணம் கொடுத்து நகைகள் வாங்குகிறோம். சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அறிமுகம் செய்த பின்னர் வாடிக்கையாளர் தாங்கள் வாங்கும் நகையின் மதிப்புக்கு செய்கூலியுடன் சேர்த்து 3 சதவீதம் வரையில் வரி செலுத்த வேண்டும்.

நகை விற்கும்போது வரி: நகைகள் விற்கும்போது வரி செலுத்த வேண்டும். அதாவது நகைகள் வாங்கி எவ்வளவு காலத்திற்கு வைத்திருக்கிறீர்கள் என்பதைப் பொருத்து வரி விதிக்கப்படுகிறது. இது, குறுகிய கால முதலீடு ஆதாயம் அல்லது நீண்ட கால முதலீடு ஆதாயம் என்பதன் அடிப்படையில் வரி விதிக்கப்படுகிறது.
குறுகிய கால முதலீடு ஆதாயம் (எஸ்டிசிஜி): தங்க நகைகளை வாங்கி 3 ஆண்டுகளுக்குள் (36 மாதங்களுக்குள்) அவற்றை விற்பனை செய்தால் அதற்கு எஸ்டிசிஜி அடிப்படையில் வரி விதிக்கப்படும். இந்த முதலீடு ஆதாயம் வாடிக்கையாளரின் மொத்த ஆண்டு வருமானத்தில் சேர்க்கப்படும். பின்னர் வருமான வரி விதிப்பு முறையின்படி வரி விதிக்கப்படும்.

நீண்டகால முதலீடு ஆதாயம் (எல்டிசிஜி): தங்க நகைகள் வாங்கியதிலிருந்து விற்பனை செய்யப்படும் நாள் வரையில் உள்ள காலம் 36 மாதங்களுக்கு மேல் இருந்தால் நீண்ட கால முதலீடு ஆதாயம் அடிப்படையில் வரி விதிக்கப்படும். 2017-18 நிதியாண்டு வரையில் இந்த வரி 20.6 சதவீதம் விதிக்கப்பட்டது. (இதில் கூடுதல் வரியும் அடங்கும்), 2018-19 நிதியாண்டு முதல் முதலீடு ஆதாய வரி 20.8 சதவீதமாக விதிக்கப்படுகிறது. (இதில், கூடுதல் வரி அடங்கும்). கூடுதல் வரி முன்பு 3 சதவீதமாக இருந்தது. ஆனால், கடந்த 2018 நிதி நிலை அறிக்கையில் ஒரு சதவீதம் அதிகரிக்கப்பட்டு 4 சதவீதமாக விதிக்கப்படுகிறது.



Tags : festival ,Diwali , Ready , buy, gold , Diwali?
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...