×

தேசிய நெடுஞ்சாலைகளில் வருகிறது மழைநீர் சேகரிப்பு திட்டம்: மேம்பாலங்கள், ‘சப் வே’களில் கட்டமைப்பு ஏற்படுத்தப்படும்

நாகர்கோவில்: மேம்பாலங்கள், ‘சப் வே’களில் உரிய கட்டமைப்புகளை ஏற்படுத்தி மழைநீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்த மாநிலங்களுக்கு மத்திய அரசின் சாலை போக்குவரத்து அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் 2001ம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு மழைநீர் சேகரிப்பு திட்டத்தை கொண்டு வந்தது. அத்துடன் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்தாத கட்டிடங்களுடைய மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு போன்றவை துண்டிக்கப்படும் எனவும் கூறப்பட்டது. ஆனால் அரசு கட்டிடங்களில் கூட மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தப்படுவது இல்லை. கனமழை பெய்யும்போது வீடுகளை வெள்ளம் சூழுகின்ற அவலம் பல பகுதிகளிலும் ஏற்படுகிறது. இந்தநிலையில் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை தேசிய நெடுஞ்சாலைகளில் செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக மாநில அரசுகள் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்தால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மிகப்பெரிய தேசிய நெடுஞ்சாலை நெட்வொர்க்கில் மழைக்காலங்களில் கிடைக்கின்ற தண்ணீரை சுத்திகரித்து மீண்டும் பயன்படுத்துவதுதான் இந்த திட்டம்.

நாடு முழுவதும் ஒரு ஆண்டுக்கு சராசரியாக 1100 மி.மீ மழை பெய்கிறது. ஒரு கி.மீ தேசிய நெடுஞ்சாலையில் ஒரு வருடத்திற்கு 61 லட்சத்திற்கு மேல் லிட்டர் தண்ணீர் பாய்ந்து வீணாகி வருவதாக தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் கருதுகிறது. தேசிய நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கட்டிடங்களில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்த ேவண்டும். மழைநீர் பாய்ந்தோடுகின்ற மேம்பாலங்கள், சப் வே, மெட்ரோ போன்றவற்றை மழைநீர் சேகரிக்க பயன்படுத்த வேண்டும். மழைநீரை சேகரிக்கவும், அவற்றை சுத்திகரிக்கவும் உரிய தொழில்நுட்பங்களை பயன்படுத்திக்கொள்ளலாம். மத்திய அரசின் சம்பந்தப்பட்ட துறைகளின் உதவிகளையும் இதற்காக நாடலாம்.திட்டத்தை செயல்படுத்த வசதியாக உள்ள இடங்களையும் தேர்வு செய்ய வேண்டும். இதுபோன்ற மழை நீர் சேகரிப்பு வசதியுள்ள கட்டிடங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்பது போன்ற உத்தரவுகள் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் இது முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. ஆண்டுதோறும் தண்ணீர் தட்டுப்பாடு பெரும் பிரச்னையாக எழுந்து வரும் நிலையில் தேசிய நெடுஞ்சாலைகளில் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை கண்டிப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகள்
இந்தியாவில் 66 ஆயிரத்து 590 கி.மீ தொலைவு சாலைகள் தேசிய நெடுஞ்சாலைகளாக இருக்கின்றன. தேசிய நெடுஞ்சாலை எண் 7 மிக அதிக நீளம் கொண்ட தேசிய நெடுஞ்சாலை ஆகும். இதன் நீளம் 2369 கி.மீ. உத்தரப் பிரதேசம், வாரணாசியில் தொடங்கி தமிழகத்தில் கன்னியாகுமரியுடன் இணைகிறது. இந்தியாவின் மிகக் குறைவான தொலைவைக் கொண்ட தேசிய நெடுஞ்சாலையாக தேசிய நெடுஞ்சாலை எண் 47A உள்ளது. கேரள மாநிலத்திலிருக்கும் எர்ணாகுளத்தைச் சேர்ந்த குண்டனூரையும் கொச்சி துறைமுகம் அமைந்துள்ள வெல்லிங்டன் தீவையும் இணைக்கிறது. இதன் நீளம் 6 கி.மீ ஆகும்.



Tags : bridges , national , Rainwater,construction, bridges ,subways
× RELATED கன்னியாகுமரி – காரோடு நான்கு...