×

மதுரையில் கடத்தல் வழக்கில் விசாரணைக்கு போலீசார் அழைத்து சென்ற வாலிபர் மர்மசாவு: மாஜிஸ்திரேட் முன் பிரேத பரிசோதனை

மதுரை: மதுரை, வில்லாபுரத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ராஜூவின் மகன் பார்த்திபன்(23). இவரை சிலர் கடத்திச் சென்று, ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இதுதொடர்பான புகாரில், அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிந்து மதுரை ஜெய்ஹிந்த்புரம், சோலையழகுபுரத்தை சேர்ந்த முத்துக்கருப்பன் மகன் பாலமுருகன்(22), அனுப்பானடியை சேர்ந்த சரவணன், வில்லாபுரத்தை சேர்ந்த முருகன்(21) ஆகியோரை பிடித்து விசாரித்தனர். விசாரணையின்போது, பாலமுருகனை போலீசார் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த பாலமுருகன், மதுரை அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு இறந்தார். இதற்கிடையே பாலமுருகனை, போலீசார் அடித்துக் கொன்றுவிட்டு, மருத்துவமனையில் சேர்த்து, நாடகமாடுகின்றனர் என்று புகார் தெரிவித்த உறவினர்கள், மதுரை அரசு மருத்துவமனை முன்பு நேற்று முன்தினம் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று 2வது நாளாகவும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாஜிஸ்திரேட் முன்பு பிரேத பரிசோதனை நடக்க வேண்டும்.

பிரேத பரிசோதனை முழுவதையும் வீடியோவில் பதிவு செய்ய வேண்டும். பாலமுருகனை தாக்கிய போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்ய வேண்டும். அவரது குடும்பத்தினருக்கு நிவாரண உதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணியும் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, நேற்று பிணவறை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், பாலமுருகனின் உடல், மதுரை ஜேஎம் 3 கோர்ட் மாஜிஸ்திரேட் முன்னிலையில் நேற்று மாலை 4.30 மணி அளவில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோ எடுக்கப்பட்டது. பின்னர் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.

ஐகோர்ட் உத்தரவு: இதனிடையே கடத்தல் வழக்கில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற வாலிபர் மர்ம மரணம்  தொடர்பாக அவரது தந்தை முத்துகருப்பன் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், அவனியாபுரம் காவல் நிலையத்தின் அக்.20 முதல் அக்.22 வரையிலான சிசிடிவி காட்சி பதிவுகளை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்திருக்க உத்தரவிட்டு விசாரணையை நவ.1க்கு தள்ளி வைத்தார்.

Tags : interrogation ,Madurai , police, inquire ,o Madurai ,case
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...