×

அரியானா மாநில முதல்வராக கட்டார் இன்று பதவியேற்பு: துணை முதல்வராகிறார் துஷ்யந்த்

சண்டிகார்: அரியானாவில் ஆட்சியமைக்க  பாஜ கூட்டணிக்கு ஆளுநர்  சத்யதேவ் நாராயண் ஆர்யா அழைப்பு விடுத்துள்ளார். மனோகர் லால் கட்டார் இன்று மதியம் முதல்வராக பதவியேற்கிறார். அரியானாவில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பாஜ தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ளது. மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 40 தொகுதிகளை பாஜ கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் 31 தொகுதிகளை வென்றுள்ளது. துஷ்யந்த் சவுதாலாவின் ஜனநாயக ஜனதா கட்சி (ஜேஜேபி) 10 இடங்களையும், இந்திய தேசிய லோக் தளம், அரியானா லோகித் கட்சி தலா ஒரு இடங்களையும், சுயேச்சைகள் 7 இடங்களையும் பிடித்துள்ளனர். இந்நிலையில், பாஜ ஆட்சிமைக்க தேவையான 46 இடங்களை பெறுவதற்காக 7 சுயேச்சைகளும், ஜேஜேபியும் ஆதரவு அளி்த்துள்ளனர்.

சண்டிகரில் நேற்று காலை பாஜ சட்டப்பேரவை கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏ.க்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில்,  முதல்வர் மனோகர் லால் கட்டார், சட்டப்பேரவை கட்சித் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதில், மத்திய பார்வையாளர்களாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், பாஜ தேசிய செயலாளர் அருண் சிங் ஆகியோர் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து, நேற்று பிற்பகலில் சண்டிகரில் உள்ள ஆளுநர் சத்யதேவ் நாராயண் ஆர்யாவை கட்டார் சந்தித்து, ஆட்சியமைக்க உரிமை கோரினார். அப்போது, ரவிசங்கர் பிரசாத், ஜேஜேபி கட்சித் தலைவர் துஷ்யந்த் சவுதாலா உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதையடுத்து,  பாஜ கூட்டணியை ஆட்சியமைக்கும் படி ஆளுநர் சத்யதேவ் அழைப்பு விடுத்தார். தீபாவளி தினமான இன்று பிற்பகல் 2.15க்கு, ஆளுநர் மாளிகையில் நடைபெறும் பதவியேற்பு விழாவில்,   கட்டார் 2வது முறையாக முதல்வர் பதவியை ஏற்கிறார்.

முன்னதாக, கட்டார் தனது அமைச்சரவையின் ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம்   வழங்கினார். அதை ஏற்ற அவர், புதிய அரசு பொறுப்பேற்கும் வரை இடைக்கால முதல்வராக தொடரும்படி கேட்டுக் கொண்டார். ஆளுநரை சந்தித்த பிறகு கட்டார் அளித்த பேட்டியில், ‘‘பாஜ கூட்டணியை ஆட்சியமைக்க, ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். இன்று பிற்பகல் 2.15 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறுகிறது. இதில் ஜேஜேபி கட்சியை சேர்ந்த துஷ்யந்த் சவுதாலா துணை முதல்வராக பொறுப்பேற்கிறார். எங்களுடன் சில அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர்,’’ என்றார்.

‘கண்டா ஆதரவை ஏற்க மாட்டோம்‘
பாஜ ஆட்சி அமைக்க ஆதரவு தருவதாக அரியானா லோகித் கட்சியின் சிர்சா தொகுதி எம்எல்ஏ.வும், சர்ச்சைக்குரிய அரசியல்வாதியுமான கோபால் கண்டா நேற்று முன்தினம் தன்னிச்சையாக அறிவித்தார். இதை பாஜ.வும் முதலில் ஏற்றது. இதற்கு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மம்தா பானர்ஜி உள்ளிட்ட பாஜ மூத்த தலைவர்களும் எதிர்த்தனர். கீத்திகா சர்மா என்ற  விமானப் பணிப்பெண்ணையும், அவரது தாயையும் தற்கொலைக்கு தூண்டியதாக கைது செய்யப்பட்டவர்தான் கண்டா. இந்நிலையில், சண்டிகரில் நேற்று பேட்டியளித்த மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், கோபால் கண்டாவின் ஆதரவை பாஜ ஏற்காது,’’ என அறிவித்தார்.

அஜய் சவுதாலாவுக்கு பரோல்
ஜேஜேபி.யின் தலைவர் துஷ்யந்த் சவுதாலாவின் தந்தை அஜய் சவுதாலா. இவரும், இவரது தந்தையும் அரியானா முன்னாள் முதல்வருமான ஓம் பிரகாஷ் சவுதாலாவும் திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அரியானாவில் ஆசிரியர்களை தேர்வு செய்வதில் நடைபெற்ற ஊழல் தொடர்பான வழக்கில், இவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டு திகார் சிறையில் உள்ளனர். இந்நிலையில், இன்று நடைபெறும் புதிய அரசு பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக அஜய் சவுதலாவுக்கு 2 வாரம் பரோல் வழங்கப்பட்டுள்ளது.

Tags : Qatar ,chief minister ,Haryana , Qatar , Haryana ,chief minister
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...