×

புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியில் பாதாள சாக்கடை அடைப்பால் வீடுகளை சூழ்ந்துள்ள கழிவுநீர்: சுகாதார கேட்டில் தவிக்கும் மக்கள்

பெரம்பூர்: சென்னை மாநகராட்சி, 6வது மண்டலம், புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியில் உள்ள வெங்கடேசபுரம் பழைய காலனி 2வது தெருவில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் உள்ள பாதாள சாக்கடையில் சமீப காலமாக அடிக்கடி அடைப்பு ஏற்படுவதால், மேன்ஹோல் வழியாக கழிவுநீர் வெளியேறி தெருவில் தேங்கி வருகிறது. பெருக்கெடுத்து ஓடும் இந்த கழிவுநீர், வீடுகளின் முகப்பில் தேங்குகிறது. இதனால், கடும் துர்நாற்றம் வீசுவதுடன் கொசு உற்பத்தி அதிகரித்து இப்பகுதி மக்கள் சுகாதார கேட்டில் தவித்து வருகின்றனர். மேலும், வீடுகளில் இருந்து பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாமல் தவிக்கின்றனர்.

இந்த தெரு அருகே அரசு பள்ளி இயங்கி வருவதால், இந்த தெரு வழியாக பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் கழிவுநீரில் நடந்து செல்லும் நிலை உள்ளது. இதனால், மாணவர்களுக்கு நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘இப்பகுதி பாதாள சாக்கடையை அதிகாரிகள் முறையாக பராமரிக்காததால், அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு, மேன்ஹோல் வழியாக கழிவுநீர் வெளியேறி வீடுகளின் முகப்பில் தேங்குகிறது. தற்போது, அடிக்கடி மழை பெய்வதால், மழைநீருடன் கழிவுநீர் கலந்து வீடுகளில் புகுந்து விடுகிறது. இதனால், மர்ம காய்ச்சல் ஏற்பட்டு, பலர் மருத்துவமனைக்கு படையெடுத்து வருகின்றனர். இதுபற்றி மண்டல அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இதே நிலை நீடித்தால், அதிகாரிகளின் மெத்தன போக்கை கண்டித்து போராட்டத்தில் ஈடுபடுவோம்,’’ என்றனர்.



Tags : Sewerage sewers ,area ,Puliyanthoppu Kannikapuram , Sewerage , Puliyanthoppu, Kannikapuram
× RELATED ராட்சத அலையில் சிக்கியவர் பலி