×

உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அறிக்கை கலப்பட பால் விற்பனையில் முதலிடத்தில் தமிழகம்

* பொதுமக்கள் அதிர்ச்சி * உண்மையை விளக்க அரசுக்கு கோரிக்கை

கலப்பட பால் விற்பனையில் முதலிடத்தில் தமிழகம் உள்ளது என்ற  உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அறிக்கையை கண்டு தமிழக மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர். எனவே தமிழக அரசு இது தொடர்பான உண்மையை விளக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இந்தியா உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் வாழும் மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒன்றிப் போன உணவு பால் மற்றும் பால் பொருட்கள் ஆகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தினசரி உணவுக்கு அடுத்த படியாக பாலை தான் அதிகம் பேர் உணவாக உட்கொள்கின்றனர். இதைத் தவிர்த்து பால், வெண்ணெய், நெய், தயிர், இனிப்பு கோவா, பேரிச்சை கோவா, ரசகுல்லா, ஜாமூன், குல்பி, குலோப்ஜாமூன் போன்ற இனிப்பு வகைகள் என்று அனைத்து பொருட்களும் பொதுமக்களின் அன்றாட வகையில் ஒன்றிப்போனது ஆகும்.

இவ்வாறு பொதுமக்கள் குழந்தைள், முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உணவாக பயன்படுத்தும், பால் அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலமாக தமிழகம் உள்ளது. தமிழகத்தில் நாளொன்றுக்கு 206 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், நாளொன்றுக்கு 25 லட்சம் லிட்டர் பால் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. மொத்த பால் உற்பத்தியில் 51 சதவிகிதமான நாளொன்றுக்கு 105 லட்சம் லிட்டர் பால், அமைப்புசாரா பிரிவுகள் மூலமாகவும், 37 சதவிகிதமான 76 லட்சம் லிட்டர் பால், கூட்டுறவுகள் மற்றும் தனியார் பால் பண்ணைகள் போன்ற அமைப்பு சார்ந்தபிரிவுகள் மூலமாகவும் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.தமிழகத்தின் மொத்த பால் உற்பத்தியில் கூட்டுறவுகளின் பங்களிப்பு 18.50 சதவீதம் ஆகும். தமிழகத்தில் பால் கூட்டுறவு அமைப்புகளின் கீழ் உள்ள 12,585 கிராம அளவிலான தொடக்க பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களில் 20.30 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். தமிழகம், பால் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் நாளொன்றுக்கு 33.23 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து மாநில கூட்டுறவுகளில் தேசிய அளவில் நான்காவது இடம் வகிக்கிறது.

2010-11 ம் ஆண்டில் நாளொன்றுக்கு 20.67 லட்சம் லிட்டராக இருந்த பால் உற்பத்தி 2018 -19 ம் ஆண்டில் நாளொன்றுக்கு 33.23 லட்சம் லிட்டராக அதிகரித்துள்ளது. கடந்த 8 வருடங்களில் 61 சதவீதம் பால் உற்பத்தி அதிகரித்துள்ளது. மேலும் 2017-18ம் ஆண்டை ஒப்பிடும் போது 2018-19ம் ஆண்டில் பால் உற்பத்தி 13 சதவிகிதம் அதிகரித்துள்ளது. ஆவின் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் 2018 ம் ஆண்டு அக்டோபர் 29ம் தேதி 37.03 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர்த்து தமிழகம் முழுவதும் பல்வேறு தனியார் பால் நிறுவனங்களும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகம், கேரளா மற்றும் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கலப்பட பால் விற்பனை செய்யப்படுவதாக உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அறிக்கை வெளியிட்டிருப்பது. குறிப்பாக கலப்பட பால் விற்பனையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்று அதிர்ச்சி தகவலும் இந்த அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது, இந்தியாவில் நாளொன்றுக்கு சுமார் 155 மில்லியன் டன் பால் உற்பத்தியாகிறது. இவற்றில் சுமார் 6432 பால் மாதிரிகளை மட்டும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு இந்த அறிக்கை வெளியிட்டுள்ளதாக குற்றம்சாட்டுகின்றனர். முடிவில் பாலின் அளவை விட பூச்சிக்கொல்லிகளின் அளவுதான் அதிகமாக உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் அதில் கூறப்பட்டுள்து. மேலும் “அப்லாடாக்சின்” என்ற அசுத்தமும் அதிகளவில் கலந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதற்கு முன்பாக கடந்த 2012ம் ஆண்டு “பாலில் உயிருக்கு தீங்கிழைக்கும் ரசாயனங்கள் கலப்படம் செய்யப்படுகிறது அவற்றை தடுக்க வேண்டும்” என உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஒருவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் சார்பில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் கலப்படம் இல்லாத  பால் விற்பனை செய்யும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தில் இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் பீகார், மேற்கு வங்கம், ஒடிசா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு வட மாநிலங்களில் பார்மாலின், ஹைட்ரஜன் பெராக்சைடு, வெள்ளை பெயிண்ட், வார்னிஷ் உள்ளிட்ட உயிருக்கு தீங்கிழைக்கும் பல்வேறு ரசாயனங்கள் இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் இந்த அறிக்கைக்கு அப்படியே எதிர்மாறாக தற்போது வெளியிடப்பட்டுள்ள உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் ஆய்வு அறிக்கை உள்ளது. இந்த ஆய்வுக்கு தமிழ்நாட்டில் அதிக அளவு பால் மாதிரிகள் எடுத்து கொள்ளப்பட்டதாகவும், மற்ற மாநிலங்களில் குறைந்த அளவு பால் எடுத்து கொள்ளப்பட்டதாகவும் ஒரு கருத்து கூறப்படுகிறது.  அதன் அடிப்படையில் இந்த ஆய்வறிக்கை வெளியிட்டப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டுகின்றனர்.
இதுதொடர்பாக ஆவின் நிர்வாக இயக்குனர் காமராஜிடம் கேட்டபோது, ‘‘தமிழகத்தில் தனியார் பாலை விட ஆவின் பாலை தான் மக்கள் அதிகம் விரும்புவாங்கின்றனர். அவ்வாறு விற்பனை செய்யப்படும் ஆவின் பாலில் எந்தவித ரசாயன கலப்பும் இல்லை. விற்பனைக்கு செல்லும் பாலை அவ்வப்போது அதிகாரிகள் பரிசோதனை செய்து வருகின்றனர். இதுவரை எந்த வித கலப்படமும் இல்லை’’ என்றார்.

இந்நிலையில் தமிழகத்திற்கு அவப்பெயரை  ஏற்படுத்தும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ள உணவுப் பாதுகாப்பு மற்றும் தர  நிர்ணய ஆணையத்தின் ஆய்வறிக்கை குறித்து விரிவாக விசாரணை நடத்த வேண்டும்  என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் இதில் உண்மையான நிலைமை  ெவளிக் கொண்டு வந்து பொதுமக்களுக்கு தரமான பால் கிடைப்பதற்கு தேவையான  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  ேவண்டுகோள் விடுத்துள்ளனர்.


Tags : Tamilnadu , Food Safety ,Standards Commission, Tamilnadu ,milk sales
× RELATED வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னங்கள் பொருத்தும் பணி: கலெக்டர் ஆய்வு