×

முன்னாள் முதல்வர் சந்திரபாபு ஆட்சியில் இடிக்கப்பட்டது ஏழுமலையான் கோயிலில் ஆயிரங்கால் மண்டபம் மீண்டும் கட்டப்படுமா?: பக்தர்கள் எதிர்பார்ப்பு

திருமலை: சந்திரபாபுநாயுடு ஆட்சியின்போது இடிக்கப்பட்ட பழமையான ஆயிரங்கால் மண்டபம் மீண்டும் கட்டப்பட வேண்டும் என்று பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலை முதலில் தொண்டைமான் இளந்திரையன் கட்டியதாக கூறப்படுகிறது. அவரை தொடர்ந்து பல்லவர்கள் தொடங்கி பாண்டியர்கள் வரை பல்வேறு தமிழ் மன்னர்களும், அவர்களை தொடர்ந்து விஜயநகர மன்னர்களும் கோயிலை புனரமைத்ததாகவும், கோயிலில் பல்வேறு திருப்பணிகள் மேற்கொண்டதாகவும் கல்வெட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.அந்த வகையில் விஜயநகர பேரரசர்கள் காலத்தில் 15ம் நூற்றாண்டில் கோயில் எதிரில் கலைநயம்மிக்க சிற்பங்களை கொண்ட தூண்களுடன் ஆயிரங்கால் மண்டபம் கட்டப்பட்டது. இந்த நிலையில், ஏழுமலையான் கோயிலை சுற்றி 2003ம் ஆண்டு அப்போதைய முதல்வர் சந்திரபாபுநாயுடு ஆட்சியின்போது மாஸ்டர் பிளான் திட்டம் மேற்கொள்ளப்பட்டது.

 அத்திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக நான்கு மாட வீதிகளில் இருந்த தனியார் விடுதிகள், கடைகள் ஆகியவற்றுடன் ஆயிரங்கால் மண்டபமும் இடிக்கப்பட்டது. இதற்கு ஆன்மீகவாதிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. ஆனாலும் மண்டபம் இடிக்கப்பட்டதுடன், நான்கு மாடவீதிகளும் அகலப்படுத்தப்பட்டு பார்வையாளர் மாடங்கள், செயற்கை நீரூற்றுகளுடன் பூங்காக்கள் என அமைக்கப்பட்டு சுவாமி வீதியுலா வரும் வகையில் மேம்படுத்தப்பட்டது.
இதை எதிர்த்து, சில இந்து அமைப்புகள், ஐதராபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இவ்வழக்கில் ஆயிரங்கால் மண்டபம் இருந்த இடத்தில், நூற்றுக்கால் மண்டபம் கட்ட வேண்டும் என்று தேவஸ்தானத்திற்கு ஐகோர்ட் உத்தரவிட்டது. அதன்படி, ஆயிரங்கால் மண்டபம் இடிக்கப்பட்டபோது அகற்றப்பட்ட கல் தூண்களை கொண்டு, 2009ம் ஆண்டு, நூற்றுக்கால் மண்டபம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டு தொடங்கப்பட்ட பணி அதே வேகத்தில் முடங்கியது.கோயில் எதிரில் ஆயிரங்கால் மண்டபத்திற்கு மாற்றாக நூற்றுக்கால் மண்டபம் கட்டுவதற்காக, அப்போதைய முதன்மை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அதிகாரி ஜி.வி.ஜி.அசோக்குமார் தலைமையில் தனிக்குழு அமைக்கப்பட்ட நிலையில், பாதுகாப்பு காரணங்களால், பழைய இடத்தில் மண்டபத்தை கட்டினால் சரியாக இருக்காது. அப்படியே கட்டினாலும், சரியான பராமரிப்புப்பணிகள் மேற்கொள்ள இயலாது.

அதற்கு பதில், திருப்பதியிலிருந்து 8 கி.மீ. தொலைவில் ஸ்ரீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் நூற்றுக்கால் மண்டபம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் பக்தர்கள் வேண்டுகோளின் பேரில், கோயில் எதிரே நாதநீராஞ்சன மேடையின் அருகே நூற்றுக்கால் மண்டபம் கட்டப்படும் என தெரிவிக்கப்பட்டது.
பின்னர் அத்திட்டமும் கைவிடப்பட்டு, 2016ம் ஆண்டு பிப்ரவரி 25ம் தேதி நடந்த அறங்காவலர் குழுக்கூட்டத்தில்   ஏழுமலையான் கோயில் பின்புறமுள்ள நாராயணகிரி தோட்டத்தில் 88,245 சதுர அடி பரப்பளவில், 20 ஆயிரம் சதுர அடியில் நான்கு வரிசைகளுடன் ஆயிரங்கால்  மண்டபத்தை, திறந்தவெளி இடமாக அமைத்து,  சாமி தரிசனம் செய்ய வரும் 3000 பக்தர்கள் காத்திருக்கும் வகையில் கட்ட முடிவு செய்யப்பட்டது.அவ்வாறு கட்டப்படும் கட்டமைப்பில் இடிக்கப்பட்ட ஆயிரங்கால் மண்டபத்திலிருந்து அகற்றப்பட்ட தூண்களில், 384  தூண்கள் மட்டும் பயன்படுத்தப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது. இதற்காக ₹18 கோடி செலவிடவும் முடிவு செய்யப்பட்டு அந்த ஆண்டே மார்ச் 1ம் தேதி டெண்டர் விடவும் முடிவு செய்யப்பட்டது.

 என்ன காரணத்தாலோ, அந்த திட்டமும் அப்படியே கைவிடப்பட்டது. இவ்வாறு அறங்காவலர் குழுவில் மாற்றம் வரும்போதும், ஆட்சி மாற்றம் வரும்போதும் ஆயிரங்கால் மண்டபம் கட்டப்படும் என்று கூறப்படுவதும் வழக்கமான ஒன்றாக மாறி போனது. ஆனால் ஆயிரங்கால் மண்டபம் மட்டும் வந்தபாடில்லை என்று பக்தர்கள் வேதனை தெரிவித்தனர். இந்நிலையில், கடந்த ஆண்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த நகரி எம்எல்ஏ ரோஜா நிருபர்களிடம் கூறுகையில், ‘ஏழுமலையானுக்காக பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஆயிரங்கால் மண்டபத்தை சந்திரபாபு நாயுடு ஆட்சியில் இடித்து விட்டனர். ஜெகன்மோகன்ரெட்டி தலைமையில் அரசு அமைந்த பிறகு ஆயிரங்கால் மண்டபம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்தார்.  அதற்கேற்ப ஜெகன்மோகன்ரெட்டி தலைமையில் ஆட்சி அமைந்துள்ள நிலையில் ஆயிரங்கால் மண்டபம் கட்டுவதற்கு நகரி எம்எல்ஏ ரோஜா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஏற்கனவே தமிழ் கல்வெட்டுகளை மறைக்க திட்டமிடப்பட்டது
ஏழுமலையான் கோயிலை பொறுத்தவரை கருவறை தொடங்கி மகா துவாரம் வரை தமிழ் கல்வெட்டுகள் நிறைந்து இருந்தன. தற்போது படிப்படியாக கோயில் புனரமைப்பு பணிகள் என்ற பெயரில் தமிழ் கல்வெட்டுகள் அழிக்கப்பட்டு தெலுங்கில் வைக்கப்பட்டு வருகிறது. இதற்கு உதாரணம் ஏழுமலையான் கருவறையை சுற்றியுள்ள சுவற்றை ஆனந்த நிலையம் ஆனந்த மயம் சொர்ணமயம் என்ற திட்டத்தின் கீழ் தங்கத் தகடுகளை பதித்து தமிழ் கல்வெட்டுகளை மறைக்க அப்போதைய அறங்காவலர் குழு தலைவர் ஆதிகேசவலுநாயுடு திட்டமிட்டார். ஆனால் பக்தர்களின் கடும் எதிர்ப்பு மற்றும் நீதிமன்றம் அனுமதி மறுப்பு காரணங்களால் அத்திட்டம் கைவிடப்பட்டது. ஆந்திராவுடன் திருப்பதி இணைக்கப்பட்டாலும், ஏழுமலையான் கோயில் என்பது தமிழக மக்களின் பெரும்பாலானோரின் குலதெய்வ கோயிலாகவும், இஷ்ட தெய்வ கோயிலாகவும் விளங்கி வருகிறது. இக்கோயிலுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்களில் 48 சதவீதம் பேர் தமிழக பக்தர்கள்.

இந்நிலையில், ஏழுமலையான் கோயிலையும், அங்குள்ள கல்வெட்டுகளை புராதன சின்னங்களாக கருதி கோயிலில் எந்தவித மாற்றம் செய்தாலும் தொல்லியல் துறை அனுமதி பெற வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்த அக்கோயிலை தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர மத்திய அரசு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு முயற்சி மேற்கொண்டது. அப்போது ஆந்திர அரசின் எதிர்ப்பால் திட்டம் கைவிடப்பட்டது. ஆனாலும் மத்திய தொல்லியல்துறை கோயிலை 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலையை கருத்தில் கொண்டு முழுமையாக ஆய்வு செய்வதுடன், வரலாற்று தகவல்களை கூறும்  கல்வெட்டுக்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஆயிரங்கால் மண்டபம் கட்டினால்  மீண்டும் தமிழ் வந்துவிடுமோ என்ற அச்சம்
ஏழுமலையான் கோயில் எதிரே இருந்த ஆயிரங்கால் மண்டபம் சிற்பங்களுடன், தமிழ் கல்வெட்டுகள் நிறைந்த தூண்களுடனும், கற்களுடனும் இருந்தது. இக்கல்வெட்டுகள் அடங்கிய தூண்கள் ஆயிரங்கால் மண்டபம் இடிக்கப்பட்ட பிறகு கோ கர்ப்பம் எதிரே உள்ள பூங்காவில் போடப்பட்டுள்ளது. இந்த தூண்கள் தற்பொழுது புதர்களால் மூடப்பட்டுள்ளது. மீண்டும் ஆயிரங்கால் மண்டபம் கட்டுவதற்கு இந்த தூண்களையே பயன்படுத்த வேண்டும். அதனால் தமிழ் கல்வெட்டுகளுடன் உள்ள அத்தூண்களை தவிர்க்கவே ஆயிரங்கால் மண்டபத்தை கட்டும் திட்டத்தை தொடர்ந்து கிடப்பில் போட தேவஸ்தான அதிகாரிகள் திட்டமிட்டு வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.

தமிழில் பதவியேற்க அனுமதி மறுத்த தேவஸ்தான நிர்வாகம்
திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில் தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தின் சார்பில் பக்தர்களின் வருகை அதிகளவில் உள்ளதால், அந்த மாநிலத்திலிருந்து மாநில அரசின் சார்பில் ஒரு பிரதிநிதி அறங்காவலர் குழு உறுப்பினராக நியமிக்கப்படுவது வழக்கம். அவ்வாறு ஜெகன்மோகன் ரெட்டி அரசு பதவி ஏற்ற பிறகு தமிழகத்தின் சார்பில் ஐந்து பேர் நியமிக்கப்பட்டனர். இதில் பாஜக தரப்பில் அமித்ஷா பரிந்துரையின்பேரில் ஆடிட்டர் கிருஷ்ணமூர்த்தி, ஜெகன்மோகன்ரெட்டி தரப்பில் இந்தியா சிமென்ட் உரிமையாளர் சீனிவாசன், சேகர்ரெட்டி, தமிழக அரசின் சார்பில் உளுந்தூர்பேட்டை எம்எல்ஏ குமரகுரு, திமுக தலைவர் ஸ்டாலின் தரப்பில் நிஷித்தா முத்தவரப்பு ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

இதில் தமிழக அரசின் சார்பில் நியமிக்கப்பட்ட உளுந்தூர்பேட்டை எம்எல்ஏ குமரகுரு அறங்காவலர் குழு உறுப்பினராக பதவியேற்றபோது பதவிப்பிரமாணம் செய்து வைத்த கூடுதல் செயல் அலுவலர் தர்மாரெட்டியிடம் தமிழில் பதவி ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார். ஆனால் அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் கூடுதல் செயல் அலுவலர் தர்மாரெட்டி, தெலுங்கு அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே பதவி ஏற்க வேண்டும் என்று கூறியுள்ளார்.  நாடாளுமன்றத்திலும்,  மக்களவையிலும் கூட மக்களவை உறுப்பினர்கள் தமிழில் பதவி ஏற்றுக் கொள்கிறார்கள். ஏன் இங்கு பதவி ஏற்க கூடாது? என்று அவர் கேட்டார்.

அதற்கு முடியாது, இங்குள்ள நடைமுறை இது மட்டுமே. ஆங்கிலம் அல்லது தெலுங்கில் மட்டுமே பதவி ஏற்க வேண்டும் என தேவஸ்தான அதிகாரிகள் கூறிவிட்டனர். இதையடுத்து அவர் ஆங்கிலத்தில் பதவியேற்றுக்கொண்டார். அறங்காவலர் குழு உறுப்பினராக தமிழக அரசின் சார்பில் நியமிக்கப்பட்டாலும் தமிழுக்கு இடமில்லை என தேவஸ்தான அதிகாரிகள் கூறி இருப்பதாகவும் தினந்தோறும் ஏழுமலையானுக்கு நான்காயிரம் திவ்ய பிரபந்தம் ஜீயர்கள் மூலமாக தமிழில் படிக்கப்பட்டு வரும் நிலையில் தமிழில் பதவி ஏற்க கூடாது என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்து இருப்பது வருத்தத்தை அளிப்பதாக எம்.எல்.ஏ. குமரகுரு ஆதரவாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Tags : demolition ,CM Chandrababu ,Ezhumalayan ,Ezhumaliyan Temple ,Thirunal Mandal , demolished ,former Chandrababu, regime, Ezhumaliyan Temple ,
× RELATED NCERT பாடப்புத்தகங்களில், பாபர் மசூதி...