×

6 மணி நேரம் தாமதம்; புறப்படவும் லேட் நெல்லை எக்ஸ்பிரஸ் முன்பு பயணிகள் திடீர் மறியல்

திண்டுக்கல்: சென்னை தாம்பரத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு 7.50 மணிக்க நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் கிளம்பியது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயிலில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. முன்பதிவற்ற பெட்டிகள் இணைப்பில் கோளாறு காரணமாக அதிகளவு சத்தம் கேட்டபடி வந்துள்ளது. மேல்மருவத்தூர் ரயில் நிலையத்திற்கு வந்தபோது, ரயிலில் திடீர் என பழுது ஏற்பட்டது. பழுது நீக்கிய பின்னர், சுமார் 6.30 மணி நேரம் தாமதமாக ரயில் புறப்பட்டது. இந்த ரயில் வழக்கமாக அதிகாலை 2.30 மணிக்கு திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு வந்து சேரும். ஆனால் பழுது காரணமாக நேற்று காலை 8.30 மணிக்குத்தான் திண்டுக்கல்லுக்கு ரயில் வந்தது.

பின்னர் அங்கு சிக்னல் கிடைக்காததால், மீண்டும் ரயில் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. ஏற்கனவே ரயில் வந்து சேர பல மணி நேரம் தாமதமானதால் அவதியடைந்த பயணிகளுக்கு இது மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. ஒரு கட்டத்தில் பயணிகள் திடீரென தண்டவாளத்தில் இறங்கி ரயில் முன் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்ததும் ரயில்வே போலீசார் வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து பயணிகள் சமாதானமடைந்தனர். பின்னர் அரை மணிநேரம் தாமதமாக ரயில் கிளம்பி சென்றது. இதையடுத்து  நேற்று காலை 6.45 மணிக்கு நெல்லை வந்து சேர வேண்டிய நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் 7 மணி நேரம் தாமதமாக நேற்று பிற்பகல் 1.30 மணிக்கு தான் வந்து சேர்ந்தது.



Tags : Late Paddy Express ,Passengers , delay, Passengers, departing, Express
× RELATED கள்ளக்குறிச்சியில் நின்று...