×

பகத்சிங், ராஜ்குரு, சுக்தேவுக்கு பாரத் ரத்னா வழங்க வேண்டும்: பிரதமருக்கு காங்கிரஸ் கடிதம்

புதுடெல்லி: சுதந்திரப் போராட்ட வீரர்கள் பகத்சிங், ராஜ்குரு, சுக்தேவ் ஆகியோருக்கு `பாரத் ரத்னா’ பட்டம் வழங்கும்படி பிரதமருக்கு காங்கிரஸ் கடிதம் அனுப்பி உள்ளது. இந்துத்துவா தலைவர் வீர் சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கும்படி மகாராஷ்டிரா பாஜ.வினர் மத்திய அரசை வலியுறுத்தினர். சட்டப்பேரவை தேர்தல் வாக்குறுதியிலும் இதை தெரிவித்தனர். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அதே நேரம், சாவர்க்கருக்கு இந்த விருதை வழங்க, பிரதமர் மோடியும் ஆதரவு தெரிவித்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்பி.யுமான மணீஷ் திவாரி, மத்திய அரசுக்கு நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தை எதிர்த்து குரல் கொடுத்து, தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த சுதந்திர போராட்ட வீரர்கள் பகத்சிங், ராஜ்குரு, சுக்தேவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். மேலும், அவர்களுக்கு மரியாதைக்குரிய சாகித் இ அசாம்’ விருதும் அளிக்க வேண்டும். சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங்கை கவுரவிக்கும் வகையில், மொகாலியில் அமைந்துள்ள சண்டிகர் விமான நிலையத்துக்கு `சாகித் இ அசாம் பகத்சிங் விமான நிலையம்’ என்று பெயர் சூட்ட வேண்டும். இதனால், நாட்டில் உள்ள அனைத்து மக்களின் மனங்களும் குளிர்விக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Tags : Rajguru ,Congress ,Bhagat Singh ,Sukhdev , Congress, Bharat Ratna , Bhagat Singh,
× RELATED தலாய் லாமாவுக்கு பாரத ரத்னா விருது...